திங்கள், 28 செப்டம்பர், 2015

இலங்கையில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்


மனிதனுக்கு நேர் வழிகாட்டுகின்ற ஒவ்வொரு மதமும் பிறப்பையும் இறப்பையும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் அந்த இறப்பு ஒவ்வொருவரை யும் வந்தடையும் நேரமும் நாளும் சூழ்நிலையுமே வௌவேறானவை.


இயற்கை அனர்த்தத்தினாலும் செயற்கை யுத்தத்தினாலும் இந்நாடு பல உயிர்களை இழந்திருக்கிறது, அவலங்களைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, சுனாமிப் பேரனர்த்தத்தினாலும் இந்த நாட்டில் நடந்தேறிய யுத்தத்தினாலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டும் காயப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இத்தகைய அவலம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து மீட்சிக்கான பயணம் தொடர்கையில், தின மும் நிகழ்ந்தேறும் விபத்துக்களினால் காயப்படுவதும், ஊனமுறுவதும் உயிர்கள் காவு கொள்ளப்படுவதும் என்ற மனங்களை அழுத்தும் விபரீதங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாததென்றாலும் தவிர்க்கப்பட வேண்டியதும் தடுக்கப்பட வேண்டியதுமாகும்.

வீதி விபத்துக்கள்

விபத்து என்பது விரும்பத்தகாத, தேவையற்ற, எதிர்பாராத நிகழ்வாகும். இருப்பினும், அவதானத்துடன் செயற்பட்டால் அந்த தேவையற்ற, விரும்பத்தகாத நிகழ்வைத் தவிர்த்துக்கொள்ளலாம், தடுத்தும் கொள்ளலாம். வீதி விபத்துக்கள் வீதிகளில் வாகனங்கள் வாகனங்களுடன் மோதுவதாலும், வாகனங்கள் மனிதர்களுடன் அல்லது சொத்துக்களுடன் மோதுவதாலும் ஏற்படுகிறது.



வீதி விபத்துக்களில் அதிகம் தொடர்புபட்டவை துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, மோட்டார்கார், வேன், லொறி மற்றும் தனியார் பஸ்கள் அவற்றுடன் பாதசாரிகளையும் குறிப்பிடலாம்.

புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையில் வருடமொன்றுக்கு 385,000 குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல், இறப்புக்களும் அமைகின்றன. புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் படி 2006ஆம் ஆண்டு 117,467 பேரும் 2007ஆம் ஆண்டு 118,998 பேரும் 2008 ஆம் ஆண்டு 123,814 பேரும் 2009ஆம் ஆண்டு 120,085 பேரும் 2010ஆம் ஆண்டு 128,603 பேரும் 2011 ஆம் ஆண்டு 123,261 பேரும் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர்.

அக்காரணங்களில் தற்காலத்தில் அதிகளவில் தாக்கம் செலுத்துவது, தொற்றா நோய்களும் மற்றும் வீதி விபத்துக்களுமாகும். 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அறிக்கையின்படி, 2006இல் 35,763 விபத்துக்களும் 2007ஆம் ஆண்டில் 31,982 விபத்துச் சம்பவங்களும், 2008 ஆம் ஆண்டில் 29,864 விபத்துக்களும் 2009இல் 33,094 விபத்துக்களும் 2010ஆம் ஆண்டு 37, 653 விபத்துக்களும் 2011இல் 37,000 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்விபத்துக்களினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கின்றவேளை 2006ஆம் ஆண்டில் 2,238 பேரும் 2007இல் 2,402 பேரும் 2008இல் 2,328 பேரும் 2009ல் 2,413 பேரும் 2010 இல் 2,721 பேரும் 2011இல் 2500 பேருமாக ஆறாண்டுகளில் மொத்தம் 14,602 பேர் வீதி விபத்துக்களினால் உயிர் இழந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களினால் 2,436 பேர் இறந்துள்ளனர்.

வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்கெடுப்பின்படி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி, மோட்டார்கார், இரட்டைப் பாவனை வேன் லொறி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாகனங்களுடன் தொடர்புபட்ட விபத்துச் சம்பவங்களே அதிகம் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவங்களின் வீதங்களை பார்க்கின்றவேளை 25 வீதமான விபத்துக்கள் மோட்டார் சைக்கிளினாலும் 17 வீதமான விபத்துக்கள் மோட்டார் கார்களினாலும், 15 வீதமாக விபத்துக்கள் இரு இரட்டைப் பாவனை வேன் 12 சதவீதமான விபத்துக்கள் முச்சக்கர வண்டி மற்றும் லொறிகளுடன் தொடர்புபட்டதாகவும், 7 வீதமான விபத்துக்கள் தனியார் பஸ்களுடன் தொடர்புபட்டவையாகவும் காணப்படுகின்றன.

அண்மையில் இலங்கையில் பதிவான கோர விபத்து
மினுவாங்கொடையில் டிபென்டர் கோர விபத்து
5 பேர் பலி

மினுவாங் கொடையாகொட முல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாது காப்பு பிரிவைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மரண வீடொன்று க்கு செல்லும் வழியிலேயே இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தினால் அறுவர் படுகாயமடை ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.



மினுவாங்கொடை - கொழும்பு வீதியில் யாகொடம ல்ல, மிரிஸ்வத்த பகுதியிலேயே செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி ,வ்விபத்து இடம்பெற்றுள்ளது. மினுவாங் கொட பகுதியை நோக்கிப் பயணித்த டிபெஃன்டர் ரக வாகனம் தனியார் பஸ் ஸொன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த மற்றொரு பஸ்ஸ¤டன் டிபெஃ ன்டர் மோதியுள்ளது.

இதனால் டிபெஃன்டர் வாகனம் முற்றாக சேதமடைந்ததோடு அதில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மூவர் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர்.

படுகாயமடைந்த ஆறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தர்கள் மினுவன்கொட வைத்தியசாலையில் இருந்து கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மினுவன்கொட வைத்தியசாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இது போன்று இலங்கையில் அன்றாடம் பல்வேறு கோர விபத்துக்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

வீதி விபத்துக்களுக்கான காரணங்கள்

நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையும், வீதி ஒழுங்கைப் பேணாமையும், கவனயீனமும், மதுபோதையில், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துவதும் பிரதான காரணமாகவுள்ளன. அவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத் தின் சாதக, பாதக நிலையைக் கண்டுகொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வாகனம் செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப் புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல், சாரதிகள் குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல், வாகனம் செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவை பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச் சமிக்ஞைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச் சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்திற்கொள்ளாமை, சட்டநடவடிக்கைகளில் உள்ள தவறுகள், பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாகப் பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன.

சனத்தொகையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மனிதனின் வாழ்வில் போக்குவரத்து இன்றியமையாததொன்று. அந்தப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்துகொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ அவற்றையே இன்று ஒவ்வொரு வாகன சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர்.



கடந்த அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் வீதிக் கட்டமைப்பானது வெளிநாடுகளை ஒப்பிடுமளவிற்கு அபிவிருத்தியடைந்து வருகிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் சாதாரண பாதைகளினூடாக பயணிப்பதிலும் பார்க்க நேரச்சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம்.

அதுமாத்திரமன்றி, மாகாணங்களுக்கிடையிலான நெடுஞ்சாலைகளும் காபட் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாதைகள் செப்பனிடப்பட்டு சீராக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல சாரதிகள் உச்ச வேகத்தில் அப்பாதைகளில் வாகனங்களைச் செலுத்துகின்றனர்.

போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால் இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டார் சைக்கிள்கள் இருப்பதைக் காணமுடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால் நகர்ப் புறங்களில் எவ்வாறு இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியதில்லை.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான ஆறாண்டு காலப்பகுதியில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் புள்ளிவிபரங்களின் படி மோட்டார் கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், பஸ், இரட்டை தேவை வான், பாவனை வேன் லொறி, உழவு இயந்திரங்கள் ஆகிய வாகனங்கள் அடங்கலாக 2006இல் 300, 522உம், 2007இல் 297,892உம், 2008இல் 265,199உம், 2009இல் 204,075உம், 2010இல் 359,234உம் 2011இல் 248,572 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு சகல வகை வாகனங்கள் அடங்கலாக 429,566 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையானது 5,663,234 என போக்குவரத்துத் திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

இத்துடன் கடந்த வருடம் 2,54,394 பேர் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளனர். அனுமதிப்பத்திரங்களை பெறுகின்ற சாரதிகள் வாகனங்களைச் செலுத்துவது தொடர்பான சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும். கடந்த வருடம் 47 ஆயிரம் சாரதிகள் குடிபோதையில் வாகனங்களை செலுத்தியதற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதுமாத்திரமன்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா? என்பது கேள்விக் குறியாகும்.

விபத்துக்களைத் தடுத்தலும் விழிப்புணர்வூட்டலும்

வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை அதிகரிக்கப்படுவது அவசியமாகவுள்ளது.

ஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் கிராமப் புறங்களிலும் நகரப் புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.

எந்தவொரு குற்றச் செயல் இடம்பெற்றாலும் அல்லது எந்தவொரு விடயம் தொடர்பாகவும் அவ்விடயமோ அல்லது அக்குற்றச் செயலோ இடம்பெறுகின்றபோது அல்லது அவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் பலனை எதிர்பார்க்குமளவில் ஏற்படுத்தாது என்­பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அவர்களின் ஆலோசனையாகவுமுள்ளன.

அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையாளர்களும் மதிப்பளிப்பதோடு அவற்றைத் தவறாது பின்பற்றவும் வேண்டும். வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ;ட, சிரேஷ;ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.

பாதுகாப்பான முறையில் வாகனம் செலுத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் நடத்துனர்கள் தொடர்ச்சியாக அறிவூட்டப்படல் முக்கியமானது. வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில் அதிகாரிகளினால் அமுல்படுத்தப்படுவதன் ஊடாக அவ்வாறான நிலைமைகளில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் முன் வாகனம் ஓட்டுதல் தொடர்பான திறன், ஒழுங்கு முறையான செலுத்தல், வாகனம் செலுத்துவது மற்றும் வீதி ஒழுங்கு முறை தொடர்பான அறிவு அவற்றுடன் தேகாரோக்கியம் என்பன சரியான முறையில் பரீட்சிக்கப்படுதல் அவசியம்.

வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான இவ்வாறான பல நடவடிக்கைகள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினாலும் வீதிப்போக்குவரத்துத் பிரிவு பொலிஸாரினாலும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால் இந்நடவடிக்கைகளிலுள்ள தவ­றுகள், குறைபாடுகள் எவையென ஆராயப்படுவது முக்கியம்.

அதுமாத்திரமன்றி, வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையென்றால் அத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதும் அம்மாற்றங்களினூடான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதும் அவசியமென்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பாகும்.

வாகனங்களும் வீதி விபத்துக்களும் அதி கரித்துள்ளதற்கு ஏற்ப வாகனங்களைச் செலுத் துவது தொடர்பாகவும் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது குறித்தும், வீதி விபத்துக் களைத் தவிர்ப்பது தொடர் பாகவும் விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படு வது இன்றியமையாதது.
அவ்வாறு தொடர்ச்சியான அறிவூட்டல் நட வடிக்கைகள் தொடரப்படுவதன் மூலமே வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் உரியவர்களினால் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற ஒவ்வொரு தனிநபரும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி அதற்கேற்ப செயற்பட அக்கறை கொள்வது அவசியம்.

இந்த அவசியத் தேவைப்பாடுகளோடு வாகன சாரதிகள் தங்கள் உயிரின்மீது ஆசை கொண்டு வாகனங்களைச் செலுத்த வேண்டும். வீதி ஒழுங்குக ளையும் வாகனம் செலுத்தும் ஒழு ங்கு களையும் பின்பற் றாது வீணான உயிர் பலியை ஏற்படுத்து கின்ற சாரதிகள் தொடர்பில் உச்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. 24 மணித்தியால வீதி போக்கு வரத்து சேவை இடம்பெறு கின்ற போதிலும், நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதி கரித்துச் செல்கின்றன. இவ்விபத்துக்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய நேரத்தில் உரிய சட்டம் கடுமையாக கடைப் பிடிக்கப்படுவதன் மூலமும் ஆரோக்கியமான விழிப்புணர்வு செயற் பாடுகள் உரிய வர்களுக்கு குறிப்பாக வாகன சாரதிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுவதன் மூலமுமே வாகன விபத்துக்களைக் குறைக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக