திங்கள், 30 ஜூன், 2014

தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா????


இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் மலையக பிரதேசங்களில்
காணப்படுகின்ற அடித்தள தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தாய் மொழியில் அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடைமுறையில் பல தடைகள் காணப்படுவதாக அங்கலாய்க்கின்றனர்.

தேசியம் எனும் பொழுது தம்மை தாங்களே ஆளத் தகுதியுள்ளவர்களின் கூட்டுணர்வை குறிக்கின்றது. பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக் கலாசாரம் என்பன இந்த கூட்டுணர்வின் பிரதான அங்கங்களாகும். இவையே ஒரு இனத்தின் அடையாளங்களாகும். இந்த இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தேசியத்தை நோக்கிய பயணத்தில் பாரிய தடையாக கணிக்கப்படுகின்றது. திட்டமிட்டு இப் பொது மொழியானது புறக்கணிக்கப்படுகின்றது.

இலங்கையில் 1833ஆம் ஆண்டு நடைபெற்ற மொழி பிரச்சினை தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையில் ஏற்படவில்லை. மாறாக  ஆங்கிலத்தில் அரச கருமங்கள் நடைபெறுவதற்கு எதிராக தமிழ், சிங்கள மக்கள் குரல் கொடுத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்பு 1956ஆம் ஆண்டு சிங்கள மொழி அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் சில அரசியல் காரணங்களினால் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே அன்றிலிருந்து இன்றுவரையிலும் நமது நாட்டில் இனங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு மொழி ஒரு பிரதான காரணமாக இருந்து வந்துள்ளது.

1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருந்தன. 1978ஆம் ஆண்டு இலங்கை சோசலிச குடியரசு அரசியல் அமைப்பிலே, தமிழ் மொழி தேசிய மொழியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் நிர்வாக மொழி குறித்து சொல்லப்படவில்லை. அதேநேரம் 16ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தில் தமிழ் மொழி நிர்வாக மொழியாகவும், வழக்காறு மன்றங்களுக்கான பயன்பாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நடைமுறையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய ஏனைய பிரதேசங்களில் தமிழ் மொழி அமுலாக்கத்தின் நடைமுறை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால், இலங்கை சனத்தொகையில் 14 வீதமான தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். கடந்த காலங்களில் ஜனாதிபதி அவர்களால் 29 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மலையகத் தமிழர்கள் வாழக்கூடிய பிரதேசங்களாக இருக்கின்றன.

குறிப்பாக 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நுவரெலிய, வலப்பனை மற்றும் பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹல்துமுல்ல, அப்புத்தளை, ஹாலி எல, மீகஹகிவுல, பசறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2001ஆம் ஆண்டு கொழும்பு மத்தி, திம்பிரிகஸயா பிரதேச செயலாளர் பிரிவுகளும், 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலின் படி பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகல, வெலிமட, சொரணந்தொட, களுத்துறை மாவட்டத்தில் பேருவளையும், கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தொட, பன்வில, பஸ்பாகே கோறளை, உடபலாத்த மற்றும் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டிய,  முந்தல், புத்தளம், வணாத்தவில்லு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் இருமொழி நிர்வாக அலகுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறப்பட்ட பிரதேசங்களில் நடைமுறையில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது மந்தகதியில் அல்லது இல்லாமலே காணப்படுகின்றது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் தமிழில் கடமையாற்றுவதற்கான பணியாளர்கள் தொடர்ந்தும்   பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றனர். இதன் காரணமாக பாமர தோட்டத் தொழிலாளர்கள் பிரதேச செயலகம், கிராம சேவகர்கள், பொலிஸ் நிலையகங்கள் போன்ற பல அரச நிறுவனங்களுடன் தங்கள் தாய்மொழியில் தொடர்பு கொள்வதற்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் தடைகள் காணப்படுகின்றன. குறிப்பாக பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தமிழில் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல தசாப்தங்களாகவே பல்வேறு தவறுகள் மலையக சமூகத்தில் இடம்பெறுகின்றமையை நாம் அறிவோம்.

இன்றைய கால சூழ்நிலையில் சிறுபான்மை மக்கள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தாக்கப்படுகின்றனர். கருத்தியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அம்மக்கள் பெரும்பான்மை விஷமிகளால் மடக்கப்படுகின்றனர். தமிழ் மொழிக்கு வந்திருக்கும் இழுக்கானது அவர்கள் சிறுபான்மை மக்களை அடக்க எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆயுதமே. 


ஒரு இனத்தை தேசிய மொழியாக பிரகடணப்படுத்த அங்கு கட்டாயம் பொது மொழி ஒன்று காணப்பட வேண்டும். தாம் தமிழ் மொழி பேசும் இனம் என எம்மை நாம் மார் தட்டிக் கொண்டாலும், உண்மையில் அது ஒடுக்கப்பட்டு வருவதே உண்மை. இது எமது தேசியம் எனும் கனவுக்கு பாரிய தடையே.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.

அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமலாக்கலுக்காக செயற்படுகின்றன.

மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.

இந்த மும்மொழிக் கொள்கையின் நோக்கம் பற்றி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவிக்கின்றார்.

'ஆங்கில மொழி மூலம் மக்களிடையே ஆங்கிலத் திறமைகளை வளர்ப்பதும், சிங்கள- தமிழ் மொழி பெயர்ப்புகள் மூலம் இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதும் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம்' என்றார்.

இலங்கையில் பிரதான இரண்டு மொழிகளான சிங்களமும் தமிழும் அரசியலமைப்பின்படி அரசகரும மொழிகள். ஆங்கில மொழி இணைப்பு மொழி என்ற நிலையில் உள்ளது.

'இணைப்பு மொழியான ஆங்கில மொழியையும், அரசியலமைப்பு ரீதியாக அல்லாமல்- நடைமுறை ரீதியில் அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது' என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

நாட்டின் சகல அரச நிறுவன கட்டடங்களிலும் பெயர்ப்பலகைகளும் ஆவணங்களும் மூன்று மொழிகளிலும் அமைய வேண்டும் என்பது தான் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்ட பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், அரசின் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தமிழ்பேசும் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அரச கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் எழுத்து மற்றும் அர்த்தப் பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அரச பேருந்தொன்றில் 'கர்ப்பிணித் தாய்மார்களுக்காக' என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரியாக எழுதப்பட்டிருக்க தமிழில் மட்டும் 'கர்ப்பிணி நாய்மார்களுக்காக' என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றமை பற்றி அண்மையில் உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவ் எழுத்துப் பிழை தொடர்பில் குறித்த ஒரு அதிகாரியை விரல் நீட்டி கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை இன்று காணப்படுகின்றது. பாராளுமன்ற பெயர் பலகையிலும் கூட எழுத்து பிழை இருந்தமை தொடர்பில் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்ட உடன் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொறுப்பான ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொருவர் மீது குற்றத்தை சுமத்துவதாலேயே அவர்கள் மீது சரியாக விரல் நீட்ட முடியாத நிலை காணப்படுகின்றது. இறுதியில் இதன் பழியை; அதற்கு வர்ணம் அடித்த நபரே ஏற்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கூறி இருப்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

எனவே உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் உரிமைகள் மீறப்படுகின்றபோது அவற்றுக்கு எதிராக சட்டரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்களை தயார்படுத்தவேண்டும். யாருக்கு உரிமைகள் மீறப்படுகின்றனவோ அவர்கள் அதனை உணர்ந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு உறுதியுடன் முன்னெடுப்புகளை மேற்கொள்ள முயல்வது அவசியமாகும். அதற்கான மேலதிக முயற்சிகளையும், உதவிகளையும் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும்  மேற்கொள்வதும் இன்றியமையாததாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக