செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்து வரும் மலையகம்...!


மலையக பெருந்தோட்டங்களில் கல்வியின் செல்வாக்கு மந்த நிலையில் இருந்த காலத்தில் சில தோட்ட அதிகாரிகள், தொழிலாளர் பெருமக்களை பிரதிநிதித்துவம் வகிக்கும் முக்கியஸ்தர்கள், ஆசியர்களின் ஆலோசனைகளுடன் பள்ளிக்கூட கங்காணி என ஒருவரை நியமித்து, பாடசாலை நாட்களில் அவர் மக்களின் குடியிருப்புக்களுக்குச் சென்று பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவது வழக்கத்திலிருந்தது.

கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன. இதற்கு அந்தச் சமூகத்திலிருக்கும் கற்றறிந்தவர்களும், தலைவர்களும் கூட பலதருணங்களில் துணையாக நிற்பது கவலைக்குரியது.

மலையக மக்களின் கல்வியானது இதற்கு வெளிப்படையான சான்றாகக் கொள்ளத்தக்கது. 'தேசிய கல்வி முறைமையின் அமைப்புகளோடு ஒப்பிடும்போது மலையகக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

அக்காலத்தில் தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 5 வரையே பாடங்கள் நடை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

நாளடைவில் தரம் 8 வரையும் முன்னிலை வகித்த பாடசாலைகளில் க.பொ.த. (சா.த), க.பொ.த உயர் வகுப்பு வரை இன்று நடைபெறுகிறது. இதேவேளை சில தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 6 இல் இருந்தே இடை விலகல் நடைபெறுகிறது. தரம் 7, 8, 9, 10 வரையும் மாணவர்களை கட்டுப்பாடுகளுக்கு கொண்டு வர முடிவதில்லை.

ஒரு சில பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால் பரீட்சைக்குத் தோற்றுவது 10 அல்லது 15 மாணவர்களே.

மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை நடுவில் விலகல் அதிகரித்த வண்ணமே உள்ளதாக கல்வித் திணைக்கள அறிக்கைகளும், கல்வி ஆய்வாளர்களின் கருத்துக்களில் இருந்தும் நாம் அறியக் கூடியதாகவுள்ளது.

இதேவேளை மலையகம் சார்ந்த பாடசாலைகளில் பெருமளவிலான மாணவர்களின் இடைவிலகல் தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்கின்றது என மலையக கல்வி ஆய்வாளர்கள் கவலை தெவிக்கின்றனர். இந்நிலை தோன்றுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது பொருளாதார மேம்பாடு இல்லாமையே. இதன் மூலம் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற வர்த்தக ஸ்தாபனங்களுக்கு பெற்றோர் அனுப்பி விடுகின்றனர். பெண் பிள்ளைகள் வீட்டு பணிப் பெண்கள் என்ற நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் பிள்ளைகளின் ஊதியத்தில் குளிர் காய்வதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் கூறப்போனால் குடும்பத்தில் கட்டுப்பாடற்ற குழந்தை பெறுபேறுகள், குடும்பத்தின் செலவுக்கேற்ற வருமானமின்மை இன்றும் மலையக பெருந் தோட்ட மக்களை வருத்திவருவது நாட்டில் வாழும் அனைவரும் அறிந்த விடயம்.

மலையக பெருந்தோட்டங்களில் வசிப்போருக்கு இன்றைய சம்பள உயர்வின் மூலம் அவர்களுக்கு பொருளாதார கெடுபிடி இல்லை யென்றும், மதுவுக்கு அடிமையாவதே முக்கிய காரணம் என இன்று பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் எங்கும் பேசித் திரிவதை கேட்கக் கூடியதாக உள்ளது. எனினும் அதனை தீர்ப்பதற்கு முன் நிற்பதை காணக் கூடியதாக இல்லை என்பதை நினைக்கும் போது தான் கவலையாக உள்ளது.

மலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை செய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. 

குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.

இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.

சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக