வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை


இன்று உலக சிக்கன தினம்

வறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம்.
இதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு சங்கிலித் தொடர் போன்ற கூட்டு அமைப்பு என்றால் மிகையாகாது.

1924 ம் ஆண்டு மிலானில் முதலாவது சர்வதேச சிக்கன மகாநாட்டின் முடிவில் உலக சிக்கன தினம் முதன்முதலாக பிரகனடம் செய்யப்பட்டது.

சிக்கன மகாநாட்டு தீர்மானங்களில் உலக சிக்கன தினம் உலகம் முழுவதிலும் சேமிப்பை ஊக்குவிக்க ஒதுக்கப்பட்ட விசேட தினமாக கணிக்கப்பட வேண்டுமென அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் வங்கிகள் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சேமிப்பை ஊக்கப்படுத்த பல உத்திகளை காலத்திற்கு ஏற்புடைய கவர்ச்சிகரமான முறையில் மேற்கொண்டு வருகின்றது.

உலகில் வங்கி முறை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் வறுமை நிலையை களையும் பொருட்டு வங்கி முறையிலும் குறிப் பிடத்தக்க மாற்றங்களையும் வங்கி செய்து வந்திருக்கின்றது.

குறைந்த வரு மானம் பெறுவோரை ஒழுங்காக நிதி யியல் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு கொள்ள வைத்து அவர்களை சிறந்த முறையில் விழிப்பூட்டுவதன் மூலம் பணம் சேமித்தல், கடன் பெற்றுக் கொள்ளல், கடனை மீளச் செலுத்துதல் உட்பட அனைத்து விடயங்களின் ஊடாகவும் மக்களை சிறந்த நற்பிரஜை களாக்குவதே மத்திய வங்கி அதன் பின் புலத்தில் வர்த்தக வங்கிகள் செயற் படுகின்றன.

ஆதிநாளில் மனிதன் எதிர்காலச் சிந்தனை நல்வாழ்வு மனித இன விருத்தி எவையுமின்றி காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்து வந்தான் இதன் பின்னர் மதப் போதனைகள் வலுப்பெற்றது.

மதங்களினால் மனித இனம் ஒன்று சேர்க்கப்பட்டது. ஒன்று சேர்க்கப்பட்ட இனத்திற்கு உணவு தேவை ஏற்பட விவசாய செய்கையில் நாட்டம் ஏற்பட்டது.

முதலில் தான் சார்ந்த உணவு உற்பத்தியே முதன்மை பெற்றுள்ளது. பின்னாளில் இது பொருட்கள் பண்டங்கள் சேமிப்பாக மாற்றம் கண்டிருக்கின்றது. இதன் ஒரு அங்கமே இன்றும் ஒரு பிடி அரிசி சேமிப்பு எனலாம்.

இலங்கையில் விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட மன்னனான பராக்கிரமபாகு வானிலிருந்து விழும் ஒவ்வொரு துளி நீரையும் கடலில் சங்கமிக்க கூடாது எனக்கூறி விவசாயக் குளங்களை கட்டு வித்தான். இதன் பலனாக பராக்கிரம சமுத்திரம் உட்பட நாட்டில் ஏராளமான குளங்கள் தோற்றம் கண்டது. டி.எஸ். சேனநாயக்காவின் கனவான சேனநாயக்க சமுத்திரத்தினால் கிழக்கு மாகாணம் விவசாய மாகாணமாக திகழ்கின்றது.

சேமிப்பின் ஆரம்பம் என்பது விவசாய த்தை அடிப்படையாகவே கொண்டிருக்கி ன்றது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ மேவர்ண மன்னன் கல்வெட்டில் தானியங்களான உழுந்து, பயறு, இறுங்கு, குரக்கன் போன்றவைகள் சேமிப்பு செய்யப்பட்டு அசாதாரண காலங்களில் மக்களுக்கு உணவுக்காக பங்கிட்டு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

உலகளவில் 1611 ல் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டவரான ஹியூக்டெவர்ரே என்பரே மக்களின் சேமிப்பு பற்றிய எண்ணக்கருவை எழுத்துருவில் முன்வைத்தவராக கருதப்படுகின்றார். சேமிப்பு வங்கியானது ஜேர்மனியிலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் 1810 ல் ஹொன்றிடியுக்கன் சேமிப்பு நிறுவினம் ஒன்றை தாபித்து மக்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அந்தந்த நாடுகளின் அரச முதலீடுகளுக்கும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் நிதி தேவைப்பட்டது. இலங்கையிலும் இதே நிலையே காணப்பட்டது.

இந்த காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பூத்த புத்திஜீவிகளான ஆளுநர் சேர் நாபர் வில்மட் ஹோட்டின் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்கள் இணைந்து சேமிப்பு வங்கி ஒன்றை நிறுவினர்.

இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியானது சுதந்திரமடைவதற்கு முன்னராக அதாவது 1832.08.06ம் திகதி உருவாக்கப்பட்டன. இது கொழும்பில் வாழ்ந்த சில உயர்மட்ட பிரபுக்களை கொண்டு முன்னணி வர்த்தகர்களைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க தங்கப் பவுண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாடு பிரித்தானியர்களின் பிடியில் இருந்தமையினால் இந்த சேமிப்பு வங்கியின் பணிகள் விஸ்தரிக்கப்பட வில்லை என்பதுடன் இதன் வளர்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கவில்லை.

இதை உணர்ந்த சேர். பொன். இராமநாதன் 1885.04 ல் அஞ்சலக சேமிப்பு முறை ஒன்றினை ஆரம்பித்தார். இது 1938 ல் அஞ்சலக தலைமையகத்தின் கீழ் சேமிப்பு பத்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 1969.08.31ல் காலஞ்சென்ற நிதியமைச்சர் யூ.பி. வன்னிநாயக்க தேசிய சேமிப்பு வங்கி மசோதாவை பாராளுமன்றத்தில் முன்மொழிந்த போதிலும் அவரால் அதை சட்டமாக்க முடியவில்லை.

உலகின் முதல் பெண் பிரதமரான அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தில் அரசில் நிதி அமைச்சராக விருந்த என்.எம். பெரேரா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971 ம் ஆண்டு சேமிப்பு வங்கி, சேமிப்பு சான்றிதழ் நிதியம், தபாலக சேமிப்பு வங்கி என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.06.16 ல் தேசிய சேமிப்பு வங்கி என உருவகப்படுத்தப்பட்டது.

ஆனால் சேமிப்பு என்ற பெயரில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமையும் புகழும் தபாலகத்திற்கே உரியது என்றால் மிகையாகாது மக்களுடன் உறவாடி சேமிப்பை ஊக்கப்படுத்திய பெரும் பொறுப்பு தபாலகத்தையே சேரும்.

இன்று நாட்டில் பல்வேறு வர்த்தக வங்கிகள் மக்களின் காலடிகளுக்கு சென்று சேவைகளை வழங்கு வருகின்றது. இவை தவிர மக்களின் கூட்டுறவின் மூலமாக பல கூட்டுறவு வங்கிகள் மக்களின் வறுமையை போக்கவும் சேமிப்பை மேம்படுத்தவும் களத்தில் உள்ளது.

ஆனால் மக்களின் வறுமை நிலையை ஒழிக்க வங்கிகள் சேவையாற்ற எண்ணியுள்ள போதிலும் மக்கள் அதை தவறாகப் பயன்படுத்தி பல இக்கட்டான சூழ்நிலைக்கும் இன்று உட்பட்டுள்ளனர்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல் ஒரு செயற்பாட்டிற்கும் இரு நிலைகள் உண்டு. இதில் சரியான நிலையை நாம் கைக்கொள்ளல் அவசிம். சிக்கனம் சேமிப்பு என்பது கஞ்சத்தனம் என்பதாக அர்த்தக் கொள்ளக்கூடாது. தனி மனித உழைப்பில் உணவு, உடை, பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் போன்றவற்றிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கின்றதோ அதே அளவு சிக்கனத்திற்கும் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக