ஞாயிறு, 8 ஜூன், 2014

மலையக மக்களுக்கு சவாலாக விளங்கும் சுகாதார, வைத்திய வசதிகள்!


தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களை பரவலாகக் கொண்டது மத்திய மலையகம். மலையகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுவாக தேயிலை செய்கையே செறிவாகக் காணப்படுகின்றது.


அபிவிருத்தி பாதையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் தோட்டபுறங்களில் நிறைவேற்றப்படாத தேவைகள் ஏராளம் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. போஷhக்கு‚ சுகாதாரம்‚ தொழில்வாய்ப்பு‚ சமூக அந்தஸ்து‚ கல்வி மற்றும் பொருளாதாரம் போன்றவற்றுடன் உட்கட்டமைப்பு வசதிகளிலும் பெரியதொரு மந்த நிலையிலேயே காணப்படுகிறது. மேற்கூறிய தேவைகளில் காணப்படும் வெற்றிடம் பெரும்பாலும் தோட்டதொழிலாளர்களுக்கே சவாலாக அமைகிறது. அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத பொருளாதாரத்தைக் கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏனையத் தேவைகள் எட்டாத கனியாக இருக்குமென்பதை யாரும் ஊகித்துக் கொள்ளலாம்.

இதன் ஒரு அங்கமாகவே, தோட்ட தொழிலாளர்கள் மலையகத்தில் எதிர் நோக்கும் சுகாதார பிரச்சினைகள் நோக்கப்படுகிறது.

மலையக பிரதேசத்தில் விரைவாக ஒரு மருத்துவ உதவியை அல்லது சிறந்த தராதரத்திலான மருத்துவ வசதிகளை பெறக்கூடிய மருத்துவமனைகளோ, போதுமான இட வசதிகளை கொண்ட மருத்துவமனைகளோ இல்லை இது மேற்குறிப்பிட்ட உறுப்புரைகளை அப்பட்டமாக மீறுவதாகும.; என்பதோடு இவ்வகை உரிமைகளை ஏனையோர் அனுபவிக்கும் போது மலையக மக்களுக்கு வழங்காமை பாரபட்சமாகவே கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக தலவாக்கலை மக்கள் அங்கிருந்து 30 கிலோமீற்றர் தாண்டியுள்ள நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும், இராகலை மக்கள் அங்கிருந்து 20 கிலோமீற்றர் தாண்டியுள்ள நுவரெலியா வைத்திய சாலைக்கும் இன்னும் மலைப்பிரதேசங்களில் வசிப்போர்; ஏறத்தாழ 50-70 கிலோமீற்றர் தாண்டியே ஒரு அரசாங்க வைத்தியசாலையை அடைய வேண்டியுள்ளது. இதற்கிடையில் மகப்பேறுக்காக வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் ஊடாக லொறிகளில் மிருகங்களை போல ஏற்றி வரப்பட்டு சில வேளை இடையே குழந்தை பிறந்து அதிக இரத்தக் கசிவுகளால் இறந்து போகும் சம்பவங்கள் நடக்கின்றன

வெளிஓயாவில், இராகலையில் அண்மைய காலங்களில் இவ்வகை சம்பவங்கள் இடம் பெற்றுள்ள இது பற்றி அரசாங்கம் கவனம் எடுப்பதில்லை அரசாங்க வைத்திய வசதியை நாடுவதற்கு தோட்ட வைத்திய அதிகாரியின் கடிதம் எதற்கு தேவை? அவருக்கும் அரசாங்கத்திற்கும் என்ன தொடர்பு? இந்த நிலையில மலையக பெருந்தோட்ட மக்கள் அரசாங்க வைத்திய சாலையில் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர். இலங்கையில் சுகாதாரம் சிறந்த நிலையில் இருந்தாலும் தொற்று நோய்கள், சிசு மரண வீதம் அதிகரிப்பு, தாய்சேய்; நலன் பாதிப்பு, குறைந்த ஆயுள்; காலம் கொண்ட மக்கள் வாழ்வது மலைய பிரதேசங்களிலே என்பதை புள்ளி விபரங்கள் மூலம் அறியலாம். எனவே அரசாங்க சேவைகள் கிடைக்காமை மக்களின் அடிப்படை உரிமை மீறல் இல்லையா?

அண்மைய காலங்களில் தோட்டப்புறங்களில் செய்து வந்த கட்டாய குடும்பக் கட்டுபாட்டு திட்டத்தினால் இன அழிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வாழும் உரிமை மீறலாகும் அதற்கு யார் நிவாரணம் வழங்குவார்?

ICESCR (Article 12) 'அனைவரும் உடல் உள ரீதியான மிக உயர்ந்த அளவிலான சுகாதாரத்தினை பெற உரிமையுடையவர்கள்                                          (Art 25 (1) of UDHR) 'ஒவ்வொருவரும் வாழ்க்கை தராதரத்துடன் வாழ தேவையான சுகாதாரம், குடும்ப மேம்பாடு, உணவு, உடை, வீடு மருத்துவம் ஏனைய சமூக சேவைகள், வேலையில்லாமை, சுகயீனம், முடியாமை விதவையானமை, வயது முதிர்ந்தமையால் ஏனைய வாழ்வாதார குறைபாடுகள் காரணமாக பாதுகாப்பு பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்'    (Art 25.2) 'இவை ஒவ்வொரு தாயிக்கும் சிசுக்களுக்கும், குழந்தைக்கும், சிறுவர்களுக்கும் உரியது இதில் வேறுபாடு காட்ட முடியாது' என்கின்றது.

இவ்வாறான விதிகள் எழுதப்பட்ட நிலையிலேயே மலையகத்தை பொறுத்தவரை காணப்படுகிறது. மலையக பிரதேசங்களில் எங்கு பார்த்தாலும் சுகாதார பிரச்சினைதான். மருத்துவ பொருட்களின் குறைபாடு தொடக்கம் வசதிகளற்ற வைத்தியசாலைகள் வரை சகல விதத்திலும் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவையும் ஒரு வகையில் அவர்களின் மனித உரிமை மீறலே. இது தொடர்பில் அன்றாடம் செய்திப் பத்திரிகையில் செய்திகள் வெளியாகின்ற போதும் எவ்வித தீர்வூம் எட்டப்படடுவதாக தெரியவில்லை.

மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலையில் பாரிய அளவில் மருத்துவ தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்து வகைகள் கூட இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அண்மையில் குளவி கொட்டி வந்த 5 பேருக்கு வழங்க வேண்டிய ஹைட்ரோ கொட்டிசன் என்ற ஊசி மருந்து கூட இல்லாததனால் நோயாளர்கள் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க வேண்டி யேற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பில் ஒவ்வொரு பிரிவினரும் தாம் தப்பிக் கொள்வதற்காக தமக்கு மேலால் உள்ள அதிகாரிகளை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். இதனை தீர்த்து வைப்பதற்கு யாரும் முன்வருவார் இல்லை.

Sanjeewa V. Suraweera OIC Police Station Wattala , Priyanisoyza V. Arrasakularatne ஆகிய வழக்குகளில் 'இலங்கை பிரஜை தான் மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் இடம் தனியார், அரசாங்க வைத்தியசாலையா என்பதை தீர்மானிகக்க உரிமையுண்டு இது வாழும் உரிமையின் அங்கம்' என தீர்த்தது      (See Also Art 12 of ICESCR) மலையக தமிழ் மக்கள் தமது அடிப்படை வசதிகளையேனும் பூர்த்தி செய்ய வசதியீனத்துடன் வாழ்கின்றனர். இவர்களது உரிமை மீறல்களுக்கு அரசாங்க சமூக சேவைகள், நிர்வாகமே காரணம் என்பதில் எவ்வித முரண்பாடான கருத்தும் தோன்ற வாய்ப்பில்லை.

வைத்தியசாலை என்றால் நோயாளர்களுக்கு நோய் தீர்க்கும் நிலையங்களாக இருக்க வேண்டும். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையின் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது.

அண்மைக்காலமாக இவ் வைத்தியசாலையில் பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிகாட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கிளங்கன் வைத்தியசாலைக்கு அல்லது நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் என வைத்தியர்கள் தெரிவிப்பதாக நோயளிகளும் பொது மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அண்மைகாலமாக இப்பிரதேசத்தில் இருந்து நோயாளர்கள் வைத்தியசாலைக்கு செல்லும்போது வைத்தியர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்வதில்லை என நோயளிகளும் பொது மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான வைத்தியசாலைகள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான சூழ்நிலை காணப்படுவதால் பலர் உயிரிழக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் தொடரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்ற வாய்ப்புள்ளது.

இவ்வாறு பல்வேறு குறைபாடுகள் நிலவும் வைத்தியசாலையில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவது சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது.

அத்தோடு வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் சிறந்த முறையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

போதுமான நீர், சுத்தமான உயர்தரத்திலான சுகாதாரம் மின்சாரம், மருந்து வசதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கடமைப்பட்டவர்கள் யார்? அரசாங்கமா? பெருந்தோட்ட தனியார் தோட்ட நிறுவனமா? நிறுவனங்கள் எனில் நாம் ஏன் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்? அரசாங்கம் என்றால் நாம் ஏன் நிறுவனத்திடம் முகாமைத்துவத்திடம் அனுமதி பெற வேண்டும்?

இங்கு மக்கள் வாழும் சுற்றாடல் மிகவும் மோசமானதாகவே உள்ளது. பராமரிப்பு குறைவாக உள்ள சூழலில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கும் கால்நடைகளும் திரிவதால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குரியதாகவே உள்ளது. சிறுவர்கள் மட்டுமன்றி பெரியோர்களும் சரியான சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றாத நிலையே இங்கு காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பலவிதமான நோய்கள் பரவி வருகின்றன. மருந்து இல்லாததால் இவ்வாறான நிலையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை வெளியில் வாங்க துண்டுகள் வழங்குகின்றனர். இதனால் பணம் இல்லாத தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர்.

எமது நாட்டின் பொறுப்புள்ள சுகாதார அமைச்சர் இன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டினுள் சுபிட்சமான சுகாதார சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவரையே சாறும். உயர்ந்த பதவிகள் கிடைத்துள்ளது என்பதற்காகவாவது உள்நாட்டின் சுகாதார நலனில் அதிலும் குறிப்பாக மலையக மக்கள் எதிர் கொள்ளும் சுகாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வரலாம் அல்லவா?    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக