புதன், 11 செப்டம்பர், 2013

மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை





புதிய மாணவ, மாணவிகளை ஹிரிகட்டுவ ஆற்றின் ஓரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்ததாக அடையாளம் காணப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேருக்கும், நான்கு மாணவிகளுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


சிங்கராஜ, ஆரிய திலக்க விடுதியில் புதிய மாணவ, மாணவியரின் ஆடைகளைக் களைந்து, மலசல கூடத்தில் தரையில் புரட்டி மோசமாக இந்த சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசி மலசலகூடத்தில் ஊர்ந்து செல்லுமாறு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.


இக்கொடிய பகிடிவதை தொடர்பாக புதிய மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் உபவேந்தரோ, நிர்வாகமோ தீர்வை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சரிடம் நேரில் இதுபற்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உடன் விசாரணை நடத்தி, குற்றமிழைத்தோரைப் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையை மேற்கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மாணவர்கள் மூவர் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி வீடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



இப் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு வாரங்களாக மோசமான வகையில் பகிடிவதை காணப்படுகிறது. இதனால் புதிய மாணவர்கள் விரக்தி கொண்டுள்ளனர். முன்னர் இப்பல்கலைக்கழகத்தில் மோசமான பகிடிவதை காணப்பட்டது கடந்த பல வருடங்களாக தண்டனை விதிக்கப்பட்டதால் பகிடிவதைச் சம்பவங்கள் குறைந்தன.



பல்கலைக்கழகத்தை இந்த நிலைமைக்கு கொண்டுவர 300 மாணவர்களுக்கு தண்டனை வழங்க நேரிட்டதாக உயர் கல்வி அமைச்சின் மாணவர் நடவடிக்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் கீர்த்தி மாவெல்லகே தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக