புதன், 16 ஜனவரி, 2013

ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது, இனி எதற்காகவும் அழமாட்டாள்!




ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது, இனி எதற்காகவும் அழமாட்டாள்!

 சவூதி அரேபியாவில் அதிகமாக வெள்ளிக்கிழமைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் ரிசானாவுக்கு புதன்கிழமையென நாள் குறிக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணிக்கு ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது.


அது நடந்தே விட்டது....!
சட்டத்தின் பெயரில் மனிதாபிமானம் தோற்றுப் போனது.
நமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறாமல் போயின.
நமது வேண்டுதல்கள் எல்லாம் வீணாக ஆகின.
நமது மன்றாட்டங்கள் எல்லாம் மண்ணாகிப் போகின.
நம்பிக்கைகள் எல்லாம் நாதியற்றுப் போயின.
ரிசானாவின் தலைக்கு கத்தி வைக்கப்பட்டாயிற்று
காம்பில் இருந்து மலரொன்று உதிர்ந்து விழுவதை விடவும் வலியுடன் அவளது மரணம் நிகழ்ந்திருக்கின்றது.


வறுமையின் கோரம்


கிழக்கு மாகாணத்தின் மூதூர் கிராமத்தின் ஒரு ஒதுக்குப் புறமாக இருக்கின்றது ரிஸானா நபீக்கின் குடிசை. பெண்பிள்ளைகளைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பம். சுனாமி அனர்த்தத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டது.


அவரது தந்தையான நபீக் தொழில் இழந்தார். அன்றாடம் அடுப்பில் உலை வைப்பதற்கே திண்டாட வேண்டியிருந்தது. ஆயினும் தனது பிள்ளைகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் நபீக் தம்பதியர் பாடசாலைக்கு அனுப்பி வந்தனர்.


ரிஸானா படிப்பில் கெட்டிக்காரி என்று அவரது ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார். கெட்டிக்காரியாக இருந்தென்ன இளமையில் வறுமையால் அவதிப்பட்டாள் ரிஸானா. ஒரு கட்டத்தில் ஏதோவொரு முடிவுக்கு வந்தவளாய் தனது தாயாரிடம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.


அதற்கு காரணமாக இருந்தவர் அவரது தந்தையின் தாயார் (பாட்டி). ஆனால் 17 வயதே பூர்த்தியாகாத பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்புவதா? என எண்ணியவளாக அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார் தாயார் பரீனா.


ஆனாலும், குடும்பநிலை ரிஸானாவை வாட்டிக் கொண்டிருந்தது. தான் வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து வந்தால் நமது கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துபோகும் என கூறிக்கொண்டே இருந்தாள்.


அப்போது ஊரிலுள்ள வேறொருவரின் தொடர்பு அவர்களுக்கு கிடைக்கின்றது. அவரும் ரிஸானாவின் எண்ணத்தை நியாயப்படுத்தினார். பெற்றோரின் கருத்துநிலை மெல்ல மெல்ல மாற, ரிஸானா சவூதி அரேபியா செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


சவூதி பயணம்


தமது வீட்டிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவிலுள்ள திருகோணமலைக்கே போக தைரியமில்லாத ரிஸானா, கடல் கடந்து பயணித்து 2005 மே 04ம் திகதி சவூதி அரேபிய மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.


பெற்றோரையும் பாடப் புத்தகங்களையும் தவிர வேறு எதனுடனும் பரிச்சயமில்லாத இளம் யுவதியான இவளிடம், கண்காணாத தேசமொன்றில் வந்திறங்கிய போது சவூதி பற்றிய முன்னறிவோ மொழியறிவோ இருக்கவில்லை.


சவூதி அரேபியாவுக்கு சென்றவுடன் ஒரிரு தினங்கள் வேறொரு வீட்டில் ரிஸானா தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னரே நயிப் ஜிசியான் கயிப் அல் ஒடைபி என்பவரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிக்கமர்த்தப்பட்டு இருந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.


அந்த வீட்டில் உடு துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளுடன் சில வேளைகளில் ஜிசியானின் 4 மாதக் குழந்தையை பராமரிக்கும் வேலையையும் அவரது மனைவி இந்த யுவதியிடம் ஒப்படைத்துள்ளார்.


தனது கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் எந்த வேலையையும் முகம் சுழிக்காமல் இவர் செய்து கொடுத்துள்ளார். அத்துடன் தனது பெற்றோருக்கு கடிதமொன்றையும் எழுதியிருந்தார்.


அந்த சம்பவம்


அன்று ஞாயிற்றுக்கிழமை. 2005 மே 22ம் திகதி. ஜிசியானின் மனைவியான வீட்டு எஜமானி தனது பச்சிளம் குழந்தையை ரிஸானாவின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளியில் எங்கோ சென்றிருக்கின்றார்.


அப்போது குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டுமாறும் கூறிச் சென்றுள்ளார். வீட்டுப் பணிப்பெண்ணான இவளுக்கு குழந்தை பராமரிப்பாளர் பணியை ஒப்படைப்பது தவறானது என்பது எந்த அதிமேதாவிக்குப் படவில்லை.


தனது தினசரி பணிகளை முடித்துவிட்டு ரிஸானா குழந்தைக்கு போத்தலில் இருந்த பாலை ஊட்ட ஆரம்பித்துள்ளார். குழந்தைப் பராமரிப்பில் சற்றும் முன் அனுபவம் அற்றவரான இவ் யுவதி, தான் பார்த்தறிந்த விடயங்களை வைத்தே குழந்தைக்கு பாலூட்டி இருப்பார் என்பதை நன்றாக ஊகிக்க முடிகின்றது.


பாலூட்ட ஆரம்பித்து ஒரிரு நிமிடங்களில் மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அந்தப் பிள்ளைக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்தார்.


ஆனால், அப்பச்சிளம் குழந்தை மூர்ச்சையாகிவிட்டது. அந்த நேரத்தில்தான் வீட்டு எஜமானி திரும்பி வந்தாள். பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதைக் கூட சரியாக சொல்வதற்கு ரிஸானாவுக்கு மொழி அறிவு இருக்கவில்லை.


ஏதோ புரியாத அரபு வார்த்தைகளால் ரிஸானாவை திட்டித் தீர்த்த வீட்டுக்காரி, குழந்தையை வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச் சென்றார். இருப்பினும் ஏற்கனவே அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.


சற்று நேரத்தில் வீட்டுவாசலில் பொலிஸார் நின்றனர். வீட்டு எஜமானி அழுதவாறே, புரியாத மொழியின் மோசமான சொற்கள்கொண்டு ரிஸானாவிற்கு வசை பாடினார். மறுபுறத்தில் தனது பிள்ளையை இவள் கொலை செய்து விட்டாள் என முறைப்பாடு செய்தாள். பொலிஸார் ரிஸானாவை கைது செய்து சென்றனர்.


பொலிஸார் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிஸானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.


பிரதிவாதியான ரிஸானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். தன்பக்க நியாயங்களுக்கான சாட்சியங்களை நிரூபிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருந்தார்.


நீதிமன்ற தீர்ப்பு


நீதிமன்றத்திற்கு தேவை சாட்சியங்களும் ஆதாரங்களும்தான் என்ற நிலையில், அவை ஒன்றும் ரிசானாவிடம் இருந்து முன்வைக்கப்படவில்லை. அதற்கான உதவியோ வாய்ப்போ அறிவோ அந்த அப்பாவிக்கு இருக்கவில்லை.


இந்நிலையில், இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் ரிஸானாவை குற்றவாளியாக இனங்கண்ட தவாத்மி மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


நீதிபதி அப்துல்லா அல்- றொசைமி தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு 2007 ஜூன் 16ம் திகதி இத்தீர்ப்பினை வழங்கிய போது, ரிஸானா தரப்பினர் விரும்பினால் மேன்முறையீடு செய்யலாம் என்று அறிவித்தது.


இதன்படி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மேன் முறையீட்டு நீதிமன்றினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள வலியுறுத்திய போது, மனிதாபிமானிகளுக்கு இருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் இல்லாது போய்விட்டது.


அதற்குப் பிறகு மனிதாபிமானத்தின் பெயராலேயே மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது. சவூதி மன்னரிடம் 2006ம் ஆண்டு ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் கடிதமொன்றை அனுப்பினார்.


அக்கடிதம் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் மன்னருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ந்த மன்னர் உள்துறை அமைச்சின் ஊடாக வீட்டு எஜமானருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தினார்.


ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில், குற்றமொன்றின் மூலம் பாதிக்கப்பட்டவரே அதற்கான மன்னிப்பை வழங்கும் மீயுயர் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதற்கான வேண்டுகோளை மன்னர் விடுக்க முடியுமே தவிர உத்தரவிடவோ, மன்னிப்பு வழங்கவோ முடியாது என்பதே அதற்கான காரணமாகும்.


அதன்படி, மரணித்த குழந்தையின் தந்தையை நாடிச் சென்று காலைப் பிடித்து கதறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆனால், இதற்கென அனைத்துத் தரப்பினரும் கடைசி வரையும் முயற்சித்தனர்.

இதுதான் இதுவரைக்குமான முன்கதைச் சுருக்கம்.


விடுவிக்கும் முயற்சி


இலங்கை யுவதி ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இலங்கைத் தூதரகத்திற்கு தெரியவந்திருந்த போதிலும் அது குறித்து தூதரகமோ, வெளிவிவகார அமைச்சோ விரைந்து செயற்படவில்லை என்பதுதான் மனித உரிமை அமைப்புக்களின் பிரதான குற்றச்சாட்டாகும்.


இலங்கை அரசாங்கம் உள்ளார்ந்த அக்கறையுடன் இதனை அணுகவில்லை என்பதும் இன்னுமொரு குற்றச்சாட்டாகும்.


2005ம் ஆண்டு மே மாதம் ரிஸானா நபீக் சிறைக்குள் சென்றிருந்த போதும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக இவ்விடயம் வெளியுலகுக்கு மட்டுமன்றி அவரது பெற்றோருக்கே தெரியவரவில்லை என்பதுதான் மன வருத்தமான செய்தி. தங்களது மகள் கடிதம், பணம் எதுவும் அனுப்பாவிட்டாலும் எங்கோ சந்தோசமாக இருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தனர் பெற்றோர்.


இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியானதும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழித்துக் கொண்டனர். முதன்முதலாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவே இவ்விடயத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தது. ஊடகங்களோடு பரிச்சயமற்ற ரிஸானாவின் பெற்றோருக்கு அயலவர்கள் யாரோதான் சாடை மாடையாக இதனைச் சொல்லியிருக்கின்றனர்.


ரிஸானாவின் விடுதலைக்காக ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன மிகுந்த பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டன.


இவ்விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட ஆரம்பித்த பின்னரே இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய சிரத்தை காட்ட ஆரம்பித்ததென கூற முடியும்.


அப்போது பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹுசைன் பைலா தலைமையில் ரிஸானாவின் பெற்றோர் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு - ரிசானாவின் தந்தை பல முறை எஜமானருக்கு கடிதம் எழுதியிருந்தார்.


2006ல் ஒரு தடவையும் இவ்வாரத்தில் ஒரு தடவையுமாக இலங்கை ஜனாதிபதி 2 தடவைகள் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியைக் கோரி இருந்தார்.


இது தவிர தனது சவூதி பயணத்தின் போது ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தது.


சர்வதேச மனித நேய செயற்பாட்டாளர்கள் அனைவருமே இவரது விடுதலைக்காக இடைவிடாது குரல் கொடுத்தனர். வழக்கிற்காகவும் ஏனைய சட்ட ஆலோசனைகளுக்காகவும் இலங்கை அரசாங்கத்தை விட அதிகளவான தொகையை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புக்கள் செலவிட்டன.


இலங்கையும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டதுதான் இருந்தாலும், தனது நாட்டுப் பிரஜையை காப்பாற்றுதவற்கான பணியில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு போதாது என்பதே ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் விசனமாகும்.


இதற்கான கொடுப்பனவுகளைக் கூட வழங்குவதற்கு இலங்கை பின்வாங்கியதாக இவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளதுடன், அதனையிட்டு வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை இங்கு அவதானத்திற்குரியது.


வீட்டில் இருந்துகொண்டு அறிக்கைவிடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் போலன்றி ரிஸானாவின் நலனில் எந்நேரமும் அக்கறை செலுத்தி, அடிக்கொரு தடவை தவாத்மி சிறைக்குச் சென்று அவரைப் பார்த்து வந்தவர் பல் வைத்தியரான கிபாயா இப்திகார்தான். இவர் இல்லாவிட்டால் உலகுக்கு பல செய்திகள் மறைக்கப்பட்டிருக்கும்.


இலங்கையைச் சேர்ந்த இவர் தானிருக்கும் இடத்திலிருந்து பலநூறு கிலோமீற்றர் பயணம் செய்து சிறைக்கு செல்வார். அப்போதெல்லாம் இலங்கைக்கு தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தி பெற்றோருடன் ரிஸானாவை பேச வைப்பார். ரிஸானாவின் உயிர் பறிக்கப்படுவதற்கு முன்னர் அவரை கடைசியாகப் பார்த்த நம்மவரும் கிபாயாதான்.


மறுக்கப்பட்ட நியாயங்கள்


சவூதி அரேபிய சட்டத்தின் முன்னால் ரிஸானாவின் பக்கமுள்ள நியாயங்கள் அச்சொட்டாக எடுத்துரைக்கப்படவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் அழுத்தமாக உரைக்க வேண்டிய விடயம்.


குழந்தைக்கு புரையேறியது அல்லது மூச்சுத் திணறியே உயிர் பிரிந்துள்ளது' என்று சொல்லுமளவுக்கு அரபுச் சொற்கள் ரிஸானாவுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேட்பதற்கு எஜமானி தயாராக இருக்கவில்லை. உண்மையாகவே கொலை செய்துவிட்ட ஒரு கொத்தடிமையை பிடித்துக் கொடுப்பதுபோல் அவள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.


ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்த போது பொலிஸாரினால் வற்புறுத்தலின் பேரிலேயே ரிஸானாவின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. இது ஷரிஆ சட்டங்களையே மீறுகின்ற நடைமுறை என்பதை சுட்டிக்காட்டியும், இது விடயத்தில் தலையிடுமாறு கோரியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை.


அடுத்து, நீதிமன்றத்தில் ரிஸானா தமிழில்தான் தம்பக்க நியாயங்களை எடுத்துக் கூறினார். இதனை இந்தியாவைச் சேர்ந்தவரும் தொழில்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரில்லாதவருமான ஒரு நபரே மன்றுக்கு மொழி பெயர்த்துள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த இவரது மொழிபெயர்ப்பில் மாறுபட்ட தன்மை காணப்படுவது பின்னர் தெரியவந்தது. அப்போது இது தொடர்பில் விசாரிப்பதற்காக அந்த மொழிபெயர்ப்பாளரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


1988ம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02ம் திகதி பிறந்தவரென போலித் தகவல்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனடிப்படையில் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதும், சவூதி நீதிமன்றமோ சட்ட கட்டமைப்போ கடவுச்சீட்டில் இருக்கின்ற திகதியையே கவனத்தில் எடுத்துக் கொண்டது.  இவ்வாறான விடயங்கள் பிரதிவாதியின் தரப்பை தொடர் தோல்விகளின்பால் இட்டுச் செல்வதாகவே அமைந்தது.


கரையாத கல்மனது


கடைசியாக ஒரு சிறு நம்பிக்கை துளிர்விட்டது. மரணித்த குழந்தையின் பெற்றோரது மன்னிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது.


இதற்காக எல்லோரும் பாடுபட்டனர். ஜனாதிபதி கடிதம் எழுதினார், சவூதி மன்னர் வேண்டிக் கொண்டார், ரிஸானா மன்றாடினார், அவரது தந்தை கெஞ்சிக் கூத்தாடினார், அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நூற்றுக் கணக்கான கோரிக்கைகளை தினமும் முன்வைத்துக் கொண்டே இருந்தது.


ஆனால்இ அல் ஒடைபி எனும் வீட்டு எஜமானனும் அவனது மனைவியும் இது எதனையும் பொருட்படுத்தவில்லை. உண்மையாகச் சொல்வதானால், தங்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறந்துவிட்ட போதிலும் இதுபற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை. ஷரீஆ சட்டத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பழி தீர்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.


அந்தக் கணங்கள்


2007ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக சவூதி உள்துறை அமைச்சு காத்திருந்தது. 'இரத்த உறவு இழப்பீட்டிற்கான' நட்ட ஈட்டையேனும் பெற்றுக் கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த எஜமானும், எஜமானியம்மாளும் கடைசி வரையும் தமது பிடிவாதத்தில் இருந்து இம்மியளவும் இறங்கி வரவில்லை என்பதை நினைக்கின்ற போது நெஞ்சு கனக்கின்றது.


இந்நிலையிலேயே டாக்டர் கிபாயா இப்திகார் இரு தினங்களுக்கு முன்னர் றிஸானாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது ரிஸானாவுக்கு அவரது குடும்ப புகைப்படத்தை காண்பிக்குமாறு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதனைக் கேட்ட டாக்டருக்கு உள்மனது ஏதோ சொன்னது. அதானாலேயே ரிஸானாவுக்காக பிரார்த்திக்குமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார். இலங்கையில் இருந்து புகைப்படத்தை தருவித்து அதனை காட்டுவதற்காக புதன்கிழமை நேர காலத்துடன் தவாத்மி சிறைக்கு கிபாயா சென்றிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


பாதிக்கப்பட்ட ஒடைபியின் குடும்பம் ரிசானாவை விடுதலை செய்தவற்கு விரும்பவில்லை என்பதை கருதியோ என்னவோ சவூதி உள்துறை அமைச்சு ஒரு முடிவுக்கு வந்தது. உலகமே கொந்தளித்துக் கொண்டிருக்க, மிகச் சுலபமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானமெடுத்தார் உள்துறை அமைச்சரான இளவரசர் நயீப் பின் அப்துல் அஸீஸ்.


அதிகமாக வெள்ளிக்கிழமைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் ரிசானாவுக்கு புதன்கிழமையென நாள் குறிக்கப்பட்டது.


18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது சட்ட விரோதமானது என்ற சிறுவர்களுக்கான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்டிருந்த சவூதி அரேபியா, கடவுச்சீட்டின் பிறப்புத் திகதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பை நிறைவேற்றத் துணிந்தது.


உள்ளுர் நேரப்படி முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணிக்கு ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது.


சவூதி அரேபியாவே கனவென்றிருந்த எங்கள் ரிஸானாவின் உயிர் பறிக்கப்பட்டது.


உலகெங்கும் வாழும் கோடான கோடி மக்கள் மரித்துப் போயினர்.


இந்த செய்தி, ரிஸானாவின் தாய்க்கு முதன்முதலாக சொல்லப்பட்டபோது அவர் பேசிய வார்த்தை – 'மகன் என்ட மகள மௌத்தாக்கி விட்டாங்களா....?' என்பதுதான்.


ஷரீஆ சட்டமென்பது இறைவனால் அருளப்பட்டது. நபிகள் நாயகத்தினால் உலகுக்கு முன்மொழியப்பட்டது. இந்தச் சட்ட ஏற்பாடுகளில் எவ்வித வாதப் பிரதிவாதங்களோ மாற்றுக் கருத்துக்களோ இல்லை.


இந்த சட்டத்தில் எல்லா விடயங்களும் மிகவும் நுணுக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


ரிஸானா தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதில் எவ்வாறான தடைகளை எதிர்கொண்டார் என்பது நமக்குத் தெரியும். சவூதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரினால் இவர் கையாளப்பட்ட விதம் எந்தளவுக்கு நேர்மையானதென்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன.


எவ்வாறிருப்பினும், நீதி மன்றுக்கு தேவை மனச்சாட்சியல்ல சாட்சியங்களே என்ற அடிப்படையில் நோக்குகையில், ஷரீஆ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பினை விமர்சிக்க முடியாது.


ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டாயிற்று. அந்த தீர்ப்பை மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், தவறிழைத்த ஒருவருக்கு மன்னிப்பு அளிப்பது பெரும்பாவம் என்று இஸ்லாத்திலோ அல்லது அந்த சட்டத்திலோ எங்கும் சொல்லப்படவில்லை என்பதை அழுத்தமாக உரைக்க விரும்புகின்றேன்.


இந்த அப்பாவிச் சிறுமி, 18 நாட்களே தங்களது வீட்டில் வேலை செய்திருந்த நிலையில் பச்சிளம் குழந்தையை ஏன் வலிந்து கொலை செய்ய வேண்டும் என்று எஜமானர்கள் ஒரு கணம் சிந்தித்திருக்க வேண்டும்.


பணம் உழைப்பதற்காக வெளிநாடு சென்ற தன்னால் தாயாருக்கு எதனையும் அனுப்ப முடியவில்லை என்ற மன வருத்தத்தில், சிறையில் இருந்தவாறே தன் கையால் போர்வை ஒன்றை நெய்து, தனது தாய்க்கு அனுப்பி வைத்த பிள்ளையா... கொலை செய்திருக்கப் போகின்றது.


சரி. அப்படித்தான் கொலை செய்திருந்தாலும் 7 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டாள்தானே என மன்னித்து விட்டிருக்கலாம். இவ்வாறு ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஒரிரு நாட்களல்ல 7 வருடங்கள் கால அவகாசம் இருந்தன.


உலகளவில் சில சக்திகள் ஷரிஆ சட்டத்தை மோசமான சட்டமென விமர்சித்து வருகின்றது. இந்நிலையில், ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் - ஷரீஆ சட்டம் கண்டிப்பானது என்ற போதிலும், மன்னிப்பு வழங்குவதற்கு இஸ்லாத்தில் இடமுள்ளது என்பதை காண்பித்திருக்க வேண்டும்.


சவூதி மற்றும் அரபுலக மக்கள் தனது மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் இதனூடாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். கடைசி மட்டும் எஜமான் குடும்பம் அதனைச் செய்யவில்லை என்பதுதான் மிக மிக வருத்தமான செய்தி.


சவூதி அரேபியா முஸ்லிம்களின் புனிதபூமி, ஷரீஆ சட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்தும் நாடு. எமக்கு வாழ்வளித்த பூமிதான். ஆனாலும், சவூதியில் நமது நாட்டு ஆண்களும் பெண்களும் தொழிலிடங்களில் படும் இவ்வாறான அவஸ்தைகளை பார்க்கும் போது,


இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கின்ற மனிதாபிமானம், இரக்கம் காட்டுதல் போன்றவை தொடர்பில் சவூதி தன்னை மீள் பரிசீலனை செய்யவில்லை என்று நான் கூறினால், நியாயங்களை ஏற்றுக் கொள்ளத் தெரியாத சிலர் சண்டைக்கு வருவார்கள்.


தனது பெற்றோர் சிறையில் சந்தித்தபோது, 'உம்மா என்னக் கூட்டிக்கு போகவா வந்திருக்கயள்? என்ன எப்படியாவது நாட்டுக்கு கூட்டிக்கு போங்கம்மா'' என்று கூறி கழுத்தைக் கட்டிக்கொண்ட கத்திய ரிஸானா, மறைமுக இடமொன்றில் கழுத்தறுபட்டுப் போனாள்.


தனது குடும்பத்தை பார்ப்பதுதான் அவளது கடைசி ஆசையாக இருந்திருக்கும். ஆனால், புகைப்படம் கூட அவளுக்கு காண்பிக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த ஆசைகூட நிறைவேற்றப்படாமல் சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது.


ஒன்றுமட்டும் நிச்சயம் – பிழைப்புத் தேடிப் போனவளின் உயிர் வாழ்தலுக்கான மிகக் குறைந்தபட்ச மன்றாட்டத்திற்கு கூட மனமிரங்காத எஜமானியதும் அவரது கணவனதும் உள்ளத்தை கல்லாகப் படைத்த இறைவன் மீது சத்தியமாக....


ரிஸானா இனி எதற்காகவும் அழமாட்டாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக