கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி என்பார்கள்.
கல்வி சமூக மாற்றத்தின் அச்சாணியாக விளங்குகின்றது. கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது. கல்வியில் எழுச்சி பெறாத சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை. சமூக அபிவிருத்தி என்பது ஆண் மற்றும் பெண் இருவரது கைகளிலும் தங்கி இருக்கின்றது.
கல்வி சமூக மாற்றத்தின் அச்சாணியாக விளங்குகின்றது. கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது. கல்வியில் எழுச்சி பெறாத சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை. சமூக அபிவிருத்தி என்பது ஆண் மற்றும் பெண் இருவரது கைகளிலும் தங்கி இருக்கின்றது.
கல்வித் துறையிலும் இருபாலாரினதும் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மலையகக் கல்வி குறித்து நாம் நோக்குகின்றபோது பெண்களின் கல்வி நிலைமைகள் குறித்து விசேடமாக நோக்க வேண்டி இருக்கின்றது. மேலும் மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு பெண்களின் கல்வியில் விசேட அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்கின்றார்கள். ஆனால், மலையகப் பெண்கள் எந்தளவுக்கு கண்களாக மதிக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கு உட்பட்டு மலையகப் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக மௌனித்து கிடப்பதையே காணக் கூடியதாக உள்ளது. சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் வெறுமனே உழைக்கும் இயந்திரங்களாக இப்பெண்கள் உருமாறிப் போய் இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
பெருந்தோட்ட பெண்களை பொறுத்தவரை பாடசாலைக் கல்வியை முழுமையாகப் பெற்று அதன் வாயிலாக கிட்டும் நன்மைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அரிதாகவே காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் இரா. ரமேஷ் தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். மேலும் பெருந்தோட்டப் பெண்கள் கல்வி ரீதியான மேலெழுச்சியினை அடைந்து கொள்ள முடியாதுள்ளார்கள். பெண் கல்வி, பெண் உரிமை, பெண் அந்தஸ்து, பெண் பங்குபற்றுதல், பெண் தொழில் என்பனவற்றில் தொடர்ந்து பாரபட்சமும் புறக்கணிப்புகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இச் சமூகத்திலேயே பெண்களின் குடும்ப வகிபங்கும் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற சமூக ரீதியான பாரபட்சங்களும் பொருளாதாரப் பின்புலமும் இவர்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படுகின்ற அந்தஸ்து என்று பல காரணிகள் இதற்கு காத்திரமான பங்கினை வகிப்பதாக ரமேஷ் மேலும் தெரிவிக்கின்றார்.
தொழில் ரீதியாகவும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மலையகப் பெண்கள் உள்ளாவதும் புதிய விடயமல்ல. 1988 ஆம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே தொழில் புரியும் பெண்களின் ஆரோக்கிய நிலை குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகின. மலைச் சரிவுகளில் ஏறியும் இறங்கியும் வேலை செய்ய வேண்டி இருப்பதனால் இப்பெண்கள் பல்வேறு பிரசவம் தொடர்பான உடற்கோளாறுகளினால் துன்பப்படுவதாக ஆய்வு வெளிப்படுத்தியது. ஈரக் கால நிலையில் நாள் முழுவதும் வேலை செய்யும் பெண்கள் தடிமன், இருமல் உள்ளிட்ட நோய்களினால் எப்போதும் துன்புறுகின்றனர். இரும்புச் சத்துக் குறைவு. இரத்த அழுத்த நோய், பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் புண்ணாகுதல் தோள்பட்டை, முதுகெலும்பு வலி, காலில் ஆணி ஏற்படல் போன்றவற்றிற்கு அவர்கள் புரியும் தொழில்களின் இயல்பே காரணமாகும் என்றும் ஆய்வு வலியுறுத்தியது.
மலையகப் பெண்களின் கல்வி நிலை குறித்து நோக்குவதற்கு முன்பதாக மலையகக் கல்வி குறித்து நோக்குகின்ற போது தேசிய கல்வி மட்டத்தை காட்டினும் மலையக கல்வி மட்டம் தொடர்ச்சியாக பின்னடைவு கண்டு வந்துள்ளதாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். மலையகக் கல்வியின் பின்னடைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இவற்றுள் பிரதான இரண்டு காரணங்களை ஏற்கனவே புத்திஜீவிகள் அடையாளப்படுத்தி இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பவர்கள் கல்வி கற்று ஏனைய தொழில்களுக்கு சென்றுவிட்டால் தோட்டங்களில் தொழில் புரிய தேவையான தொழிலாளருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கவலை தோட்ட நிர்வாகத்தினருக்கு இருந்தது. இதனால் மலையக இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவது ஊக்குவிக்கப்படவில்லை.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட குடியுரிமை இரத்து காரணமாக கல்வி கற்றவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தமையால் அவர்கள் கல்வித் துறையில் ஊக்குவிக்கப்படாது அத்துறையிலேயே பின்தங்கிவிட்டனர். இவற்றுடன் அரசாங்கங்களின் சில செயற்பாடுகளும் மலையக கல்வித் துறையின் எழுச்சிக்கு தடையாக விளங்கின என்பதையும் மறுப்பதற்கில்லை.
1988 இல் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்காக சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். எனினும் இதில் தோட்டப் பகுதிகளையும் இந்தியத் தமிழ் சமூகத்தையும் சார்ந்தவர்கள் இரு நூறுக்கும் குறைந்த எண்ணிக்கையினரே பதிவு செய்துள்ளதாக பேராசிரியர் மா.செ. மூக்கையா தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மலையகத்தின் சமகால கல்வி நிலைமைகள் முன்னரைக்காட்டிலும் அபிவிருத்தி கண்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மலையகத்தின் பல பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. வளப்பற்றாக் குறைகளும் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் மலையக கல்வித் துறையில் எழுச்சிப்போக்கினை பதிவு செய்திருக்கின்றன.
சமகாலத்தில் இலங்கையின் கல்வி நிலையை நோக்குமிடத்து மட்டக் குறியீட்டின் அடிப்படையில் பெண்களின் கல்வி வளர்ச்சி ஆண்களை விடவும் சிறப்பாக உள்ளதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பல குறிகாட்டிகளை நாம் எடுத்து நோக்குகின்ற போது பெண்களின் கல்வி வளர்ச்சியினை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பெண்களின் சேர்வு வீதம் அதிகமாக இருக்கின்றது. க.பொ.த. உயர்தர மட்டத்திலும் இது அதிகமாக உள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களிலும் கணிசமான தொகையினர் பெண்களாக உள்ளனர். ஆசிரியர்களை பொறுத்த வரையிலும் அதிகமான சதவீதத்தினர் பெண்களாகவே உள்ளனர். இது தேசிய ரீதியிலான விடயமாகும். எனினும் மலையக நிலைமையில் காலம் காலமாக பின்னடைவு நிலைமைகளே காணப்படுகின்றன.
1984 இல் கலாநிதி குமாரி ஜயவர்த்தன ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில் உலகளாவிய ரீதியில் பெண்கள் தொடர்பான ஒரு தனியான பௌதிக வாழ்க்கை சுட்டெண் கணிப்பீடப்படுமாயின் இலங்கை மிக உச்ச கட்டத்தை பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டு பின்வரும் தரவுகளையும் தருகின்றார். பெண்களின் கல்வியறிவு மட்டம் 82 சதவீதம் (தேசிய மட்டம் 86.2% ), பிரசவ இறப்பு வீதம் ஆயிரத்திற்கு 1.2 சதவீதம் எனக் கூறி இச்சுட்டெண்கள் ஆசியாவிலேயே மிகவும் சிறப்பான நிலைமைகளை பிரதிபலித்தாலும் இலங்கைப் பெண்களுக்குள்ளும் இலங்கையின் தந்தை வழி சமுதாய அமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது. அதில் பெருந்தோட்டப் பெண்கள் மிகுந்த புறக்கணிப்பிற்கு ஆளானவர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றார்.
1970 களின் இறுதியில் கூட பெருந்தோட்ட பெண்களில் 51.8 சதவீதமானோர் ஆரம்பக் கல்வியைக்கூட பெற்றிருக்கவில்லை என்று தகவலொன்று வலியுறுத்துகின்றது.
மலையகப் பெண்கள் சமகாலத்தில் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற போதும் இந்நிலை இன்னும் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். ஆரம்ப நிலைஇ இடைநிலை, உயர்நிலை என்று சகல மட்டங்களிலும் இவ்விருத்தி நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பொறியியலாளர், கல்வியியலாளர், விஞ்ஞானிகள் என்று சகல மட்டங்களிலும் மலையகப் பெண்கள் கால்பதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மலையகப் பெண்கள் விரிவுரையாளர்களாக உள்ளனர். இத்தொகையிலும் அதிகரிப்பு அவசியமானதாகும். கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட தலைவராக மலையகத்தைச் சேர்ந்த கலாநிதி திருமதி சேனாதிராஜா இருந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும். வரலாற்றில் முதன் முறையாக ஒரு மலையக பெண் இந்த உயர் பதவிக்கு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலையகத்தில் அநேகமான பெண்கள் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலைமையும் பாராட்டத்தக்கதாகும். எனினும் நாம் இவற்றுடன் திருப்தியடைந்துவிட முடியாது. பெண்களின் கல்விவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்படுதல் வேண்டும். பெண்களின் தலைமைத்துவம் மலையகத்தில் சரியாக இல்லை. இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். மலையகத்தில் அநேகமான பெண்கள் இன்னும் ஆணாதிக்கத்துக்கு கீழ் இருப்பதாக முன்னர் கண்டோம். இந்த நிலை உடைத்தெறியப்படுதல் வேண்டும். பெண்கள் விழிப்புணர்வு மிக்கவர்களாக விளங்குதல். தீர்மானம் மேற்கொள்பவர்களாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் மட்டும் படிப்பதால் மலையகக் கல்வியை மேம்படுத்திவிட முடியாது. பெண்களும் படிக்க வேண்டும்.
பெண்கள் வேறு வீட்டுக்கு திருமணம் முடித்து போய்விடுவார்கள். எனவே. கல்விக்காக பெண்களுக்கு முதலீடு செய்வதில் பயனில்லை என்ற மனப்பாங்கு சில பெற்றோரிடம் காணப்படுகின்றது. இந்த பிழையான மனப்பாங்கு மாற்றியமைக்கப்பட்டு பெண்களின் கல்விக்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படல் வேண்டும். பால் வேறுபாடு கல்வியில் இருக்கக் கூடாது. சமவாய்ப்புகள் இருசாராருக்கும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
(நன்றி வீரகேசரி)
(நன்றி வீரகேசரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக