எமது நாட்டு அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் நன்றாக சம்பாதிக்கின்றன.
இது இந்நிலைமை தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இறுதியில் சட்டத்தையும் தங்கள் கைகளில் எடுப்பதற்கு பழகியுள்ளார்கள். இந்நிலைமை தொடர்வதற்குக் காரணம் அரசிடம் சரியான கொள்கை இல்லாமையாகும். இந்நிலைமைக்குத் தற்போது இரையாகி இருக்கும் வாகனப் பிரிவு என்னவென்றால் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து வான்களாகும்.
இந்தப் போக்குவரத்து சேவை மிகப் பயங்கரமாக ஆக்கிரமித்துச் செல்வதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால் இந்தப் போக்குவரத்து தொடர்பான நிறுவனங்களோ அதிகாரிகளோ இது குறித்து எவ்வித அக்கறையும் கொள்வதாகத் தெரியவில்லை. இது குறித்து அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்சினை புரையோடிப் போவதற்குள் அதற்கான தீர்வை வெகுவிரைவில் எடுக்க வேண்டும். ஆமை வேகத்தில் பயணம்.
தனியார் பஸ்களைப் பொறுத்தவரை வீதிப் போக்குவரத்து அதிகாரசபை ஒழுங்குமுறைகளாவது காணப்படுகின்றன. அதே போல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒழுங்கமைப்பும் உள்ளது. ஆனால் பாடசாலை வான்கள் தொடர்பாக எவ்வித ஒழுங்கு முறையும் இல்லை. தரமோ கொள்கைகளோ எதுவும் இல்லை.
முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுப்பதிவு உண்டு. ஆனால் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு எவ்வித ஒருங்கமைப்பும் இல்லை. அனுமதிக்கப்பட்ட பிரயாணிகள் எண்ணிக்கை இல்லை. கட்டண கடடுப்பாடு இல்லை. பாடசாலை விடுமுறை காலத்தில் கூட முழுமையாகக் கட்டணங்களை அறவிடுகின்றார்கள். இது குறித்து நீண்ட காலமாகப் பேசியும் எவ்விதப் பயனுமில்லை. பாடசாலை வான்கள் போக்குவரத்து இன்னொரு வருமானத்துக்கான வழியே தவிர சேவைகள் அல்லவென அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
விரும்பியவாறு கட்டணங்கள்:
இலங்கையில் நாடு பூராவும் 20000 க்கும் அதிகமான பாடசாலை வான்கள் உள்ளன. அவற்றிற்கு எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாமையால் தங்களுக்கு வேண்டியவாறு மாணவர்களை ஏற்றி தாங்கள் நினைக்கும் கட்டணங்களை அறவிட பழகியுள்ளார்கள். சிறு பிள்ளைகளைக் கொண்டு செல்லும் வான்களில் பாதுகாப்புக்காக பெண்ணொருவர் பயணிப்பது மிக அரிதாகும். ஒன்றிரண்டு வாகனங்களில் அவர்களை அவதானிக்கலாம். அதுவும் காலையில் மாத்திரமே வருவார்கள்.
அதனால் சிறுவர்களில் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இதுகுறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பல சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றால் எதுவித பலனுமில்லை. அதேபோல் வான்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்கின்றார்கள். சிறிய வான்களில் 25 பேருக்கும் அதிகமானோரை ஏற்றிச் செல்வதையும் நாம் காணலாம்.
எமது நாட்டில் சட்டங்கள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதில் சந்தேகமுள்ளது.
சுரண்டல்:
மூன்றாம் உலக நாடு என்றவகையில் பலவித வருமான வழிகள் காணப்பட வேண்டும். எல்லோரும் வைத்தியர்களாகஇ எல்லோரும் சடட்த்தரணிகளாக முடியாது. நாட்டில் வருமானம் பெறுவதற்கு பல தொழில் முறைகள் காணப்பட வேண்டும். ஆனால் அந்த தொழில்களில் குறைந்தபட்சம் சிறந்த சேவைகள் காணப்பட வேண்டும். சுரண்டலே வருமான வழியாக அமையக் கூடாது. அப்போது இன்னொரு சாராருக்கு பெரும் செலவு ஏற்படும்.
பாடசாலை வான்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட வேண்டுமென முன்னாள் தனியார் போக்குவரர்து சேவைகள் அமைச்சராகவிருந்த சீ. பி. ரத்நாயக்க கூறியிருந்தார். அது வாயால் கிழங்கு நடுவது போலாகியது.
தற்பொது 35 வருடங்கள் பழைமைவாய்ந்த '29 ஸ்ரீ' வாகனங்கள் கூட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துக்கு பாவிக்கப்படுகின்றது. எந்தவொரு பொறுப்புவாய்ந்த அதிகாரியும் இதுகுறித்து ஆராய்வதில்லை. கேகாலை பெண்கள் பாடசாலையில் கல்விபயின்ற டில்ஷானி பிரார்தனா என்ற மாணவி பாடசாலை வானின் அடிப்பாகம் உடைந்ததனால் கீழே விழுந்து வானின் சக்கரத்தில் சிக்கி நடுவீதியில் உயிரிழந்தார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும டில்சானியின் கிராமத்துக்கு இ. போ. ச. பஸ் ஒன்றை பாடசாலை மாணவர்கள் செல்வதற்காக வழங்கினார். ஆனால் அவ்வாறான வழிகளால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. குறைந்த பட்சம் பாதுகாப்பற்ற வகையில் பிள்ளைகளைக் கொண்டு செல்லும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமைகளை பரிசீலனைக்கு எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர்கள் பலர் போக்குவரத்து துறையில் பெரும் நிபுணர்களாவர். ஆயினும் இதுவரை பாடசாலைக்கு மாணவர்களைக் கொணடு செல்லும் வாகனங்களுக்கு கொள்கையொன்றை தயாரிக்க முடியாமற் போயுள்ளது.
கட்டண முறைமைகள் இல்லை:
இவ்வாறு பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்லும் வான்களைத் தவிர பஸ் வண்டிகளும் உள்ளன. பொலிஸாருக்கு ஏதாவது குற்றங்கள் தெரிந்தால் அவ் வேளைகளில் அபராதப்பத்திரம் வழங்குவதைத்தவிர வேறு எந்த தீர்வும் இது தொடர்பாக எடுக்கப்படவில்லை. இது ஒரு புறமிருக்க அடுத்த விடயம் கட்டணம் அறவிடுவதாகும்.
பாடசாலை வான்களுக்கும் கட்டண கொள்கையொன்றோ முறையோ இல்லை. மாகாண சபைகள் மூலம் மாகாணங்களின் மக்கள் போக்குவரத்து சேவையை சரியான முறையில் நடத்த வேண்டுமென மாகாண சபைகள் சட்டத்தில் உள்ளது. ஆனால் தாங்கள் விரும்பியவாறு கட்டணங்களை வாகன உரிமையாளர்கள் அறவிடுகின்றார்கள்.
ஒரே இடத்திலிருந்து ஒரே பாடசாலைக்கு செல்லும் இரண்டு வான்களில் கட்டணங்கள் ஆயிரம் ரூபாவரை வித்தியாசப்படுகின்றது. அவர்கள் இவ்வாறு கட்டணம் அறவிட அனுமதி வழங்கியது யார்?
இது குறித்து பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்.
பஸ்வண்டியில் ஒரு ரூபாவை அதிகமாகப் பெற்றாலும் அதற்கு எதிராக வழக்குப் போடவும் அபராதம் செலுத்தவும்இ பஸ் வண்டியின் போக்குவரத்தை தடை செய்யவும் பலவித அதிகாரங்களும்இ சட்ட திட்டங்களும் உள்ளன. ஆனால் பாடசாலை வான்கள் விடுமுறைக் காலத்தில் எவ்வித சேவையும் வழங்காமல் முழு மாதத்திற்கான கட்டணத்தையும் அறவிடுகின்றன. மாகாண சபைகளின் பயணிகள் சட்டம் எங்கே?
அதிக கட்டணம் அறவிடுவதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போக முடியுமென்றாலும் இவ்வாறு மோசமான நிலைமை பல வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
பாடசாலை வான்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும். அவை பதிவு செய்யப்படவும் வேண்டும். விடுமுறை நாட்களில் கட்டணம் அறிவிட்டால் அக்காலங்களில் அப்பிரதேசத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. விடுமுறை நாட்களில் பாடசாலையில் பரிசளிப்பு விழாவோ வேறு உற்சவங்களோ இருந்தால் அவற்றுக்கு செல்ல இவர்களை கட்டணம் செலுத்தியும் அழைக்க முடியாது. இன்று பெரும் பாதிப்பை காட்டாவிட்டாலும் எதிர்காலத்தில் தனியார் பஸ்களைவிட பெரும் பாதிப்பு இவற்றால் ஏற்படலாம். எமது அதிகாரிகள் இது குறித்து தங்கள் அவதானத்தை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்புகள் ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு நாம் குரல் கொடுக்கின்றோம். சிறுவர்களின் எதிர்காலம் என்பது நாட்டின் பொருளாதாரமாகும். அதேபோல் பாடசாலை வான் என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு காரணியாகும்.
பாடசாலைக்கு செல்லாமல் பாடசாலைக்கு செல்லும் நிலைமையிலுள்ள பாடசாலை வான் போக்குவரத்து நல்ல தரத்தில் அமைய வேண்டும. குதிரைகள் வெளியேறிய பின் லாயங்களை மூடுவதால் எவ்விதப் பயனுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக