புதன், 18 ஜூன், 2014

மலையக பொதுப்பொருளாதாரம் எனும் எண்ணக்கருவுக்கு பலம் சேர்ப்போம்


மலையக மக்கள் என்ற அடையாளம் பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்வதனால் மலையக மக்களின்  அரசியல் வரலாறு மற்றும் அதன் போக்கு என்பவற்றை நோக்கும் முன்
மலையக மக்கள் என்போர்  யார்  அவர்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எவ்வாறான அடையாளப்படுத்தல் ஏற்புடையது என்ற வினாக்களுக்கு  விடை காண்பது அவசியமாகும். 

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் இந்தியத் தமிழர் என்ற இனப் பிரிவு குறிப்பிடப்படுகின்றது. அதனையே மலையக மக்கள் என இங்கு குறிப்பிடப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி முதல் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து மத்திய மலை நாட்டில் பெருந்தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களையும் பெருந்தோட்டங்களை சாராத மாவட்டங்களில் தங்களை இந்தியத் தமிழர்கள் என்ற இன அடையாளத்திற்கு உட்படுத்துபவர்களையும் மலையக மக்கள் என்று வரையறுக்கலாம்.

மலையகத் தமிழர்களை இந்தியத் தமிழர் , பெருந் தோட்டத் தமிழர்,  இந்திய வம்சாவளித் தமிழர், கண்டித் தமிழர் என்ற பெயர்களில் அழைக்கின்ற போதும் இன்று மலையகத் தமிழர் என்ற அடையாளம் முன்னிலை பெற்றுள்ளது. மலையகத் தமிழர்களை இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைப்பதே ஏற்புடையது எனக் கூறுபவர்கள் அதுவே பரந்த அடையாளத்தைப் பெற்றுக் கொடுக்க வல்லது என வாதிடுகின்றனர். எனினும் இப் பரந்த  அடையாளத்தை மலையகத்  தமிழர் என்ற அடையாளத்தின் ஊடாக பேண முடியும் எனவும்  மலையகத்  தமிழர்கள் எனும் அடையாளம் அவர்கள் இந்தியர் என்ற  அந்நிய உணர்வை அவர்களிடத்தும் ஏனைய இலங்கை வாழும் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக இருக்கின்ற நிலையில் மலையக மக்கள் என அழைப்பதே முற்போக்கானது  என வாதிடுகின்றனர். மலையக மக்கள் மீது திட்டமிட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மலையக மக்களின் அணிதிரள்வானது இலங்கை எமது நாடு , மலையகம் , எமது பிரதேசம் , நாம் ஒரு இன சமூகம் என்ற தேசிய  உணர்வு  எழுச்சிக்கு காரணமாகியுள்ளது.

 அறுபதுகளில் மலையகம் , மலைநாடு  என்ற சொற்பிரயோகங்களும்  மலையகத் தேசியத்தை மையப்படுத்திய சமூக அரசியற் செயற்பாடுகளும் தொடங்கி வளர்ச்சி பெற்றன. தற்போது மலையக மக்களிடத்து மட்டுமல்லாது இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையே மலையகம், மலையக மக்கள் என்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதோடு சிங்கள மக்களிடையேயும்  இப்  பதத்திற்கு சமமான பதமாக 'கந்துகர தெமழ ஜனதாவ', 'கந்துரட தெமழ ஜனதாவ'  பதங்களும்  நிலைபெற்றுள்ளன. எனவே , மலையகத் தமிழர் என்ற பதங்களும் நிலைபெற்றுள்ளன. எனவே மலையகத் தமிழர் என்ற அடையாளம் தேசிய அங்கீகாரத்தை நோக்கிய நகர்வு இடம்பெற்று வருகின்றமை கவனிக்கத்தக்கது.

உண்மையில் இலங்கையில் நான்காவது தேசிய இனமாக இன்று மலையக தமிழர் கருதப்படுகின்றனர்.  அவர்களும் தேசியம் மற்றி பேச உரித்துடையவர்களே. இலங்கை நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து இன மக்களும் வந்தேறு குடிகளே. இயக்கர், நாகர் கோத்திரத்தாரை அன்றி இந்த நாட்டிற்கு வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே மலையக மக்களுக்கும் தேசியம் தொடர்பில் கதைப்பதற்கு சகல உரிமையும் உண்டு.

அதே வேளை தேசிய இனமாக ஒரு இனம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் எனில் அங்கு குறிப்பிடப்பட்ட நான்கு அம்சங்கள் காணப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நிலம், பொது மொழி, பொது கலாச்சாரம், பொது பொருளாதாரம் என்பவையே குறித்த இனம் தேசிய இனமாக பிகடனப்படுத்த அவதானிக்கப்படும் காரணிகளாகும்.

மலையகம் குறித்த காரணிகளை கொண்டிருந்த போதும், இன்று அக்காரணிகள் சிறிது சிறிதாக சுரண்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே மலையக தேசியம் பற்றி பேசித்திரிபவர்கள், மலையக தேசியம் உருவாக தடையாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது உருப்பெற்று உள்ளது.

இதில் மலையகத்தின் பொதுப் பொருளாதாரமாக பெருந்தோட்ட பயிர் செய்கை காணப்பட்டது. எனினும் அது தற்போது பாரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுதோட்ட பயிர் செய்கையாளர்களின் எண்ணிக்கையில் காணப்படும் அதீதி வளர்ச்சி வேகம், பெருந்தோட்டங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றது. திட்ட மிடப்பட்ட முறையில் இன்று பேரினவாதிகளால் பெருந்தோட்டங்கள் அழிக்கப்பட்டு, அவை சிறு தோட்ட உரிமையாளர்களின் கைகளுக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.



குறிப்பாக அரசாங்கம் கடந்த வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத்துறையை விட சிறுதோட்ட துறைக்கே அதிக பணத்தை ஓதுக்கி இருந்தமை தேசியம் என்ற பேச்சை இல்லாமல் செய்ய அரசாங்கம் செய்யும் சதியாகவே எண்ணத் தோன்றுகிறது.  பெருந்தோட்ட துறையில் தங்கியிருந்த சமூகம் இன்று முளை சலவை செய்யப்பட்ட நிலையில் சிறு தோட்டங்களை நோக்கி செல்வதை காணக்கூடியதாக உள்ளது. நில அளவீட்டில் கூட இன்று பெருந்தோட்ட நிலப்பரப்பை மிஞ்சிய நிலைக்கு சிறுதோட்டங்கள் வந்திருப்பது தேசியம் எதிர்நோக்கும் பாரிய சவாலாகவே நோக்க வேண்டி இருக்கின்றது.

பொதுப் பொருளாதாரத்தை பொறுத்தவரை சிறுதோட்ட பயிர்செய்கை ஒரு பாரிய சவாலாக இருக்கும் அதேவேளை இன்னும் பல சவால்களும் பொதுப் பொருளாதாரத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கின்றன. மலையகத்தை பொறுத்தவரை தேயிலை உற்பத்தியே முக்கிய பெருந்தோட்ட பயிர் செய்கையாக கணிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தேயிலைத் தொழில் துறைசார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை மலையக மக்களாக கணக்கி லெடுத்துக் கொண்டபோதும் 'இறப்பர் தொழில் சார் நிலப்பரப்பில் இருந்து தாம் 'மலையக மக்கள்' என்ற குரல் பலமாக ஒலிக்காமை மலையக தேசியம் எனும் கருப்பொருள் வலுவிழக்க ஒரு காரணமாகும்..

 'மலையகம்' என விளிப்பதில் முன்னிற்கும் மலையக இலக்கிய பரப்;பில் இருந்து 'இறப்பர்' துறைசார் இலக்கிய படைப்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கேனும் வெளிவராமை. இது மலையக இலக்கிய செல்நெறியில் காணப்படுகின்ற ஒரு குறைபாடாகக் கூட கொள்ள முடியும். தேயிலை மற்றும் இறப்பர் இரண்டு துறைகளிலுமே தொழிலாளர்கள் அல்லது பாட்டாளி வர்க்கத்தினரே உள்வாங்கப் பட்டுள்ளபோதும் தேயிலை தொழில் சார் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசிய அளவுக்கு இறப்பர் தொழில்சார் பாட்டாளிமக்களின் பிரச்சினைகளை மலையக வரலாறு பதிவு செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கான காரணங்களை கண்டறியவும் மலையகத் தேசியத்துக்குள் அவர்கள் அகப்படாமல் செல்வதை தவிர்ப்பதற்கும் தனியான ஆய்வு முயற்சிகள் அவசியமாகின்றன.



புவியியல் அடிப்படையில் பார்க்கும்போது நுவரெலியா பதுளை மாவட்டங்கள் மட்டுமே 'மலையகம்' என்ற ஒரு தன்மை காணப்படுகின்றது. காரணம் தற்போது 'இறப்பர்' தொழில்துறை அனுபவித்த அதே வீழ்ச்சிப்போக்கை தேயிலைத்தொழில் துறையும் அடையத்தொடங்கியுள்ளது. பயிர்ச் செய்கைக்கு பயன்படாத நிலங்களைப் 'பகிர்ந்தளிக்கும்' 'வேலைத்திட்டம்' தற்போது ஆரம்பித்தாயிற்று. ஏற்கனவே, இறப்பர் தொழில் சார் மாவட்டங்களான களுத்துறை, கேகாலை மலையகக் கருத்துருவாக்கத்தில் பின்தள்ளப்பட்டு தற்போது தேயிலை மருவிவரும் மாத்தளை, கண்டி, மொனராகலை, இரத்தினபுரி என மலையகம் என்பதற்குள் அடங்ககக்கூடிய பரப்பெல்லை குறைந்து வருவதனை அவதானிக்கலாம். அரசியல் ரீதியாக மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய நிலையில் நுவரெலியா மாவட்டத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.

மலையக தேசியம் எனும் கருப்பொருளில் பொதுப்பொருளாதாரம் எனும் அம்சம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. எனவே திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்ற சிறுதோட்ட பயிர்செய்கை ஊக்குவிப்புக்களை தடுத்து நிறுத்த வேண்டும். அத்தோடு தேயிலை உற்பத்திக்கு கொடுக்கப்படுகின்ற அதேயளவு முன்னுரிமை இறப்பர் செய்கைக்கும் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் மூலம் பொதுப்பொருளாதாரம் எனும் எண்ணக்கரு வலுப்பெறும் பட்சத்தில் மலையக தேசியத்தை நேரில் அனுபவிக்கும் கனவும் நனவாகி விடும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக