புதன், 30 ஏப்ரல், 2014

மலையக காமக் கூத்தின் உயிரோட்டத்தினை பாதுகாப்போம்


மலையக காமக் கூத்தின் உயிரோட்டத்தினை பாதுகாப்போம்.

இலங்கையின் மலையகத்தே பெருவழக்குப் பெற்றிருக்கும் முப்பெரும் கூத்துக்களான காமன்கூத்து, அருச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் என்பவற்றில் காமன் கூத்து பிரசித்தமானது. இக் காமன் கூத்து மலையக மக்களால் பெரிதும் வளர்க்கப்பட்டு வழக்காறு பெற்றமைக்கான காரணங்களை தேடுவதூடாக மலையக மக்கள் குறித்த ஒரு கற்கையில் ஈடுபடுவது அவசியமானது.

வேதங்களிலே காதற் கடவுளாகக் கருதப்பட்ட காமன், வழிபாட்டிற்குரிய தெய்வமாக பண்டைக்காலம் தொடக்கம் விளங்கியிருப்பதற்கு பல செய்திகள் உண்டு. அதைப்போலவே காமன் கதை பல்வேறு பகுதியில் திரிபுகளோடு வழங்கப்படுதலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

காமன் கூத்து இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருக்கின்றார். அதனால் தேவலோகம் அவதியுறுகின்றது. இந்த நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கச் செய்யும்படி மன்மதனுக்கு தூதோலை அனுப்புகின்றார். இந்திரனின் கட்டளையின் ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனால் மடிகிறான். பின்னர் ரதி சிவனிடம் இரந்து வேண்ட மன்மதன் உயிர் பெறுகிறான் என்று அமைகிறது.

தமிழ் இலக்கியப் பரப்பில் மலையகத் தமிழ் இலக்கியம் ஒப்பீட்டளவில் இன்று சார்பளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. மலையக தமிழ் இலக்கியம் எனும்போது கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் முதலான எழுத்துருவிலான வரிசைகளோடு வாய்மொழிப்பாடல்கள், கூத்து, கலாசாரவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலான எழுத்துருவற்ற இலக்கிய வடிவங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட, மலையகத்தை தம் வாழிடமாகக் ஏற்றுக் கொண்ட மலையகத் தமிழ் தொழிலாளர்கள் தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்பம், வழக்காறுகள், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள், கடவுள்கள், வழிபாட்டு முறைகள் என்பனவற்றையும் சுமந்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக காமன் கூத்து, நொண்டி மேளம், பொய்க்கால் ஆட்டம், காவடியாட்டம், தோகையாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், தாலாட்டு, ஒப்பாரி, கோடங்கி, உருமி, போன்ற எண்ணற்ற கலைச் செல்வங்களையும் கொண்டு வந்தனர். இந்த நீண்ட நெடிய மரபு தொடர்ச்சியின் வரலாற்று வழித்தடத்தின் ஒரு உண்ணதமானக் கூறுகளுள் 'காமன் கூத்து' மலையகத் தமிழர்களின் மணி மகுடமாக நிற்கின்றது என்றால் மிகையாகாது.

கிராமியக் கலைகள் கிராமிய மக்களின் உணர்ச்சிகளையும், செயல்களையும் வெளிப்படுத்தும் சாதனமாகும். இட வேறுபாடு, வெட்பத்தட்பம், பழக்க வழக்கங்கள், சூழல் மாறுபாடுகள், கூத்துக்களின் தோற்றங்களிலும் இசையமைப்புகளிலும் ஓசை நயங்களிலும் எண்ணற்ற வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.  அதற்கினங்க மலையக கூத்துக்களுக்குப் பல தனித்துவங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மலையகத் தமிழர்களின் பாரம்பரியங்களில் பெரும்பாலானவை அழிவு நிலையினை எய்துதல் கண்கூடு. இவற்றைப் பேணி பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

பல வருடகால வரலாற்றைக் கொண்ட காமன்கூத்து இன்றும் இம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது. அதற்கு காரணம் இக்கூத்தினுள் நவீன தொழில்நுட்பங்களோ ஏனைய கலையம்சங்களோ ஊடுறுவ முடியாதிருப்பதுவும், மலையக பெருந்தோட்டத்துறை சமூக கட்டமைப்புமேயாகும். இருந்தும் அண்மைக்கால போக்குகள் சில கவலையளிக்கின்றன. அதாவது காமன்கூத்தினை உரிய முறையில் நடாத்தி முடிப்பதில் பல குழறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே என்றுகூட கூறலாம்.

நகரமயம், உலகமயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களாலும் அபிவிருத்தித் திட்டங்களாலும் பெரும்பாலும் சமூக பண்பாட்டு வேர்களில் ஆட்டத்தை ஏற்படுத்தி வருதல் எமது சமூகத்தில் கிடைத்த படிப்பினைகளாகும். இவற்றுக்கு புறம்பாக சமூக சீரழிவுகள், சினிமா, தொலைக்காட்சி மோகம், இளைஞர்களின் ஆர்;வமின்மை போன்ற பல காரணிகளும் காமன்கூத்து போன்ற கலையம்சங்கள் அருகி வருவதற்கு ஏதுவாக அமைகின்றன. மேலும் காமன்கூத்தை எத்தனை நாட்கள் கொண்டாடுதல் என்பதிலும் இம்மக்களின் வாழ்க்கைச் சுமைகளும் பொருளாதார பின்னடைவுகளும் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

காமன்கூத்தை பயிற்றுவிப்பதற்கென்று ஏதேனும் நிறுவனங்கள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. இருப்பினும் தலைமுறை தலைமுறையாக இக்கூத்துக்கள் (சிறியளவிலான மாற்றங்களுடன்) கையாளப்பட்டு வரும் விதம் மிக வியப்பிற்குரியதே. உண்மையில் மலையக சமூகத்தில் ஒவ்வொரு பிரசையும் இவைபோன்ற கலையம்சங்களை உள்வாங்கி இருக்கின்றனர் என்றால் 'பங்கு பற்றலின் ஊடாகக்கற்றல்' என்ற எண்ணக்கரு சிறப்பாக இடம் பெறுவதனை அறியமுடியும். கூத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான தொடர்பே இதற்கு அடிப்படையாகும். காமன்கூத்து போன்ற மலையக கூத்துக்கள் மற்றும் கலையம்சங்களில் இத்தகைய பங்குபற்றலினூடாகக் கற்றலின் தன்மைகளையும் அதன் சாதகபாதக விளைவுகளையும் மரபுரீதியான கூத்து வளர்ச்சியில் அதன் பங்களிப்பினையும் விரிவாக ஆராய வேண்டியது அவசியமான ஒன்றாகும். திறந்த கற்றல் முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டான இம்முறை ஒரு தனி ஆய்வுத் துறையாக மாறும் வாய்ப்புகளும் உண்டு.

எதிர்கால மலையக சமூக உருவாக்கத்திற்கும் காமன்கூத்து முதலான கூத்துக்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம். இருப்பினும் அதற்கு கூத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது விரிவான ஆய்வுகளுக்கும் ஆழமான கருத்தாடல்களுக்கும் வாதபிரதிவாதங்களுக்கும் இடம் கொடுப்பதாக அமையவேண்டும்.

இறுதியாக, கைவிடப்படும் நிலையினை எய்திக் கொண்டிருக்கும் காமன்கூத்து (பிற கலையம்சங்களும் கூட) புணரமைப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அதற்கான சில விதந்துரைப்புக்களை கூறுதல் பொருந்தும். காமன்கூத்தினை முழுமையாக தொகுத்து அவற்றுக்கு எழுத்துரு  கொடுக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். வட்டார பாகுபாட்டிற்கேற்ற கல்வி என்ற அடிப்படைகளில் மலையகத்திற்கான கல்விக்கூடங்களில் இதனை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடநெறிகளினூடே வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

இன்று மலையக பாடசாலைகள் பலவற்றிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பலகலைக்கழகங்களிலும் கூத்து நிகழ்வுகள் இடம் பெறுவதானது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் அவை வெறுமனே போட்டி நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் பயன்படுத்தும் நிலையினை மாற்றி ஒரு உயிரோட்டமுள்ள உளவியல் உணர்வு நிலையாகவும், எம்தேசத்தின் அடித்தளத்திற்கான ஆணிவேர் என்ற மனநிலையினையும் தோற்றுவித்து, இத்தகைய கூத்துக்களில் புதைந்திருக்கும் பாரம்பரியமான கல்வி முறையினை அடையாளம் காண்டு அதுவே எமது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை என்ற உணர்வினை ஊட்டி வளர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக