செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணசபை தேர்தல்

 கருணாவின் சகோதரி வரலாறு காணாத படுதோல்வி



 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் முஸ்லிம்கள். தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம்முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 31 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்ட போதிலும் முன்னாள் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் விமலவீர திசாநாயக்க உட்பட 13 பேரே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா உட்பட 18 பேர் தோல்வியடைந்துள்ளார்கள். இவர்களில் 6 பேர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, பிரதியமைச்சர் கருணாவின் சகோதரியான ருத்ரமலர் ஞானபாஸ்கரன் படுதோல்வியடைந்துள்ளார். இவரே முதலமைச்சருக்கு பொருத்தமானவர் என பிரதியமைச்சர் கருணா பிரசாரக் கூட்டங்களில் முழக்கமிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்துள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியை வழங்கினால் தமது கட்சி தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யார் முதலமைச்சர் என மஹிந்த அறிவிப்பார் - மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம், முதலமைச்சர் யார் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்து போட்டியிட்டாலும் அரசாங்கத்துடன் இணைந்தே ஆட்சியமைக்க உள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதேவேளை மூன்று மாகாண சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் நாளைய தினம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட உள்ளதாக மைத்திரிபால கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளவும் முடியும்.

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சினால் அமைக்கப்படும் கூட்டமைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வேறு வழியில்லை என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள முடியும் என மைத்திரிபால சிறிசேன நகைச்சுவையாகத் தெரிவித்திருந்தார் என தெரிய வந்துள்ளது.

கிழக்கில் ஆட்சியைக் கைப்பற்ற அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம்: த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் வலைவீச்சு

கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைக்காக தெரிவான மூன்று பேருடன் அரசாங்கம் கதைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தமது மூன்று உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையாத பட்சத்தில், முஸ்லிம் காங்கிரஸில் இருந்து 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரண்டு பேரையும் பிரித்து ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை பிரதி அமைச்சர் கருணாவும், மற்றுமொரு அமைச்சரும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கருணாவுக்கு ஆதரவான உறுப்பினர் ஒருவர், இந்த திட்டத்துக்கு இசைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் தம்முடன் இணைந்துக் கொள்ளுமாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்றை தினம் அழைப்பு விடுத்திருந்தார்.

நாளைய தினம் தமது அழைப்பின் பேரிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக