சனி, 12 ஜூலை, 2014

ஊவா மாகாண சபை தேர்தலில் சிறுபான்மையின் நிலை ஓர் ஆய்வு!


ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளதால் அது விரைவில் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் அண்மித்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஊவா மாகாண சபையின் ஆரம்ப காலங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் ஆறாக அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் அடுத்து வந்த மாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து தற்போது மூன்று பிரதிநிதித்துவங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊவா தமிழ் வேட்பாளர்களிடையே நிலவும் முரண்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதால் இருக்கும் மூன்று பிரதிநிதித்துவங்களையாவது தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகங்களும் ஏற்படவே செய்கின்றன. தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்து செல்லுமானால் மாகாணத்தின் தமிழ் மக்கள் பாதிப்படைவார்கள்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் புரிந்துணர்வுடனும் சமூக நோக்குடனும் செயற்பட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். இந்த வேட்பாளர்கள் அனைவரும் மலையக தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தல் களத்தில் இறங்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமேயானால் அது சமூக மேம்பாட்டை முன்னிலைப்படுத்தியதாக அமையும்.

நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக ஆகக்கூடுதலான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாக பதுளையே உள்ளது. இம்மாவட்டத் தில் ஒரு இலட்சத்து நாற்பத்திரெண்டாயிரத்து பதின்மூன்று தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகமாகும். ஆனாலும் இவ் வாக்காளர்களின் அரைவாசிப்பேர் வாக்களிக்கவே செய்வர்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் 6,09,966 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ் வாக்காளர்கள் 1,46,702 பேரும், முஸ்லிம் வாக்காளர்கள் நாற்பத்தேழாயிரத்து ஏழு பேரும் உள்ளடங்குவர்.

பதுளையில் 54,327 பேரும், பசறையில் 61,933 பேரும், ஹாலி எலையில் 68,278 பேரும், பண்டாரவளையில் 82,025 பேரும், அப்புத்தளையில் 64,135 பேரும், வெளிமடையில் 73,308 பேரும், ஊவா - பரணகமையில் 61,925 பேரும், விய லுவையில் 52,648 பேரும், மகியங்கனையில் 93,387 பேரு மாக, பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளி லும் மொத்தமாக 60,9966 வாக்களிக்கத் தகுதி பெற்றுள் ளனர். இப்புள்ளி விபரம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆந் திகதி பதுளை மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால், இறுதியாக கணக்கெடுக்கப்பட்டதாகும்.

1988ஆம் ஆண்டு தொடக்கம் இருபத்து ஐந்து வருட காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பின்வருமாறு:

முதல் மாகாண சபை (1988) இல் அமைச்சர் எம்.சுப்பையா மற்றும் எம்.சச்சிதானந்தன், கே. வேலாயுதம், ஏ.எச்.எம்.சித்தீக் ஆகியோர் மாகாணசபை உறுப்பினர்களாக இருந்தனர்.

இரண்டாவது மாகாண சபை (1993) எம்.சுப்பையா எம்.சச்சி தானந்தன், சிவம் லோகநாதன், கே.வேலாயுதம் ஆகியோரும், மூன்றாவது மாகாணசபையில் (1999) கே.வேலாயுதம், வேலு சாமி குமாரகுருபரன், எம்.எச்.எம்.முபாரக், ஏ.சி.அமீர் மொகமத், வீரன் சென்னன், கே. விஸ்வநாதன் ஆகியோரும், நான்காவது மாகாண சபையில் (2004) ஆம் ஆண்டு கே.விஸ்வநாதன், மதார் சாய்பு, பொன்னுசாமி பூமி நாதன் கே. வேலாயுதம், அ.அரவிந்தகுமார், அமீர் மொகமத், எம்.லோகநாதன் ஆகியோர் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தனர்.

ஐந்தாவது மாகாண சபையில் (2009) மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் கே.வேலாயுதம், அ.அரவிந் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் பிரகாரம் தமிழ் பிரதிநிதித்துவங்கள் வெகுவாகக் குறைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதேபோன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் ஐந்தாவது மாகாண சபை வரையான காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கே. வேலாயுதம் தொடர்ந்தும் தமது இருப்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் நான்காவது, ஐந்தாவது மாகாண சபைகளில் மலையக மக்கள் முன்னணி சார்பாக அ.அரவிந்குமார் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்து வந்துள்ளார். 

ஆனால் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவங்கள் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தில் ஆரம்பித்து 3ஆம், 4ஆம் மாகாண சபைகளில் இரண்டு பிரதி நிதித்துவங்களாக அதிகரிக்கப்பட்டு, ஐந்தாவது மாகாண சபையில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இடம்பெற வில்லை. ஆறாவது மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்தும் வகையில் ஆக்கபூர்வ செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடையே வாக்குகள் சிதறாமல், ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவார்களேயானால் இரு பிரதி நிதித்துவங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

சாரம்சமாக பதுளை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நாற்பத்தாயிரத்து எழுநூற்று இரண்டு பேர் தமிழ் வாக்காளர்கள் இருந்தும். தமிழர் பிரதிநிதித்துவங்களில் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதை காண முடிகின்றது.

சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய எம்மவர்கள் தேர்தலில் களம் இறங்குவது, தனித்துவம் பேசி வாக்குகளை சிதறடிப்பது, ஒப்பந்தங்கள் அடிப்படையில் தமிழர் வாக்குகளை வீணடிப்பது, முரண்பாடுகளை தோற்றுவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது போன்ற இன்னோரன்ன செயல்பாடுகள் தமிழர் பிரதிநிதித்துவங்களின் பின்னடைவிற்கான காரணங்களாகும். சமூகத்தின் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுவார்களானால் சமூகத்தின் வாக்குகள் கிரமமாகவும், முறையாகவும், உணர்வுபூர்வமாகவும் அவர்களை சென்றடையுமென்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையில தான்; இலங்கையின் ஊவா மாகாண மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்களவர்கள் அதிகமாக வாழும் மொனராகலை மாவட்டத்துக்கு அந்த எண்ணிக்கை சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து தமது மனுவென்றைக் கையளித்துள்ளனர்.

பெருந்தோட்ட தமிழர்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற அச்சத்திலேயே குறைந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் பிரதிநிதிகளாக வந்துவிடக்கூடாது என்று அடிப்படையில் இந்தக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியும் மலையக தமிழ் தலைவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனினும் இதனை தேர்தல்கள் ஆணையாளர் இன்னும் உறுதி செய்யவில்லை. அவ்வாறு பதுளையில் உள்ள மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை மொனராகலைக்கு மாற்றப்பட்டதாக எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாரான சூழ்நிலையில் ஒரு வேளை பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அங்கு செறிவாக வாழும் தமிழர்களின் நிலைமை என்ன?. கிடைத்த ஓரிரு சலுகைகளும் கிடைக்காது போகும். மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். 

இன்று நாட்டில் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுகின்றனர். வடக்கில் ஒருபுறம் தமிழ் மக்கள் மீள முடியாத சோகத்தில் இருக்கின்றனர். கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது சொந்த நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு அள்ளல் படுகின்றனர்.

அண்மைக்காலமாக நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மை இனத்தவர்களால் திட்டமிடப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இதனை அளுத்கம, தர்கா நகர், பேருவளை மட்டும் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் தெளிவாக பறைசாற்றுகின்றன. பொதுபல சேனா எனும் ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான யெமன் தொழிற்பட்டு கொண்டிருக்கின்றான்.

இந்த வரிசையில் மலையக தமிழர்களும் தமது பங்குக்கு பெரும்பான்மை இனத்தவர்களால் நசுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வடாவடித்தனங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே செறிவாக காணப்பட்டது. 

இன்று அது ஊவா மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் பதுளை மாவட்டத்தில் வசிக்கம் தமிழ் மக்களை இலக்காக கொண்டு செயற் பட ஆரம்பித்துள்ளது. எனவே ஊவா மாகாண தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

மலையக அரசியல் தலைமைகளை நம்பி காலம் கடந்து விட்டது. தமது சுய நலத்துக்காக பொது மக்களை விற்கும் அரசியல் தலைமைகளே இன்று எங்கும் வியாபித்து காணப்படுகின்றது. எப்பொழுதும் மக்களை காணும் போது, தான் சமூகத் தொண்டனாகவே இருப்பேன் என கதைக் கூறிவிட்டு மறுபுறம் சென்று சுய நல அரசியல் செய்யும் மகா ஹிரோக்களே இன்றைய அரசியல் தலைமைகள்.

எனவே ஊவா மாகாண மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இன்று சமூகத்தின் விடிவுக்காகவே செயற்படும் சமூக நல அமைப்புகளை பெரிதாக சார்ந்திருக்கின்றது. இளைய சமூகம் எமது நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். எவ்வேளையிலும் புத்தி கூர்மையுடன் சிந்திக்க வேண்டும். நமது நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு நாடு வேண்டாம், அரசியல் தலைமைகளின் அரவணைப்பும் வேண்டாம். எமது சொந்த நிலம் வேண்டும். அதை காக்க அனைவரும் தூய எண்ணத்துடன் முன்வரவும் வேண்டும்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக