செவ்வாய், 27 மே, 2014

இந்திய வீடமைப்பு திட்டமும் மலையக மக்களும்!


இந்திய அரசின் உதவியுடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நான்காயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது.


இத்திட்டத்தின் பூர்வாங்கல் பணிகள் கடந்த வாரம் நுவரெலியா, ஊவா மாகாணங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அதன் படி நுவரெலியா மாவட்டத்தில் 3700 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 300 வீடுகளும் கட்டப்படவுள்ளன.

மஸ்கெலியா மரே தோட்டம், சாமிமலை கவரவிலை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பூண்டுலோயா டன்சினன் தோட்டம், வட்டகொடை மடக்கும்புர தோட்டம், பத்தனை மவுன்ட் வேர்ணன் தோட்டம் உட்பட பதுளை மாவட்டத்தின் ஒரு தோட்டத்திலும் வீடுகள் அமைக்க பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தோட்டத்திலும் 300 வீடுகள் கட்டப்படவுள்ளன. புதிய வீடுகள் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்ட பின்னர் பழைய லயன் வீடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு விடும்.

இந்திய அரசு இலவசமாக நிர்மாணித்துக் கொடுக்கும் நான்காயிரம் வீடுகளில் 950 வீடுகள் பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் நிருமாணிக்கப்படவுள்ளன. பதுளை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஸ்பிரிங்வெலி தோட்டப் பகுதிகளில் 100 வீடுகளும் கிளன் அல்பின், அப்புத்தளை, கிளனூர், தம்பதென்ன, போவ, ஹிந்தகல, கனவரல்ல, வெலிமடை, வோர்விக், சென் ஜேம்ஸ், லெஜர்வத்தை, டவுன்சைட், பூனாகலை, லியங்காவெல, அம்பிட்டிகந்த, விராலிபத்தனை, ரோபேரி போன்ற 19 பெருந்தோட்டங்களிலும் தலா ஐம்பது வீடுகளுமாக தொள்ளாயிரத்து ஐம்பது வீடுகள் அமையவுள்ளன.நிர்மாணிக்கப்படும் ஒரு வீடு பன்னிரெண்டு இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ளது.


இவ்வாறு அமைக்கப்படும் வீடுகள் குறித்த தோட்டங்களை ஒன்றிணைத்து ஓர் இடத்தில் கட்டப்படவுள்ளது. இதனால் தொழிலாளர்கள் நன்மையடையும் அதே வேளை ஒரு புறம் பாதிக்கவும் படுகின்றனர்.

லயன்கள் எப்போதும் குறித்த ஒரு தோட்டத்தை அடிப்படையாக வைத்து அதற்கருகில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் காலையிலும் மாலையிலும் தோட்டத் தொழிலாளர்கள் தமது வேளைகளை முடித்துக் கொண்டு மிக அவசரமாக தமது இருப்பிடங்களை அடையக் கூடியதாக இருந்தது. கைக்குழந்தைகள், சிறு பிள்ளைகளை வீட்டிலே விட்டு விட்டு கொழுந்து பறிக்கச் செல்லும் வழக்கம் தற்போதும் இருந்து வருகிறது. அவசரம் ஏற்படும் பட்சத்தில் மதிய வேளைகளில் வீடுகளுக்கு சென்று தமது தேவைகளை முடித்து வரக்கூடிய வசதியும் இருந்தது.

தற்போது அமைக்கப்படும் வீட்டுத் திட்டமானது பல தோட்டங்களை ஒன்று சேர்த்து குறித்த இடத்தில் கட்டப்படுவதால் தொழிலாளர்கள் பல மைல் தூரம் சென்று வேளை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். பெரும் பாலும் லொறிகளிலே அவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். சில வேளைகளில் நடந்து செல்லக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட வாய்ப்புண்டு. அவசர நிலைமைகளில் மீண்டும் வீட்டை அடையக் கூடிய சந்தர்ப்பம் அவர்களை பொருத்தவரை கிடைக்காது. இதனால் கைக்குழந்தைகள் உள்ள தாய்மார் அவர்களை சுமந்துக் கொண்டு வேளைக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். இதனால் மீண்டும் பழைய புராணமாகவே அவர்களின் வாழ்க்கை மாறிவிடுகிறது.
எனவே அமைக்கப்படும் வீடுகள் தனித்தனியாகவோ, அல்லது மாடியாகவோ குறித்த லயங்களை அடிப்படையாக வைத்து அமைக்கப்படல் வேண்டும்.

காடு, மலை ஏறி கொழுந்து பறித்து, தமது உதிரத்தை வியர்வையாக விடும் தோட்ட தொழிலாளர்களின் துயர் படிந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வதாக எண்ணிக் கொண்டு மீண்டும் அவர்களை அதே இடத்தில் விட்டு விடுவது கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற முது மொழிக்கு நல்ல சான்றாக அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.     

இதே வேளை, நிர்மாணிக்கப்படும் வீடுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் பின்வரும் ஏழு விடயங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.வீடுகள் நிர்மாணிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்கள் நிரந்தரமாக பதிவு செய்திருக்க வேண்டும்.தோட்ட வீடமைப்பு கூட்டுறவுச் சங்கத்தில் அங்கத்தவராக இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக தோட்டத்தில் தொழில் செய்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.ஏற்கெனவே தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் பயனாளியாக இருப்பவர் புதிய இந்திய வீடமைப்புத் திட்டத்திலும் பயனாளியாக இருக்க முடியாது. ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயதையுடையவர்கள் புதிய இந்திய வீடமைப்புத் திட்டத்தில் பயனாளிகளாக இருப்பின் அவரது இளம் வயதையுடையவர்கள் தோட்டத்தில் தொழிலாளியாக இருக்க வேண்டியதும் முக்கியமாகும்.

தோட்டத்தில் நிரந்தரமாக தொழில் செய்து வரும் மேற்படி விடயங்களுக்குட்பட்ட தொழிலாளி தற்காலிகமான குடியிருப்பில் அல்லது தொடர் வலயக் குடியிருப்பில் வசித்து வருபவரென்று உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகையவர்களுக்கு புதிய இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும்.பட்சத்தில் ஏற்கெனவே வசித்து வந்த தற்காலிக குடியிருப்புகளில் எத்தகைய உரிமையையும் கோராமல் தோட்ட முகாமைத்துவத்துக்கு ஒப்படைக்க வேண்டும். இக்குடியிருப்புகள் தோட்டங்களில் ஓய்வூதியம் பெற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

மேற்கூறப்பட்ட விடயங்களுக்குட்பட்டவர்கள் தோட்ட முகாமைத்துவங்களுடன் தொடர்பு கொண்டு புதிய இந்திய வீடமைப்புத்திட்ட வீடுகளை பெற்றுக் கொள்ள பதிவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் நான்காயிரம் வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியமங்களை விரும்பியோ,விரும்பாமலோ நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு 200 வருடங்கள் ஆகின்றன. அன்று முதல் இன்றுவரை பிரித்தாளப்படுவதே நாம் இன்னும் மற்ற சமூகங்களைப்போல முன்னேற்றமடைய முடியாமல் இருப்பதற்கு காரணம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயமாக பல விடயங்களை சாதித்திருக்க முடியும். அன்று ஆங்கிலேயர்கள் செய்ததை இன்று இந்திய அரசாங்கம் செய்ய முற்படக்கூடாது.

இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டமானது ஒரு குறித்த தொழிற்சங்கத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுத்தப்படுவதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இந்திய அரசாங்கம் செயற்படுவதானது மிகுந்த வருத்தத்திற்கும் மலையக மக்கள் இந்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஒரு செயலாகவும் அமைந்துள்ளது.

இந்திய அரசாங்கம் நேரடியாக  வடக்கில்  வீடமைப்புகளை மேற்கொண்டு அந்த மக்களின் பாவனைக்காக கையளிக்கின்றது. இது வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும். அங்கே அவர்கள் தமிழத் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ வேறு அரசியல் கட்சிகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  ஏன் அதே நடைமுறையை மலையகத்தில் கடைபிடிக்க முடியாது என்ற கேள்வி எம்முள் எழுகின்றது.

அதைவிடுத்து குறித்த சில தொழிற்சங்கத்திற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுப்பதானது மலையகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வீண் குழப்பத்தையும் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கும்.

இதன்காரணமாக இந்திய அரசாங்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல விடயத்தை முன்னெடுக்கின்ற இந்த நேரத்தில் ஏன் இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அது மாத்திரமல்லாமல் தொழிற்சங்கங்களுக்கு இடையிலும் வீண் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. மக்களின் அமைதியான வாழ்க்கையை குழப்பும் ஒரு செயலாகவே இதனை கருத வேண்டியுள்ளது. அப்படி நடந்தால் தொழிலாளர்கள் தமது சக தொழிலாளர்களுடன் சண்டையிட்டுக்கொண்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றங்களுக்கம் செல்லும் நிலையே ஏற்படும்.

வீடமைப்பு திட்டம் என்பது உண்மையிலேயே வீடற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும்;. இதில் தொழிற்சங்க பேதமோ அல்லது வேறு எந்த ஒரு வித்தியாசமோ காட்டக்கூடாது. அப்படி நடந்தால் நிச்சயமாக சரியானவர்களுக்கு சென்றடைவதற்கான வாய்ப்புகள் இருக்காது.

மேலும் இந்திய அரசாங்கம் மலையகத்தில் அமைந்துள்ள தொழிற்சங்கம் அனைத்தையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டுமே தவிர அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. ஏனென்றால் அனைத்து தொழிற்சங்கங்களிலும் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களே. தொழிற்சங்கங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் நலன் கருதியே செயற்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக