செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சுவரைத் தின்னும் சித்திரம்



"ரீம் வருகுதாம்

இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே வெலவெலத்து ஓடுகிறார்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களை மதிப்பிட வருகின்ற குழுவைக்கண்டு ஏன் அவர்கள் இப்படி அலேர்ஜியாக வேண்டும்?

அளவுக்கு மீறிய அக்கறையீனம் எவ் வளவு ஆபத்தானதோ அதை விடவும் மிதமிஞ்சிய அக்கறையும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தவல்லது. அதெப்படி அக்கறை ஆபத்தில் முடியும் எனக் கேட்பவர்களுக்கு ஒரு சின்னக்கதை.

தாவரங்களின் மீது ஒருவருக்கு அதீத காதல்.  அவரது வீட்டு வளவெங்கும் ஏராளமான பூஞ்செடிகளும், மூலிகைகளும் செழித்து வளர்ந்திருந்தன.எந்நேரமும் அவரது பொழுது அந்தத் தாவரங்களோடுதான்.பசளையிடுவது, தண்ணீர் விடுவது, பாத்தி கட்டுவது என்பவற்றுடன் மேலதிகமாக அவற்றுடன் உரையாடவும் செய்வார். அவருக்கு அவை எல்லாம் குழந்தைகள். அவற்றுக்கு ஒரு சிறு துன்பம் என்றால் கூட பதைபதைத்து விடுவார். 

 ஒருமுறை காலநிலை வழக்கத்துக்கு மாறான திசையில் சுழன்றது. குளிர் அந்தப் பகுதியைச் சூழ்ந்துகொண்டது. ஏழெட்டு நாள்களாக சூரியனையே காணமுடியவில்லை. எல்லோரும் கம்பளி ஆடைகளைப் போட்டபடி வீடுகளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் தாவரப்பிரியருக்குத் தனது குளிரை விடவும்  வீட்டு வளவில் உள்ள செடிகள் குளிரில் நடுங்கப் போகின்றனவே என ஒரே கவலை. அதற்காக ஒரு காரியம் செய்தார். 

பச்சைத்தண்ணீர் விட்டால் தானே தாவரங்களுக்குக் குளிரும் என நினைத்து சுடுதண்ணீரை அவற்றுக்கு ஊற்றிவிட்டார். பிறகென்ன? ஒரேயடியாக அவை எல்லாம் பட்டுப்போயின. அளவுக்கு மிஞ்சிய அக்கறையும் ஆபத்தில் முடியும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. ஒரேயொரு சிறுசெடிக்கு ஒரு மூடை யூரியாவை விசிறினால் என்ன நடக்கும்? வளர்வதற்கெனப் போடப்படும் உரம் பயிரையே அழித்துவிடும். அதுபோன்ற செயற்பாடுகளே இப்போது நமது கல்விக்கும் நடைபெறுவதாக ஆசிரியர்கள் பலரும் குமுறுகிறார்கள்.

முன்பெல்லாம் ஆசிரிய ஆலோசனை வழங்குவதற்காக மாதத்தில் ஒரு தடவையோ அல்லது தவணையில் ஒரு தடவையோதான் ரீம் வருவதுண்டு. ஆனால் அண்மைக்காலமாக அடிக்கொரு தடவை வந்திறங்குகின்ற இந்த ரீமால் ஆசிரியர்கள் பலரும் தேவையற்ற அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர். எல்லாப் பாடங்களுக்கும் அதைக் கற்பிக்கும் முறை தொடர்பாக முன்னாயத்த அறிக்கை ஒன்றை ஆசிரியர்கள் எழுத வேண்டுமெனக் குறித்த ரீம் கட்டாயப்படுத்துகின்றது. அதைவிடவும் மேலதிகமான பல செயற்பாடுகளை எழுத்து வடிவில் இந்த அதிகாரிகள் கோருகின்றனர். 

இவற்றுக்கும் மேலதிகமாகப் பாடசாலையின் கற்பித்தல் செயற்பாடுகள், புறநிலைச் செயற்பாடுகள் என்பவற்றையும் குறைவில்லாது முன்னெடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.அத்துடன் மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ ஆலோசனை வழங்குகிறோம் என்னும் பெயரில் மாதத்தில் நாலைந்து தடவையாவது இந்த அதிகாரிகளின் பிரசன்னம் நிகழத் தவறுவதில்லை. வந்தவர்கள் சும்மாயிருப்பதில்லை. எப்படியாவது முட்டையில் மயிர்பிடுங்கிய பின்னரே அங்கிருந்து அகல்வதென சபதம் செய்தவர்கள் போன்று எல்லா ஆசிரியர்களையும் போட்டுக் குடைவார்கள். 

இப்படித்தான் ஒரு பாடசாலைக்குக் கணிதபாட ஐ.எஸ்.ஏ ஒருவர் சென்றிருக்கிறார். பாடசாலை ஆசிரியரோ கணித பாடத்தைக் கற்பிப்பதில் கெட்டிக்காரர் எனப்பெயரெடுத்தவர். அப்படிப்பட்டவர் மீது ஒரு பிழை கண்டுபிடித்து விட்டால் ஐ.எஸ்.ஏ தனக்குப் பெருமை என நினைத்திருக்க வேண்டும்.ஆசிரியர் கற்பிப்பதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ம்கூம்! ஆசிரியர் எந்தவொரு பிழையும் விடுவதாகக் காணவில்லை.ஐ.எஸ்.ஏ கடுமையாக யோசித்து ஒரு பிழையைக் கண்டுபிடித்தார். "சேர்! நீங்கள் படிப்பிக்கேக்க பாட அலகின்ர நம்பர், பக்க எண் இதுகளையும் பிளாக் போர்ட்டில எழுதவேணும். 

அதுதான் முறை'' என்று சொல்லியிருக்கிறார். ஓ.எல் எடுக்கிற பிள்ளையள் பக்க எண்ணையும், பாட அலகையும் பாடமாக்கி என்ன செய்யிறது? கணித ஆசிரியரின் நாக்கு நுனிவரை வந்துவிட்ட இந்தக் கேள்வியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.இப்படியாகத் தேவையற்ற நொட்டை சொல்வதற்காகவே இத்தகைய அதிகாரிகள் பாடசாலைகளுக்கு அடிக்கடி தங்கள் திருமுகத்தைக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.  

முந்தி நல்லாப் படிப்பிச்ச ரீச்சர்ஸ் கூட இப்ப இந்த முன்னாயத்த ரிப்போர்ட்எழுதிறதில மினக்கெடுறதால பிள்ளையளின்ர படிப்புத்தான் நாசமாப் போகுது. இப்ப முதலாம் தவணைதான் நடக்குது. ஆனால் (இவை ரீம்) இப்பவே மூண்டாம் தவணைக்கு என்ன படிப்பிக்கப் போறீங்கள் எண்டதையும் எழுதச் சொல்லுகினம்.  

வெளிநாடுகளில இருக்கிற கல்வித் திட்டங்களைக் கொஞ்சம் கூட எங்கட நாட்டுக்கு ஏத்த மாதிரி மாத்தாமல் அப்பிடியே சூத்திரத்தை விழுங்கினமாதிரி அமுல்படுத்திறதாலதான் இவ்வளவு சில்லெடுப்பும். கடைசியா உந்தத் திட்டங்களால இருக்கிற கல்வியும் அழியப்போகுதோ.  கல்வி என்கிற சுவர் இருந்தால் தானே இத்தகைய திட்டங்கள் என்னும் சித்திரத்தை வரைய முடியும். இங்கு சித்திரத்தால் சுவரே அழியும் அபாயமல்லவா வந்திருக்கிறது. 


பொறுப்பானவர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக