வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நாட்டின் நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி


முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது.
நாட்டின் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருந்த சிங்களம் - தமிழ், சிங்களம் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டமாக 2014ம் ஆண்டு அளுத்கமை, பேருவளை நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தினை நோக்கலாம். இந்த சம்பவத்திற்கு பின்புலமாக கடந்த ஆட்சியாளர்கள் இருந்தமை கண்கூடு. மேலும் இவ்வாறான நிலமைகளுக்கு உந்து சக்தியாக இருந்த பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு முன்னைய ஜனாதிபதியவர்களின் அணுசரணை இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 
   
வடக்கில் வாழ் மக்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்த கால சூழ்நிலையில், அவர்களின் அடிப்படை நிலங்களை பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்காத காலமது. மேலும் ராஜபக்ஷ ஆட்சியில் காணாமல் போனோரை தேடுவது தொடர்பிலும் அம்மக்கள் பெரிதும் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தனர்.   

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக காலத்துக்கு காலம் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை முன்வைத்த போதும், அவற்றில் காணப்படுகின்ற சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் ஒருபோதும் முன்னிற்கவில்லை. இவ்வாறான நிலைமை தொடர்ந்து வந்தமையினால் இந்த நாடு சர்வதேச சமூகத்திடம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் ஒரு சாரார் மாத்திரம் சுபீட்சமாய் வாழ்ந்த நிலையில், ஏனைய சமூகங்கள் தமது வயிற்றில் கல்லை கட்டிய நிலையிலேயே வாழ்ந்தனர். 

புதிய யுகத்தின் உதயம்

இவ்விருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தமது விடிவு காலத்துக்காய் கனவு கண்டு கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கொள்கை பிரகடனத்தில் முதன் முறையாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது. இந்த கொள்கை பிரகடனத்தினை ஏற்றுக்  கொண்ட மக்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிங்கள பௌத்த வாத கொள்கையினை புறக்கணித்து சிறுபான்மை மக்களது ஆதரவுடன் இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.   

2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம் தமது கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பல திட்டங்களை முன்னெடுத்தது. அவற்றில் குறிப்பாக இந்நாட்டில் முதன் முறையாக சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைமை பதவியினை வழங்கியமையினை சுட்டிக்காட்டலாம். அவ்வாறு வழங்கப்பட்டமை சரி என்பதை சபாநாயகர் கடந்த தினமொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தினார். ராஜபக்ஷ ஆட்சியில் சமூகமயப்படுத்தாமல் வைத்திருந்த யுத்த காலப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் தேடியறிந்த உதலாகம ஆணைக்குழுவின் அறிக்கையினை 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் இடையில் பிரதமர் அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமை, நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் பெற்றுக்  கொண்ட பாரிய வெற்றியில் ஒன்றாக கருதப்படுகின்றது. 
    
அதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கைக்கு கிடைத்த அவப்பெயரை மாற்ற வேண்டிய சவாலினை ஏற்று நல்லாட்சி அரசாங்கம் செயற்பட ஆரம்பித்தது.   

சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கையின் நற்பெயரை மீள ஏற்படுத்தல் 

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சர்வதேச ரீதியில் இலங்கை மீது காணப்பட்ட அவப்பெயரினை இல்லாதொழிக்கும் சவாலினையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்று செயற்பட ஆரம்பித்தது. குறிப்பாக 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை முறையாக அமுல்படுத்துவதில் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வி கண்டது. அவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டமையினால் சர்வதேசத்தின் அவப்பெயரினையும் பெற்றுக் கொண்டனர். இதனால் சர்வதேச நாடுகளின் பல்வேறு தடைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. யுத்தத்தின் பின்னரான மக்களின் வாழ்க்கையினை செம்மைப்படுத்துதல், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல், சுயாதீன நீதிச்சேவையினை ஏற்படுத்தல் போன்ற யோசனைகளையே ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுத்த மறுப்பு தெரிவித்தது. இறுதியில் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இந்நாட்டினுள் நல்லிணக்க பொறிமுறையினை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

உண்மையினை தேடியறிதல், நீதியை நிலைநாட்டுதல், நஷ;ட ஈடுகளை வழங்குதல், மீண்டும் ஒரு யுத்தம் வராமல் பாதுகாத்தல் போன்ற விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு குறித்த பொறிமுறையினை செயற்படுத்த உள்ளதாக அமைச்சர் அவர்கள் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமல்ல தமிழ் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியுமான அரசியல் தீர்வொன்றினை வழங்க வேண்டும் என்ற தேவையினையும் நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும் அவர் குறித்த கூட்டத் தொடரில் மேலும் சுட்டிக் காட்டியிருந்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைகளை உருவாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பணியாகும். இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் அபிலாiஷகளைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களை வடிவமைக்கும் பொருட்டு பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட செயலணியின்  தலைமையில் அரசாங்கம் பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெறும் செயல்முறையைத் தொடங்கியது.  நல்லிணக்க நிறுவனங்களின் வடிவமைப்பில் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் முகமாக  நாடெங்கும் இவ் ஆலோசனை கோரல் செயன்முறைகளை நடாத்தி வருகின்றது.  
      
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட யுகம்

சர்வதேச சமூகத்திற்கும் இந்நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது. கடந்த மூன்றாண்டுகளாக பொது எதிரணியின் மூலம் காலத்துக்கு காலம் கொண்டு வரப்படுகின்ற சவால்களையும் முறையடித்து குறித்த அடைவுகளை அடைந்துக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்துள்ளது. நல்லிணக்கத்தினை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுவது அத்தியவசியமாகும்.
வினைத்திறன் மிக்கதாக நல்லிணக்க பொறிமுறைகள் நிலவுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு பிரதமரின் அலுவலகத்தின் கீழ் 'நல்லிணக்க பொறிமுறைகளைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்' ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. 

உண்மைகளைக் கண்டறிதல், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் ஈடுசெய்தல் பொறிமுறைகளை வடிவமைத்து செயற்படுவதற்காகவே முற்றுமுழுதாக சிவில் சமூகப் பிரிதிநிதிகளை உள்ளடக்கும் ஒரு சிறப்பு செயலணியாக அது ஸ்தாபிக்கப்பட்டது. 

மீள நிகழாமை எய்துவதை நோக்காகக் கொண்ட பரந்துபட்டு நல்லிணக்க விடயங்களில் மேற்படி செயலணி செயற்பட்டு வருகின்றது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் மையப்படுத்தப்படும். அரசு கீழ்வரும் பொறிமுறைகளை கவனத்தில் கொள்ளும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
1) விசேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை.
2) உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஆணைக்குழு.
3) காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான அலுவலகம். 
4) இழப்பீடுகளுக்கான அலுவலகம். 

உண்மையைக் கண்டறிதல் நடைமுறையில் மிக முக்கிய ஆக்கக் கூறாகவும், இடைக்கால நீதி நிகழ்ச்சி நிரலில் முதன்மை வகிக்கும் பொறிமுறையாகவுமுள்ள காணாமற் போனோர்களுக்கான நிரந்தரமானதும் சுதந்திரமானதுமான அலுவலகம் இன்று தமது பணியினை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்கின்றது. குறிப்பாக அண்மையக் காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் சென்று அங்கு தமது பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபித்து, அம்மக்களின் கருத்துகளை பெற்று வருகின்றது. இது இலங்கையின் நல்லிணக்க செயன்முறையின் ஒரு மைல்கல்லாகும்.

மேலும், காணாமற் போனோர் தொடர்பாக காணாமற் போனமைக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்குவதற்கு வசதியாக 2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.  அத்துடன் வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்வதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை வலுப்படுத்தப்பட்டதுடன், உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய ஒரு தேசிய கொள்கை பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து பெற்றுக் கொண்ட தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை மீதான பூச்சிய பெறுமைக் கொள்கையை அரசாங்கம் பேணுகின்ற போதிலும் கூட இந்த நிகழ்வு குறைக்கப்பட்டுள்ள போதிலும் அது முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. ஆகவே சித்திரவதைக்கு எதிராக போராடுவதையும் அதனை ஒழிப்பதையும் நோக்காகக் கொண்டு இலங்கையிலுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் உதவியினை அரசாங்கம் பெற்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

மேலும் வட, கிழக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகள் மிக துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. 2020ம் ஆண்டளவில் இலங்கையினை மிதிவெடி அற்ற நாடாக மாற்றும் திட்டத்திற்கு இணங்க குறித்த பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகள் உயரிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பணிகளுக்கு சமாந்தரமாக காணி விடுவிப்பும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இவ்வரசாங்கமானது இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. முழு பாராளுமன்றத்தினையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றி குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்லின, பல்சமய, பன்மொழி நாடாகவிருந்து சகலருக்கும் சம உரிமைகளும், நீதியும், கௌரவமும் வழங்கப்படும் என்பதுடன், சுதந்திரம் பெற்றதிலிருந்து கொள்ளை நோயாகப் பரவி நாட்டில் ஒரே இனம் என்கின்ற எமது ஐக்கியத்தினை தடைசெய்து கொண்டிருக்கின்ற சில விடயங்களுக்கு தீர்வும் வழங்கும் வகையில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எனினும் இன்று பொது எதிரணியினர் நாட்டின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முற்படும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சேறு பூசும் செயற்பாடுகளை முன்னெடுத்து, அரசாங்கத்தினை திசை திருப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.    

அதே போன்று, இவ்வாட்சியின் போது இதுவரை காலமும் எமது நாடு இழந்திருந்த ஐரோப்பிய சங்கத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினை மீள பெற்றுக் கொண்டு இந்நாட்டு ஏற்றுமதிகளுக்கு சிறந்ததொரு சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. மேலும், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஏற்புகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தியமையே குறித்த சலுகைகள் மீண்டும் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது. 2018ம் ஆண்டு உலக சமாதான சுட்டியில் கடந்த வருடத்தினை விடவும் இந்த வருடம் 05 இடங்கள் முன்னேறி இலங்கை 67ஆவது இடத்தை பிடித்துள்ளது. ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமையினால் குறித்த சுட்டியில் இலங்கை பின்வரிசையிலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் 2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நாட்டின் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் விளைவினால் குறித்த தரப்படுத்தலுக்கு விண்ணப்பிப்பதற்கு கூட இலங்கைக்கு முடியாமல் போனது. எனினும் இன்று நாட்டினுள் ஜனாநாயம், மனித உரிமைகளை ஏற்படுத்தல், அனைவரதும் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற காரணங்களினால் நாம் நாடு என்ற ரீதியில் 'ஏ' தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நல்லிணக்க பாலத்தினை பலப்படுத்துவதற்கு இந்நல்லாட்சி அரசாங்கம் தாம் கடந்து வந்த 03 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தது. தெற்கில் வீரர்களை நினைவூட்டுவதைப் போன்று வடக்கிலும் வீரர்களை நினைவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளித்தல், கிரந்தங்களை மொழிபெயர்த்தல், யாழ்ப்பாணத்தில் சினிமா நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமளித்தல் போன்ற ஒரு சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டலாம். 
      
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களின் உள்ளத்தை உருக்கும் செயற்பாடுகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த சான்றாகும். 

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையினை வென்று நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்தமையினால் இன்று நாம் இழந்திருந்த சர்வதேசத்தின் அங்கீகாரம் மற்றும் நன்மைகளை அடைந்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது. மேற்குறிப்பிட்ட பல்வேறு விடயங்களை செயற்படுத்துவதற்கு வாய்ப்பும் அதன் மூலமே கிடைத்தது. அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு பயணிக்கின்ற இத்தருணத்தில், ஒருவரை ஒருவர் மதிப்பளித்து, ஜனநாயகத்தினை ஏற்படுத்தி நாட்டின் நிலமை மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதுடன், கட்சி, நிற, மத வேறுபாடின்றி அனைவரும் அதன் பயன்களை புசிப்பதற்கும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.

ஆக்கம் : எஸ்.ஏ.எம். பவாஸ் 
தகவல் அதிகாரி
தேசிய ஊடக மத்திய நிலையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக