வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கழிவு எண்ணெய் கசிவால் அல்லல்படும் குடா நாட்டு மக்களுக்காக ஒன்றுபடுவோம்...!!!

சுண்ணாகத்தில் இயங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவாக வெளியேறிய எண்ணை சரியான முறையில் பாதுகாக்கப்படாததால்
சுண்ணாகமும் அதனை அண்மித்த கிராமங்களின் மண் அடித்தள நீருடன் கலந்து கிணற்றுள் ஊறிய  அதிர்ச்சியளிக்கும் செய்தியை அறிந்துள்ளோம்.

இந்த எண்ணைக்கழிவு நிலத்தடியில் உள்ள நீரூற்றுடன் கலந்தவிட்டமையாலேயே கிணறுகளில் ஊறும் உற்றுக்களில் கழிவெண்ணை கலந்து காணப்படுகின்றது.

வளங்களிலேயே மனித வளமே மிகவும் பெறுமதி மிக்கதாகும். நோயற்ற சமூகமே ஒரு தேசத்தின் சொத்தாகும். நீரோடு கலந்துவிட்ட எண்ணைக்கழிவை பிரித்தெடுக்கவே முடியாத அபாயகரமான நிலை தோன்றியுள்ளது.

இது நோய்கொல்லி வைரஸ்சுக்குச் சமனானது. முற்றுமுழுதாக மண் பழுதடைந்தேவிட்டது. சுண்ணாகத்திலிருந்து தெல்லிப்பழை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருக்கின்றது.

இவ்வளவு தூரத்திற்கு எண்ணைக்கழிவு  வந்திருக்கிறது என்றால் நீர் ஊற்றோடு அது கலந்துவிட்டது. நிலத்தில் பெய்யும் மழை நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பல நிலக்கீழ் படிவங்களால் வடிக்கப்பட்டு ஊற்றாக மாறுகின்றது.

இனிவருங்காலத்தில் பெய்யும் மழைநீர் இந்தப் எண்ணைப் படிவங்களைக் கடந்து செல்லும் போது அவ்வெண்ணைக்கழிவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு செல்லும்.

இந்த எண்ணைக்கழிவினால் பல கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட மண்ணும் நீரூற்றும் பழுதடைந்தவிட்டன.

இந்த எண்ணைக்கழிவு இவ்வாறு மண்ணுள் ஊறி நீரோடு கலந்தமை ஒரு நாளில் இரு நாளில் நடந்தவை அல்ல. சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக எண்ணைக்கழிவு மண்ணில் பாய விடப்பட்டதானேலேயே இந்நிலை தோன்றியுள்ளது.

எனவே வட மாகாண சபைக்கென்று சுற்றுப்புறச்சூழல் பாதுகப்பு அமைச்சொன்று இருந்தும் இப்படியொரு பாதகமான நிலை ஏற்பட ஏன் விட்டார்கள் என்பதே அவர்கள் முன் வைக்கும் கேள்வியாகும்.

வடமாகாண சபைக்குட்பட்ட தொழிற்சாலைகளில் என்னென்ன பொருட்கள் உற்பத்தியாகின்றன, அத்தொழிற்சாலைகளில் பொருள் உற்பத்தி செய்யும் பொது வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாமல் தகுந்த முறையில் மக்களுக்கு கெடுதல் செய்யாதவாறு கொட்டப்படுகிறதா என்பதை சுற்றுப்புறச்சூழல் அமைச்சு அக்கறையுடன் கவனித்து வந்ததா எனக் கேள்வி எழுகின்றது. அவர்கள் அதைப்பற்றி அக்கறைப்படவில்லையோ எனத் தோன்றுகின்றது.

அல்லது இது மாகாண சபைக்குரிய வேலையல்ல என அவர்கள் சொல்லப் போகிறார்களா?.

ஒரு துளி எண்ணைக்கழிவு கலந்த நீரை சிறுவர் சமுதாயம் குடிக்கம் பட்சத்தில் எதிர்காலச் சமுதாயமே நோயுற்று மலடடுத்தன்மை உடையதோ அல்லது நலிந்த உடலைக் கொண்ட சமூகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலை தோன்றலாம்.


மின்பிறப்பாக்கித் தொழிற்சாலை உரிமையாளர்கள்  கொலைக்குற்றத்திற்குச் சமனான கெடுதலைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல இத்தவறைக் கண்டுகொள்ள அக்கறை காட்டாத வட மாகாண சபையுந்தான் பொறுப்பு.

வெளிநாடுகளுக்கு போய் மேடை மேடையாக தமிழர் வரலாற்றைப் பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவுப் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தார்களா. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க இந்த நாடுகள் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்ற என்பதை அறிய முயற்சித்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.

வெளிநாடுகளுக்கு போகும் வேளைகளில் எல்லாம் மொகஞ்சதாரோ சரித்திரத்தையும்  குமரிக்கண்டத்தையும் பற்றி அங்குள்ள தமிழர்களுக்கு சொல்வதுதான் இவர்களின் வேலையா?.

எண்ணைக் கழிவு என்ற பேராபத்துக்கு வட மாகாண சபை என்ன தீர்வைக் காணப் போகின்றது. எவ்வளவு காலத்திற்கு மக்களுக்கு உண்மையை மூடிமறைக்கப் போகின்றது.
பதில் என்ன?.

யாழ் குடாநாடு, நிலத்தடி நீர் சம்பந்தமாக, சுன்னாகம் மின்நிலையத்திலிருந்து வெளியேறி கிணறுகளில் படியும் கழிவு எண்ணெய் மற்றும் ஒட்டுமொத்தக் குடாநாட்டுக்குமான நன்னீர்ப் பிரச்சினை என் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது.

இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் வெளிவராத பல செய்திகளை கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் என்று ஆரம்பித்த கழிவு எண்ணெய் கிணறுகளில் கலக்கும் விவகாரம் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி விட்டது.

இலங்கை மின்சாரசபை ஏனைய கோபுரங்களுடன் தொடர்பில்லாத நிலையில் பார எரிஎண்ணெய் (Heavy fuel oil) மூலம் இயக்கும் ஜெனரேற்றர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதன் கழிவு எண்ணெயை தவிர்ப்பதற்கான Oil Separator வழிமுறை பாவிக்கப்படாதே இந்த விபரீதத்திற்குக் காரணம். மறுபக்கமாக யாழ் குடாநாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சம் கிணறுகளில் 40 வீதமானவை உவர்நீரைக் கொண்டிருக்கின்றன.

குடாநாட்டில் நன்னீருக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இதற்கான உடனடிப் பரிகாரம் காணப்பட வேண்டும். யாழ்ப்பாணம் ஆறுகள் இல்லாத ஒரு பிரதேசம். ஆனையிறவு, வடமராட்சி, அரியாலை போன்ற இடங்களில் கடல்நீரேரிகளே இருக்கின்றன. இவற்றிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்தால் இவை நன்னீராக மாறும் இதற்கான திட்டம் 1960க்களில் உருப்பெற்று பின்னர் அப்படியே இருக்கிறது.

எனவே கடலணைகளைக் கட்டுவதோடு, வவுனியாவில் ஆரம்பித்து இரணைமடுவிற்கு வரும் நீர் மீதாமாகிக் கடலுடன் கலப்பதைத் தவிர்த்து அந்த நீரையும் ஆனையிறவில் சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அவ் பகிர்ந்து கொண்டார்.





யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலத்தடி நீருடன் கலந்துள்ள கழிவு எண்ணெய் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் வளர்ந்து வரும் அதேவேளை யார் யாருக்கெதிராகவெல்லாம் போராட வேண்டி இருக்கின்றது என்ற பெயர்ப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது....

27.01.2014 அன்று சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்;பாக நீண்ட காலமாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த மின் உற்பத்தி நிறுவனத்தை மூடிவிடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இத் தீர்ப்பானது பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரியதொரு வெற்றியாகும்.




சுன்னாகம் பகுதியில் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினர் போத்தல் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் புட்டு அல்லது இடியப்பம் அவித்த பின்னர் அந்த நீரைத் தமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதாகவும் வளர்ந்தவர்களாகிய தாங்கள் சாதாரண நீரைக் குடிப்பதாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் நாம் செய்ய வேண்டிய ஏதோ ஒன்றைத் தாமதமாகச் செய்வதாக நான் உணர்ந்தேன்.

இன்னுமொரு நண்பர், இதில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு ஏதோ அரசியல் பின்னணி இருப்பதாகச் சந்தேகம் கொள்வதாகத் தெரிவித்தார். நான் சிரித்து விட்டுச் சொன்னேன் ' சில காலத்தில் அரசியல் நடாத்துவதற்கு இங்கு எவரும் இருக்கப் போவதில்லை, அப்போது சுடுகாடான எமது பிரதேசத்தில் சுடுகாட்டுச் சூழலியலும் சுடுகாட்டுச் சுகாதாரமும் நடாத்திப் பார்க்கட்டும்' என்றேன்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் நலன்விரும்பிகள் அனைவரும் நமது தேசத்தின் முக்கிய பிரச்சனை சம்பந்தமாக அக்கறையுடன் செயற்படுமாறும் தாய்நாட்டில் வாழும் உறவுகளுக்கு கழிவு எண்ணெய் கலந்த நீரை அருந்த வேண்டாம் என அழுத்தமாகச் சொல்லும் படியும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

உண்மை காக்கும் சமூக வலைத்தளங்கள்

தண்ணீர்ப்பிரச்சினையானது நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் வளர்ந்து கொண்டே வருகின்றது. இனுவில் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகளில் அதிகளவு எண்ணெய்ப்படலம் தென்படுவதனால் மக்கள் பீதி அடைந்து நல்ல தண்ணீருக்காக அலைகிறார்கள். திடீரென நன்னீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பிரதேச சபையினரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். இதற்காக ஏராளமான தண்ணீர் பௌசர் வண்டிகளும் தண்ணீர்த் தாங்கிகளும் தேவைப்படுகின்றன. இவற்றை மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒழுங்கு செய்ய வேண்டிய அமைச்சர்களும் அதிகாரிகளும் குழு அமைப்பதிலும் பொய்யான பிரச்சாரங்கள் செய்வதிலுமே கண்ணாய் இருக்கிறார்கள்.

வைத்தியர்களுக்குத் தடை

பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை விளிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுற்றுச் சூழல் அமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சரும் கடுமையாக உத்தரவிட்டிருக்கின்றார்கள். மக்கள் விளிப்படைந்து தம்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அவர்கள் உண்ர்கிறார்களாம். ஊடகங்களுக்கு வைத்திய அதிகாரிகள் தகவல் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதான கண்டிப்பான கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது முற்றுமுழுதான அடக்குமுறையான நடவடிக்கை என்பதுடன் எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எமது கருத்துச் சுதந்திரத்தையும் எமது நற்பணிகளையும் அடக்குவது என்பது கீழ்த்தரமான நடவடிக்கை ஒன்றாகும்.

நண்பர்களே!

இப்பிரச்சினையைத் தீர்பதிலும் மக்களை இதிலிருந்து விரைவாகக் காப்பதிலும் இந்த அமைச்சர்களோ சில ஊடகங்களோ துளிஅளவும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் ஆகிய எமக்கு பெரிதும் உதவப் போவது சமூக வலைத்தளங்களே.
தயவு செய்து எமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்! செய்திகளை விரைவாகப் பரப்புவோம்! விரைவான நடவடிக்கை மூலம் எமது வளமான தேசத்தை இந்த அளவிலாவது காப்பாற்றுவோம்!



ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்! எனும் மகுடத்தின் கீழ் யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீருடன் எண்ணெய் கழிவுகள் கலக்கும் மிக மோசமான நிலையை எதிர்த்து எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் எமது பலத்த எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றுபடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக