கடந்த ஒரு மாத காலமாக தேசியத் தமிழ் ஊடகங்களிடையே குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிடையே பாரியதொரு மாற்றத்தினைக் காணக்கூடியதாக உள்ளது.
இதுவரை காலமும் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த இத்தேசியத் தமிழ் ஊடகங்களிடையே இப்போது நல்லதொரு பக்குவமான நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. உண்மையை உண்மையாக எழுத முனைந்துள்ள அதேவேளை நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்ய முயன்றுள்ளமையையும் தற்போது அவதானிக்க முடிகிறது. உண்மையில் இது வரவேற்பிக்குரியதொரு மாற்றமே.இந்த ஊடகங்களின் உள்ளார்ந்த மனோபாவமான மாற்றம் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்தால் நாட்டில் இன்று இத்தனை அழிவுகளை மக்கள் கண்டிருக்கவோ அனுபவித்திருக்கவோ மாட்டார்கள். தமது பத்திரிகைகளின் விற்பனைக்காக அரசியல்வாதிகளினதும், விடுதலைப் புலிகளினதும் பொறுப்பற்ற வீராவேசக் கதைகளை முண்டியடித்துப் பிரசுரித்து நாட்டில் இரத்த ஆறு ஓடி இலட்சக் கணக்கான மக்கள் மரணிக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையும் ஒரு காரணமாக இருந்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது.
மொழி மூலமாக இனத்திற்காகப் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு இவை தவறானதொரு பாதையைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் காட்டி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். தவறு எனத் தெரிந்திருந்த பல விடயங்களையும் தவறெனக் கூறாது இனத்திற்குச் செய்யும் நன்மையாகக் கருதி அவற்றை மூடி மறைத்து வந்ததன் விளைவையே நாம் கடந்த பல வருடங்களாக அனுபவித்தோம். அதேபோன்றுதான் சிங்கள ஊடகங்களும் தமது மொழிசார் அரசியல் தலைமைகளின் வீராவேச உரைகளுக்கு முக்கியத்துவம் அளித்தமையும் உண்மையே.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் இங்குள்ள பல ஊடகங்கள் தமது இனத்திற்காக மட்டுமே குரல் கொடுத்து வந்ததை இதுவரை காலமும் இலகுவாக அவதானிக்க முடிந்தது. எல்லா ஊடகங்களும் என்று கூறாவிடினும் பெரும்பாலான ஊடகங்கள் உண்மையில் இதனையே செய்து வந்தன. இன்றும் ஒரு சில ஊடகங்கள் செய்தும் வருகின்றன. இன்னும் சில ஊடகங்கள் தமது எஜமானர்களின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்ப செயற்படுகின்றன. உண்மையில் ஊடகங்கள் பக்கச் சார்பின்றிச் செயற்பட வேண்டும். இனங்களிடையே குரோதம் ஏற்படவோ அல்லது நாட்டின் இறைமைக்கு ஏதிராகவோ ஊடகங்கள் ஒருபோதும் செயற்படக் கூடாது. ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதனையே சாட்டாக வைத்துக் கொண்டு ஊடகங்கள் எதனையும் செய்து விடலாம் என எண்ணுவது மாபெரும் தவறு. அது அறியாமையின் வெளிப்பாடகவே கொள்ள முடியும்.
முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து நாட்டில் மக்கள் இன்று அச்சமற்ற ஒரு சூழலில் இன வேறுபாடுகள் எதுவுமற்ற நிலையில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை நீடித்து மக்கள் இதேபோன்று இனிவரும் காலங்களிலும் வாழக்கூடிய வகையில் அதற்கான எதிர்காலத் திட்டங்கள் அமைய வேண்டும். இப்போது அதற்கானதொரு சிறந்த சூழலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே இனங்களிடையே ஒற்றுமை எனும் இந்தப் பாரிய பொறுப்பு நிச்சயமாக ஊடகங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதுவரை காலமும் ஊடகங்கள் ஏதாவது தவறிழைத்திருந்தாலும் இனி அவற்றைத் திருத்தி நாடு முன்னேறவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் உதவி புரிய வேண்டும். இதுவே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக ஊடகச் சுதந்திரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இதுவே நாட்டில் மிகப்பெரியதொரு மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.
உண்மையில் இந்த மாற்றத்தினை ஒரு மாத காலமாக நாட்டிலுள்ள சகல சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் நன்கு அவதானிக்க முடிகிறது. இந்த நிலை தொடர வேண்டும். இதற்குச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒத்துழைப்பும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும். ஊடகப் போட்டிக்காக மக்களது வாழ்வுடன் விளையாடக் கூடாது. பொது மக்களில் தொண்ணூறு சத வீதமானோர் ஊடகங்களில் பிரசுரமாவதையே உண்மையென நம்பி வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு பொய்யுரைக்காது உண்மையை உண்மையாக எடுத்துக் கூற வேண்டும்.
இதற்கு ஊடக அடக்குமுறை என்றோ கட்டுப்பாடு என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. உண்மையில் ஒரு உண்மையான ஊடகவியலாளனுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடு எதுவுமே இருக்கக் கூடாது. தான் சார்ந்த இனம் என்பதற்காக அவன் உண்மையை மறைக்க முற்பட்டால் அவன் ஊடகவியலாளனே அல்ல. அத்தகைய எண்ணம் கொண்டோர் அரசியல் கட்சி ஒன்றிலேயே தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கண் முன்னே நடக்கும் ஒரு அநியாயத்தைத் தட்டிக் கேட்டு எழுதாமல் மூடி மறைத்துச் செயற்படவும் கூடாது. ஆனால் எமது நாட்டில் பல ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த இன, மத, மொழி ரீதியாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் விடயம் மிகவும் கவலைக்குரியதாகும்.
இந்த நிலை மாற வேண்டும். இன்று எமக்கு நாட்டின் தலைவராக நல்லதொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிடைத்துள்ளார். இதனைப் புரிந்து கொண்டோ என்னமோ தெரியவில்லை தமிழ் ஊடகங்கள் பலவும் தமது கடந்த கால ஒருதலைப்பட்சமான போக்கை மாற்றி நடுநிலையாக உண்மையுடன் செயற்பட முன்வந்திருக்கின்றன. இதனை அனைவரும் வரவேற்க வேண்டும். இப்போது தமிழ் மக்கள் சார்பில் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனியும் புலிகளைப் போன்று செயற்படாது புதிய அரசாங்கத்திடமிருந்து உரிமைகளை வென்றெடுக்க தமிழ் ஊடகங்கள் அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்.
முன்னர் புலிகளின் காலத்தில் செய்த அதே தவறை இனியும் செய்தால் தமிழ் மக்கள் மீண்டுமொரு பேரழிவையே சந்திக்க நேரிடும். அதனால் இனி தமிழ்பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது உரிமைகளை வென்றெடுக்கும் பணியை தமிழ் ஊடகங்கள் தமது கைகளில் நேர்மையாக எடுக்க வேண்டும். தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரு சமிக்ஞையை இப்போது தமிழ் ஊடகங்கள் காட்டத் தொடங்கியுள்ளன. இதை இறுதிவரை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
(தினகரன் வாரமஞ்சரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக