வெள்ளி, 16 அக்டோபர், 2015

முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணலாம்


இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் இறப்பது நிச்சயம் என்பது போல அனைத்து உயிரினங்களும் 'முதுமை' எனும் வயோதிபத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதும் நியதி. இதனை இந்த விஞ்ஞான விந்தையினாலும் மாற்றிவிட முடியாது.


கம்பீர தோற்றம், கட்டழகான உடலமைப்பு, வீரம் கொண்ட செயல்பாடுகளுடனும் திகழ்ந்த அன்றைய இளைஞர்கள், இன்று உடல் தளர்ந்து, பலம் குறைந்து, கண் பார்வையும் மங்கி, நோய்வாய்ப்பட்டு 'முதியோர்' என்ற பரிதாபப் பெயரோடு வறுமையிலும் வாழ்ந்து வருவதைக் காண்கின்றோம்.

அறுபது வயதைத் தாண்டிய ஆரம்பகால முதியோர் பலர் 'தனக்கு வயதாகி விட்டதே' எனக் கவலைப்படுவதுண்டு. யாருக்குத்தான் வயதாகவில்லை? வயது என்பது எனக்கும் உங்களுக்கு மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கும் கூட வயது போய்க்கொண்டே இருக்கின்றது. இது நியதி, தடுத்துவிட யாராலும் முடியாது.

நமது சமுதாயத்தில் 'முதியோர்' இன்றால் வாழ்ந்து முடித்தவர்கள் எனப் பலரும் நினைத்திருக்கின்றனர். இது ஒரு அறியாத்தனம் என்றே கூறவேண்டும்.

முதியோர் எனும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றி நாம் நன்கு சிந்தித்துப் பார்ப்போமேயானால் அவர்கள் அறிவும் ஆற்றலும் திறமையும் கொண்டவர்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் கிடைத்துள்ள பல்துறைசார்ந்த அனுபவசாலிகள். கடந்தகால வரலாற்றுப் புத்தகங்கள், எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் என்பதையெல்லாம் நினைவுகூர ஏனோ நமது சமுதாயம் மாறந்துவிடுகின்றது.

இலங்கையில் அதிகரித்துவரும் முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் முதியோர்களுக்கான பல வேலைத்திட்டங்களையும் சலுகைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில் 2000 ஆம் ஆண்டில் 9 ஆம் இலக்க முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புச் சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக முதியோர்களின் உடல், உள நல, சமூக, சமய, கலாசார, நலன்புரி ஆகிய விடயங்களில் ஒழுங்கமைப் பொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கிராம மட்ட. மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய ரீதியிலும் முதியோர் சங்கங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்டு செயல்படும் கிராம மட்ட சங்கங்களுக்கு தலா 5000 ரூபாவும், பிரதேச மட்டத்தில் செயல்படும் சம்ளேனத்துக்கு 7500 ரூபாவும் பராமரிப்புச் செலவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. அத்தோடு முதியோர் தமது தேவைகளை இலகுவாக முடித்துக் கொள்ளும் பொருட்டு முதியோர்களுக்கான விசேட அடையாள அட்டைகளையும் சமூக சேவை அமைச்சு வழங்கி வருகின்றது.

இவ்வாறான முதியோர் விஷேட அடையாள அட்டையை வைத்திருப்பதன் மூலம் தபாலகம், வைத்தியசாலை, பஸ் வண்டி மற்றும் பொது இடங்களிலும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதோடு அரசாங்க ஒசுசலாவிலும் 5 சதவீத கழிவில் மருந்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் முதியோர்களுக்குத் தேவையான மூக்குக் கண்ணாடிகள், கண் வில்லைகள், ஊன்றுகோல்கள் மற்றும் உபகரணங்களையும் சமூக சேவை அமைச்சு தேவையேற்படும் போது இலவசமாகவே வழங்கி வருகின்றது.

2013 ஆம் ஆண்டின் கணக்கின்படி முதியோரின் உளநல சேவைகள் தொடர்பாக தேசிய ரீதியில் 10056 கிராம மட்ட சங்கங்களும், 240 பிரதேச மட்ட சங்கங்களும், 19 மாவட்ட அமைப்புக்களும் 05 மாகாண மட்ட சங்கங்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

முதியோர் தனது வயோதிப காலத்தில் பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் ஆளாகி வருகின்றனர்.

பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமை, வாழ்வதற்கு சொந்த வீடு ஒன்று இல்லாமை, அனுபவித்து வந்த சொத்துக்களை இழத்தல், தனக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் குறித்த நேரத்தில் கிடையாமை போன்ற பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து மனவேதனையடைந்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. முதியோர்களுக்கான தேசிய சபை மூலம் இவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முதியோர்களுக்கென அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல வேலைத் திட்டங்களையும் சலுகைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற போதிலும் பெரும்பாலான பாமர முதியோர் இவை பற்றி அறிந்திராதவர்களாகவே இருந்து வருகின்றனர். இது தொடர்பில் முதியோர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

முதுமைக் காலத்தை சந்தோஷமாக களிப்பதற்கு சில வழிமுறைகளை கைக்கொள்வது சிறப்பாக அமையும்.

மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரக்கூடிய வைபவங்களில் ஈடுபடுதல், சமூக, சமய, கலாசார நடவடிக்கைளில் பங்களிப்பு செய்தல்.

முதியோர் சங்கங்களை அமைத்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்தல், வீட்டிலேயே சதாகாலமும் முடங்கிக் கிடக்கும் முதியோர் சுற்றுலா மூலம் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்து சந்தோஷமடைதல் போன்ற வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிம்மதியடையலாம்.

அத்தோடு வயது போன காலத்தில் முதியோர் தினமும் சுதமாக இருத்தல், பொருத்தமான போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுதல், சத்துணவுகளை உட்கொள்ளல், மாமிசம், கொழுப்பு மற்றும் சீனி சேர்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளல், போதியளவு உறக்கம் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி வந்தால் பல சிக்கல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மன அழுத்தங்கள் மற்றும் மனவேதனைகளிலிருந்து மீட்சிபெற சமூகப் பணிகளிலும் ஆன்மிகத் துறையிலும் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் வாழ்க்கையை சந்தோஷமாகக் களிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக