வியாழன், 5 செப்டம்பர், 2013

மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது!



மனித சமூகத்தை ஒழுங்கு படுத்த எழுந்ததே மதம் அல்லது சமயம். மதம் என்றால் கொள்கை என்று பொருள். இது எனது மதம் என்றால் இது எனது கொள்கை என்று பொருள். இன்னொரு பொருளும் உண்டு. மதம் என்றால் வெறி. மதம் பிடித்த யானை என்றால் வெறிபிடித்த யானை என்று பொருள். இந்த இரண்டாவது பொருளிலேயே இன்றைய மதங்கள் காணப்படுகின்றன.

இலங்கைக்கு இன்னொரு பெயர் தருமதுவீபம். இங்கு உலகின் நான்கு முக்கிய மதங்கள் இருக்கின்றன. பவுத்தம், சைவம், கிறித்தவம், இஸ்லாம் ஆகியனவே அந்த நான்கு மதங்களாகும்.

இருந்தும் இலங்கையில் கள், களவு, காமம், கொலை இவற்றுக்குப் பஞ்சமே இல்லை. பவுத்த தேரர் கொலை செய்கிறார். பவுத்த தேரர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பவுத்த பிக்குகள் இளம் பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் செய்திகள் வருகின்றன.

இன்று இலங்கையில் இந்த நான்கு மதங்களும் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக பவுத்தமும் இஸ்லாமும் மோதிக் கொள்கின்றன. மசூதிகள் என அழைக்கப்படும் இஸ்லாமிய வழிபாட்டுப் பள்ளிகள் பவுத்தர்களால் தாக்கப்படுகின்றன. மசூதிகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு மஞ்சள் அங்கி அணிந்த தேரர்களே தலைமை தாங்குகிறார்கள்!

தம்புள்ள என்ற இடத்தில் ஒரு கட்டிடம் இருந்தது. அதனை முஸ்லிம்கள் மசூதியாகப் பயன்படுத்தினார்கள். அதனைப் பொறுத்துக் கொள்ளாத பவுத்தர்கள் அந்த மசூதியைத் தாக்கினார்கள். பவுத்த தேரர்களும் அதில் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு தம்புள்ள விகாரையின் முதன்மை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரர் தலைமை தாங்கினார். குறிப்பிட்ட மசூதி பவுத்த புனித பூமியாகப் அறிவிக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது என்ற காரணத்துக்காகவே அது தாக்கப்பட்டது. தம்புள்ள குன்றில் 2,300 ஆண்டு கால வரலாற்றையுடைய விகாரை இருக்கிறது. இது மிகவும் புனிதமான விகாரை. அய்நா கல்வி, சமூக மற்றும் கலாசார நிறுவனம் இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகப் பெயரிட்டுள்ளது.

குறிப்பிட்ட மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பவுத்த தேரர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை முஸ்லிம்கள் நிராகரித்துள்ளனர்.

சுமங்கள தேரரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "இலங்கை ஒரு பல்மத, பன்முக கலாசாரங்களைக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு அல்லவா? " இதற்கு சுமங்கள தேரரின் விடை "என்ன முட்டாள்த்தனமான கோட்பாடு பற்றிப் பேசுகிறீர்கள்? இந்த நாட்டில் 14 மில்லியன் பவுத்தர்கள் வாழ்கிறார்கள். எத்தனை முஸ்லிம்கள் இங்கு வாழ்கிறார்கள்?

தாய்லாந்திலும் மியன்மாரிலும் பவுத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவே அவற்றைப் பவுத்த நாடுகள் என்று அழைக்கிறோம். வத்திக்கனில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். எனவே நாங்கள் வத்திக்கானை ஒரு கத்தோலிக்க தேசம் என்று அழைக்கிறோம். இதே போல் மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்களின் பெரும்பான்மை உள்ளது. எனவே அவற்றை இஸ்லாமிய நாடுகள் என்று அழைக்கிறோம்."

ஒரு மசூதி இருப்பது எப்படி பவுத்தர்களுக்கு இடையூறாக இருக்க முடியும்? அவரவர் தத்தமது வழிபாட்டு இடங்களில் வழிபாடு நடத்திவிட்டுப் போவதுதானே?

மசூதிகள் தாக்கப்படுவது போல் கிறித்தவர்கள் வழிபாடு நடத்தும் ஆலயங்களும் தாக்கப்படுகின்றன. நாவல என்ற இடத்தில் ஒரு கிறித்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் பவுத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.

தாக்குபவர்கள் தங்களை சீருடை அணியாத காவல்துறை எனப் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி மசூதிகளும் ஆலயங்களும் தாக்கப்படும் போது காவல்துறை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறது. தாக்குதலைத் தடுக்கவோ தாக்கியவர்களைக் கைது செய்யவோ காவலர்கள் முன்வருவதில்லை! சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது காவல்துறையின் கடமை. அதைக் காவல்துறை செய்வதில்லை. சட்டத்தைக் கையில் எடுப்போரைக் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறது. இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் பவுத்தர்களால் தாக்கப்படுகிறார்கள். வங்கதேசத்தின் தென்பகுதியில் பவுத்தர்கள் முஸ்லிம்களால் தாக்கப்படுகிறார்கள். கொக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன. பெருமளவிலான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளன.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற முறையில் கணக்குத் தீர்க்கப்படுகிறது. உள்ளூரில் பவுத்தர் ஒருவர் அவரது முகநூலில் அவதூறான படம் ஒன்றை வெளியிட்டு இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்தே அந்தக் கிராமங்களில் வன்முறைகள் வெடித்தன. பவுத்த விகாரைகள் தீக்கிரையாகின.

ஒரு மக்களாட்சி நாட்டில் மத சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அதில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடு கிடையாது. இலங்கையில் பவுத்த மதத்துக்கு யாப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கலாம். பவுத்த மதத்தைப் பேணிக்காப்பது அரசின் கடமையாக இருக்கலாம். ஆனால் ஏனைய சமயத்தவரும் தங்கள் தங்கள் மதத்தைக் கடைப்பிடிக்க சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 2,000 க்கும் மேற்பட்ட பவுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. ஜெர்மனியில் 3,000 - 4,000 பவுத்த நிறுவனங்கள் உள்ளன. இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பவுத்த நிறுவனங்கள் உள்ளன. இவற்றை கிறித்தவர்கள் இடிக்க வெளிக்கிட்டால் நிலைமை எப்படி இருக்கும்?

பவுத்தத்தின் சிறப்புகளில் ஒன்று அதில் கடவுள் இல்லை. ஆன்ம கோட்பாட்டுக்கும் இடம் இல்லை. புத்தர் தன்னை ஒரு ஆசிரியராகவே கருதினார். எந்த அற்புதத்தையும் அவர் செய்து காட்டியதில்லை. புத்தர் தனது தந்தையை சாதாரண மனிதர் என்றும், தாயை சாதாரண பெண்மணி என்றும் கூறியுள்ளார். "நான் கூறியபவை உங்கள் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார். ஆனால் காலப் போக்கில் பவுத்தம் மாற்றமடைந்து போனது. இன்று புத்தர் கடவுளாக வழிபடப்படுகிறார்!

இன்று இலங்கையில் பவுத்த மதம் கருணை, உயிர்களிடத்தில் அன்பு போன்றவற்றைப் பரப்புவதற்குப் பதில் அது ஆட்சியைப் பிடிப்பதற்கும் பிடித்த பின்னர் அதனைத் தக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்காகவோ நாட்டின் நலனுக்காகவோ பவுத்தம் பயன்படுத்தப்படவில்லை. பயன்படவில்லை.

மதத்தின் பெயரால் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் குருதி சிந்தப்படுகிறது. இராக், சிரியா, யேமன், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் ஒரே மதத்தின் பெயரால் ஒரே அல்லாவின் பெயரால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்லுகிறார்கள்.

இஸ்லாம் மதம் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைப் பின்பற்றுவோர் உலகில் 1.62 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) ஆகும். மக்கள் தொகையில் இது 23 விழுக்காடாகும். உலகில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 49 ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை அந்த விபரத்தை தருகிறது.

ஒரு பில்லியன் (62 விழுக்காடு) உலக முஸ்லிம்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாழ்கிறார்கள். அரபு நாடுகளில் 20 விழுக்காடு. மத்திய கிழக்கில் அரபு அல்லாத துருக்கி மற்றும் இரான் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள். ஆபிரிக்காவில் நைசீரியா மற்றும் எகிப்து மக்கள் தொகையில் பெரிய நாடுகள். மேலும் 300 மில்லியன் முஸ்லிம்கள், முஸ்லிம் பெரும்பான்மை அல்லாத நாடுகளில் வாழ்கிறார்கள். இது உலகளவில் அய்ந்தில் ஒரு பங்காகும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் உலகில் மூன்றாவது தொகை முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். சிரியாவை விட சீனாவில் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். யோடான் மற்றும் லிபியாவை விட உருசியாவில் அதிகளவு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

முஸ்லிம்களில் சுன்னி பிரிவினர் 87 - 90 விழுக்காடு. ஷியா பிரிவினர் 10 - 13 விழுக்காடு. இவர்கள் இராக், இரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் அதிகளவில் உள்ளார்கள். லெபனான் நாட்டில் ஷியாக்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் சுன்னி - ஷியா பிரிவுகளே முக்கியமானது. ஷியா இஸ்லாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இஸ்லாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா (Shi'a) என்ற சொல் �அலியைப் பின்பற்றுவோர்� என அரபு மொழியில் பொருள் படும். மொகமது நபி இறந்த போது வாரிசு சண்டை எழுந்தது. ஷியாக்கள் மொகமது நபியின் மருமகனான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று வாதிட்டார்கள்.

இராக், இரான், சிரியா இந்த மூன்று நாடுகளிலும் ஷியா பிரிவினரே பெரும்பான்மை. எனவே அந்த நாடுகளில் ஷியாக்கள் சிறுபான்மை சுன்னிகளோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சிய சுன்னி நாடுகளான அரேபியா, குவைத்து சுன்னிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

இந்திய முஸ்லிம்களில் 90 விழுக்காடு சுன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து விழுக்காடு ஷியா முஸ்லிம்கள். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான். சுன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

சுன்னிகளும் ஷியாக்களும் அல்லா ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் மொகமது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லாப் பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன.

மேலே குறிப்பிட்டவாறு மொகமது நபிகளுக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை நியமிப்பது என்பதில் வேறுபாடு ஏற்பட்ட போது மொகமது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபூபக்கரை முதல் கலீபாவாக சுன்னிகள் ஏற்றனர். ஷியா பிரிவினரோ மொகமது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே வாரிசு என்றனர். இதில் தொடங்கிய சண்டை இன்றுவரை நீடிக்கிறது.

தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வேறுபாடு காணப்படுகிறது. "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள் "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன்! இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. மொகமது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர் அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.

தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். அய்ந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் தலை பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சுன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

ஜகாத் தமது வருவாயில் இரண்டரை விழுக்காட்டை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை ஆகும். பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை விழுக்காடு ஜக்காத்துடன் மொத்த ஆண்டு சேமிப்பில் 20 விழுக்காட்டை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

மொஹரம் பண்டிகை சுன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும். ஷியாக்கள் மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். இராக்கில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் அல்லது சவுக்கால் ஓங்கி அடித்தபடி தங்களை வருத்திக் கொண்டு வீதிகளில் ஊர்வலம் செல்வார்கள்.

இஸ்லாம் என்றால் அடிபணிதல் என்று பொருள். அடிபணிதல் என்றால் என்ன? இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும்,அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும் தொழுகையை நிலைநிறுத்துவதும் கடமையான 'ஸக்காத்' தை வழங்கிவருவதும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும். என்பது மொகமது நபிகளின் அறிவுரையாகும்.

ஏக இறைவனின் வார்த்தைகளை ஏற்று, அதற்கு அடிபணிந்து நடப்பவனே முஸ்லிம் ஆவான். பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான். இஸ்லாத்தின் சாராம்சம் முழுவதையும் ஒரே வரியில் சுருக்கி விடலாம். அது என்ன? "படைத்தவனை வணங்கு படைக்கப்பட்டவற்றை வணங்காதே" என்பதே அது.

"இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்." (குர்'ஆன் 41:37)

இஸ்லாம் சகோதரத்துவத்தை (Brotherhood of Islam) தீவிரமாக வற்புறுத்தும் மதம். ஆனால் அதற்கு எதிரான போக்கே நிலவுகிறது.

அதே போல் பவுத்தம் அஹிம்சையைப் போதிக்கிறது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணல், எல்லா உயிர்களிடத்தும் அன்பு, எவ்வுயிர்க்கு ஆயினும் இரக்கம் என்பது புத்தரின் போதனை ஆகும்.

கிறித்து மதம் உன்னைப் போல் உன் அயலானை நேசி எனப் போதிக்கிறது.

இந்து மதம் அன்பே சிவம், அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் என்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறார்கள் சித்தர்கள்.

இருந்தும் நடைமுறையில் மதங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்கின்றன. மதம் என்ற பெயரில் குருதி சிந்தப்படுகிறது. இராக்கில் மட்டும் இந்த ஆண்டில் (2013) வெடிகுண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு 4,137 பேர் பலியாகியுள்ளார்கள், 9,865 பேர் காயப்பட்டுள்ளார்கள்!

இன்னும் ஒன்று. மதங்கள் மதமாற்றம் மூலம் தத்தமது எண்ணிக்கையைப் பெருக்கப் பார்க்கின்றன. தீவிர அடிப்படை முஸ்லிம்வாதிகள் உலகம் முழுதும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த மதச் சண்டைகளைப் பார்க்கும் போது உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் இருப்பது போலத் தோன்றுகிறது. அந்தக் கடவுளர் தமக்குள் அடிபட்டுக் கொள்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது. இதனைக் கண்ட வள்ளலார்,

''சாதியிலே, மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து விணே அழிதல் அழகலவே ''

என வருந்துகிறார். தெய்வம் பலபல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் என்கிறார் மகாகவி பாரதியார்.

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக