நாட்டில் தொழிலற்று இருக்கின்ற பட்டதாரிகள் தமக்கு விரைவாக நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி பல்வேறு பாகங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அண்மைக்காலமாக நடத்தி வருகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் கொழும்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனங்களை வழங்கக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 9 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னால் நடத்தப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாணசபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக வலியுறுத்தப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரைகாலமும் எந்தவிதமான நியமனங்களும் வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம் இருக்கும் பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதிலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் கிழக்கு மாகாணசபை இந்த விடயத்தில் தலையிட்டு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கக் கோரி கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்றவர்களே அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக பல தடவைகள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்திய போதும் இந்தப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு மாகாண அரசும் மத்திய அரசும் இழுத்தடிப்பு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் இருப்பதாகவும் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் தலையிட்டு வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் வலியுறுத்துகின்றனர்.
மட்டக்களப்பு பட்டதாரிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது..!
மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகில் கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற் கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் குறித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
இதன் போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்தனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினால் வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்காவிட்டால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபைக்கு முன்னாள் உண்ணாவிரதத்தினை மேற் கொள்வதுடன் கிழக்கு மாகாண சபையையும் முற்றுகையிடுவோம் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை மீண்டும் தலைதூக்காது என்பதில் உறுதியில்லை.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாண மாவட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் படி கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மத்திய அரசின் ஊடாக அறிவிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை விரைவில் பெற்றுத் தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கொழும்பில் நேற்று முன்தினம் வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். தமக்கு விரைவில் நியமனத்தைப் பெற்றுத் தருமாறும் பட்டம் பெற்று நீண்ட நாட்களாக தொழிலற்று இருப்பதாகவும் எனவே விரைவாக வேலைவாய்ப்பினை வழங்குமாறும் பட்டதாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அண்மைக்காலமாக வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளமையை காண முடிகிறது.
நாடொன்றைப் பொறுத்தவரையில் வேலையின்மை பிரச்சினை மற்றும் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் இல்லாத சிக்கல்கள் என்பன பொதுவாகவே காணக்கூடிய விடயமாகும். வேலையின்மை பிரச்சினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது. ஆனால்இ இவற்றை காரணம் காட்டாமல் பட்டம் பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பை செய்ய தயாராக இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு அதற்கேற்ப வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவேண்டியது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமையாகும்.
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பட்டங்களைப் பெற்று பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்றவர்கள் வேலைவாய்ப்பின்றி நீண்டகாலம் இருக்கின்றனர் எனின் அந்நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பொருத்தமற்ற நிலைமை காணப்படுவதாகவே கருதப்படும். எனவே இவை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தி பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியில் வருகின்றவர்களை நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்கச் செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகள் இன்றி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமையை இட்டுச் செல்லக் கூடாது. ஒரு மாணவன் பாடசாலை கல்வியை முடித்து அதன் பின்னர் பல்வேறு கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்தே பட்டப்படிப்பை நிறைவு செய்கிறான். அவ்வாறு பட்டங்களைப் பெறுகின்றவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்காவிடின் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. பட்டம் பெற்றுள்ள குறிப்பிட்ட இளைஞர், யுவதிகளின் சேவையை நாடு பெறமுடியாமல் போவது துரதிர்ஷ்டவசமாகும். இந்த நிலையை மாற்றி அமைக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
விசேடமாக பட்டதாரிகளும் இந்த தொழிலற்ற விவகாரம் தொடர்பில் சற்று ஆழமாக சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும். பட்டம் பெற்றவர்கள் தாம் அரசாங்கத்துறையில் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றவேண்டுமென கருதுவதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அரச துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாது விடின் பட்டதாரிகளும் சோர்ந்து போகக் கூடாது. காரணம் இன்று தனியார் துறையில் மிகவும் கவர்ச்சிகரமான சம்பளங்களில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பிலும் பட்டதாரிகளும் கவனம் செலுத்த வேண்டியது சமூகத்தின் ஒரு தேவையாக காணப்படுகின்றது.
மேலும் அனைவரையும் அரச சேவையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்ற வாதத்தை அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் முன்வைக்கலாம். ஆனால், அவ்வாறு கூறி படித்து பட்டம் பெற்றுள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்துடனும் அவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்துடனும் அரசாங்கம் பொறுப்பின்றி செயற்பட முடியாது. இது முழு நாட்டினதும் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் விடயமாகும்.
எனவே, பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் விரைவில் தீர்வைக் காண முன்வரவேண்டும். அத்துடன் மத்திய அரசாங்கமும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான முறையில் தலையிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பட்டம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக நியமனங்களை கோரி வீதிகளில் போராடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கவனம் செலுத்தி விரைவாக தீர்வைக் காண முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் அவசியமான கொள்கை ரீதியான மாற்றங்களை செய்வதன் மூலமே வேலையற்றோர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைக் காண முடியும். ஆகையால் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த, மிகவும் உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி விரைவாக பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
(நன்றி வீரகேசரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக