ஞாயிறு, 11 மே, 2014

தொடர்ந்து ஒடுக்கப்படும் மலையக சமூகம்


இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம்.
பிரிட்டிஷ;காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம்.

கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின் மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியுஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது.

இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள்.

இலங்கை உற்பத்தியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்ட நாடல்ல. மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயம் மற்றும் கைத்தொழில்த் துறைகள் முறையே 11.1%, 30.4% பங்கைக் கொண்டிருக்கும். அதே நேரம் சேவைத் துறையோ 58.5% பங்கைக் கொண்டிருக்கின்றது. விவசாய உற்பத்தியில் பெருந்தோட்ட பயிர் செய்கையானது 2% பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதில் சிறு தோட்ட பயிர் செய்கையை போலவே பெருந்தோட்டங்களும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றது.

உடல் உழைப்பையே மையமாகக் கொண்ட உற்பத்தி இடம்பெறும் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவாக மதிப்பிடுவது பொது விதியாக உள்ளது. எனினும், இத்தொழிலாளர்களின் உடல் உழைப்பினால் பெறப்படும் உற்பத்திக்கான பெறுமதி மிகவும் அதிகமாகும். தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கூடிய சந்தை பெறுமதி வழங்கப்படுவது இன்றைய சந்தை பொருளாதாரத்தின் தலை விதியாகவுள்ளது. இதனூடாக, உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உயர் சுரண்டலுக்கு ஆளாகும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை சேவைத் துறையில் தங்கியுள்ள பொருளாதார முறையைக் கொண்ட நாடு என்ற ரீதியில் அதன் பொருளாதாரத்தை பராமரிக்க உற்பத்தித் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களை மிகையாக சுரண்டவேண்டிய தேவை காணப்படுகின்றது. இத்தேவைக்கு அதிகம் பலியானவுர்களும் இன்றும் பலியாகிவருபவர்களும் பெருந்தோட்ட தொழிலாளர்களே.

இதே வேளை இன்றைய கால சூழ்நிலையில் சுரண்டலுக்கு உள்ளாகும் பெருந்தோட்ட மக்களை இயற்கையில் வளரும் வன ஜீவராசிகளும் விட்டு வைத்ததாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது 'ஒரு தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குளவிக் கொற்றுக்கு இலக்கானர்' என்ற செய்தி நாளேடுகளில் வெளியாகிறது. குளவிகள் தேயிலை மரங்களில் தமது கூடுகளை கட்டும் அளவுக்கு குறித்த தேயிலை தோட்ட பராமரிப்பாளர்களால் தேயிலை பராமரிக்கப்படுகின்றது.

தொலை தூரம் சென்று, காடு மலை என பாராமல் உதிரம் சிந்தி கொழுந்து பறிக்கும் கரங்களை குளவிக் கொட்டுவதிலிருந்து பாதுகாப்பது யார் கடமை?. குறித்த தோட்டத்துக்கு பொறுப்பான முதலாளிமார் கொழுந்து பறிக்கச் செல்லும் மலைக்கு ஒரு நாள் முன்பே சென்று அந்த மலையின் பாதுகாப்பினை உறுதி செய்வதே அந்த விபத்தை குறைக்க சிறந்த வழியாகும். இருவர் அதற்கு பொறுப்பாக போடப்பட வேண்டும். தொழிலாளிகளின் பாதுகாப்பு தொடர்பில் அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அதனையும் தாண்டி குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளிகளுக்கு நிவாரண பணமும் வழங்கப்பட வேண்டும். காரணம் குறித்த தொழிலாளி மருத்துவ வசதிகளை பெற தனியார் வைத்தியர்களை நாட வேண்டும். அரச வைத்தியசாலைகளில் அதற்கான உடனடி மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை. ஆகவே தனியார் மருத்துவ சிகிச்சை பெற தொழிலாளி வசதி படைத்தவன் அல்ல. எனவே தோட்ட பராமரிப்பாளர்கள் அதற்கான நிவாரணங்களை வழங்க வேண்டும்.

அதே போன்று குறித்த தொழிலாளிக்கு அவ்விபத்தினை தொடர்ந்து வரும் சில தினங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். காரணம் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தினை நம்பியே ஜீவியம் நடத்துபவர்கள். அவர்கள் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை எனின் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே குறித்த நிர்வாகம் இது குறித்தும் கரிசணை செலுத்த வேண்டும். தொழிற் சங்கங்களும் இது குறித்து தமது கவனத்தை செலுத்த வேண்டும்.

சுய இலாபத்துக்காக அரசியல் பேசித் திரியும் தலைவர்கள் குளவி விவகாரத்திலும் தமது கவனத்தை செலுத்த வேண்டும். மக்களின் வாக்கை பெற்று அரசியல் பேச வரும் தலைவர்கள் ஏன் அவர்களின் தேவைகள் தொடர்பில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இதுவா உண்மையான விசுவாசம். எனவே அரசியல் தலைவர்கள் பிரச்சினை போன்று விளங்காத, எனினும் தொழிலாளிகளின் வாழ்வில் பெரிதும் தாக்கத்தை செலுத்தும் இவ்வாறான பிரச்சினை தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.   
      
18 ஆம் நூற்றாண்டில் இருந்து இலங்கையில் முக்கிய உற்பத்திப் பிரதேசமான மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் எல்லா அம்சங்களிலும் பின்னடைவுக்கு உட்பட்டிருப்பதில் இருந்து இவர்களின் உழைப்பைப் பெற்று உற்பத்தியைப் பெறுவது மட்;டுமே நோக்கம் என்பது வெளிப்படுகின்றது.

உற்பத்திக்கு உடல் உழைப்பை வழங்கும் தொழிலாளர்கள் அவர்களின் குடியிருப்புகள் மற்றும் பிரதேசங்கள் முன்னேற்றமடையத் தேவையில்லை என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் தோட்ட முகாமையாளர்களிடமும் இன்றும் கூட நிலவுகிறது.

உற்பத்தியைத் தொடர்ந்து செய்வதற்கு உடற்சக்தியைப் பெறக்கூடிய உணவை பெறவழி செய்தால் போதும் என்று ஆங்கிலேயர் கருதினர். அதற்கு உணவு மானியங்களையும் வழங்கினர். ஆனால், இன்றோ பொருளாதார நெருக்கடிக்குள் உடற் சக்தியைப் பெறுவதற்கான உணவை பெறவே மலையக மக்கள் போராடுகின்றனர்.  

இப் போராட்ட வாழ்வில் குளவி கொட்டு போன்ற சிறு சிறு விபத்துக்களும் நேர்கின்றன. இதனால் அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எனவே உற்பத்தியை பெறுவதை மட்டும் நோக்காக கொண்டு அவர்களின் உழைப்பை புறக்கணிக்க வேண்டாம். குளவி கொட்டு போன்ற சிறு சிறு விபத்துக்களையும் தவிர்க்க முற்படும் பட்சத்தில் இன்னும் உற்பத்தியில் கூடிய பயனை பெறலாம் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக