புதன், 30 ஏப்ரல், 2014

மலையக காமக் கூத்தின் உயிரோட்டத்தினை பாதுகாப்போம்


மலையக காமக் கூத்தின் உயிரோட்டத்தினை பாதுகாப்போம்.

இலங்கையின் மலையகத்தே பெருவழக்குப் பெற்றிருக்கும் முப்பெரும் கூத்துக்களான காமன்கூத்து, அருச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் என்பவற்றில் காமன் கூத்து பிரசித்தமானது. இக் காமன் கூத்து மலையக மக்களால் பெரிதும் வளர்க்கப்பட்டு வழக்காறு பெற்றமைக்கான காரணங்களை தேடுவதூடாக மலையக மக்கள் குறித்த ஒரு கற்கையில் ஈடுபடுவது அவசியமானது.

வேதங்களிலே காதற் கடவுளாகக் கருதப்பட்ட காமன், வழிபாட்டிற்குரிய தெய்வமாக பண்டைக்காலம் தொடக்கம் விளங்கியிருப்பதற்கு பல செய்திகள் உண்டு. அதைப்போலவே காமன் கதை பல்வேறு பகுதியில் திரிபுகளோடு வழங்கப்படுதலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

காமன் கூத்து இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருக்கின்றார். அதனால் தேவலோகம் அவதியுறுகின்றது. இந்த நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கச் செய்யும்படி மன்மதனுக்கு தூதோலை அனுப்புகின்றார். இந்திரனின் கட்டளையின் ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனால் மடிகிறான். பின்னர் ரதி சிவனிடம் இரந்து வேண்ட மன்மதன் உயிர் பெறுகிறான் என்று அமைகிறது.

தமிழ் இலக்கியப் பரப்பில் மலையகத் தமிழ் இலக்கியம் ஒப்பீட்டளவில் இன்று சார்பளவிலான வளர்ச்சியை கண்டுள்ளது. மலையக தமிழ் இலக்கியம் எனும்போது கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் முதலான எழுத்துருவிலான வரிசைகளோடு வாய்மொழிப்பாடல்கள், கூத்து, கலாசாரவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலான எழுத்துருவற்ற இலக்கிய வடிவங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட, மலையகத்தை தம் வாழிடமாகக் ஏற்றுக் கொண்ட மலையகத் தமிழ் தொழிலாளர்கள் தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்பம், வழக்காறுகள், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள், கடவுள்கள், வழிபாட்டு முறைகள் என்பனவற்றையும் சுமந்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக காமன் கூத்து, நொண்டி மேளம், பொய்க்கால் ஆட்டம், காவடியாட்டம், தோகையாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், தாலாட்டு, ஒப்பாரி, கோடங்கி, உருமி, போன்ற எண்ணற்ற கலைச் செல்வங்களையும் கொண்டு வந்தனர். இந்த நீண்ட நெடிய மரபு தொடர்ச்சியின் வரலாற்று வழித்தடத்தின் ஒரு உண்ணதமானக் கூறுகளுள் 'காமன் கூத்து' மலையகத் தமிழர்களின் மணி மகுடமாக நிற்கின்றது என்றால் மிகையாகாது.

கிராமியக் கலைகள் கிராமிய மக்களின் உணர்ச்சிகளையும், செயல்களையும் வெளிப்படுத்தும் சாதனமாகும். இட வேறுபாடு, வெட்பத்தட்பம், பழக்க வழக்கங்கள், சூழல் மாறுபாடுகள், கூத்துக்களின் தோற்றங்களிலும் இசையமைப்புகளிலும் ஓசை நயங்களிலும் எண்ணற்ற வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.  அதற்கினங்க மலையக கூத்துக்களுக்குப் பல தனித்துவங்கள் காணப்படுகின்றன. இத்தகைய மலையகத் தமிழர்களின் பாரம்பரியங்களில் பெரும்பாலானவை அழிவு நிலையினை எய்துதல் கண்கூடு. இவற்றைப் பேணி பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு மலையகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

பல வருடகால வரலாற்றைக் கொண்ட காமன்கூத்து இன்றும் இம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது. அதற்கு காரணம் இக்கூத்தினுள் நவீன தொழில்நுட்பங்களோ ஏனைய கலையம்சங்களோ ஊடுறுவ முடியாதிருப்பதுவும், மலையக பெருந்தோட்டத்துறை சமூக கட்டமைப்புமேயாகும். இருந்தும் அண்மைக்கால போக்குகள் சில கவலையளிக்கின்றன. அதாவது காமன்கூத்தினை உரிய முறையில் நடாத்தி முடிப்பதில் பல குழறுபடிகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே என்றுகூட கூறலாம்.

நகரமயம், உலகமயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களாலும் அபிவிருத்தித் திட்டங்களாலும் பெரும்பாலும் சமூக பண்பாட்டு வேர்களில் ஆட்டத்தை ஏற்படுத்தி வருதல் எமது சமூகத்தில் கிடைத்த படிப்பினைகளாகும். இவற்றுக்கு புறம்பாக சமூக சீரழிவுகள், சினிமா, தொலைக்காட்சி மோகம், இளைஞர்களின் ஆர்;வமின்மை போன்ற பல காரணிகளும் காமன்கூத்து போன்ற கலையம்சங்கள் அருகி வருவதற்கு ஏதுவாக அமைகின்றன. மேலும் காமன்கூத்தை எத்தனை நாட்கள் கொண்டாடுதல் என்பதிலும் இம்மக்களின் வாழ்க்கைச் சுமைகளும் பொருளாதார பின்னடைவுகளும் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

காமன்கூத்தை பயிற்றுவிப்பதற்கென்று ஏதேனும் நிறுவனங்கள் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. இருப்பினும் தலைமுறை தலைமுறையாக இக்கூத்துக்கள் (சிறியளவிலான மாற்றங்களுடன்) கையாளப்பட்டு வரும் விதம் மிக வியப்பிற்குரியதே. உண்மையில் மலையக சமூகத்தில் ஒவ்வொரு பிரசையும் இவைபோன்ற கலையம்சங்களை உள்வாங்கி இருக்கின்றனர் என்றால் 'பங்கு பற்றலின் ஊடாகக்கற்றல்' என்ற எண்ணக்கரு சிறப்பாக இடம் பெறுவதனை அறியமுடியும். கூத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான தொடர்பே இதற்கு அடிப்படையாகும். காமன்கூத்து போன்ற மலையக கூத்துக்கள் மற்றும் கலையம்சங்களில் இத்தகைய பங்குபற்றலினூடாகக் கற்றலின் தன்மைகளையும் அதன் சாதகபாதக விளைவுகளையும் மரபுரீதியான கூத்து வளர்ச்சியில் அதன் பங்களிப்பினையும் விரிவாக ஆராய வேண்டியது அவசியமான ஒன்றாகும். திறந்த கற்றல் முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டான இம்முறை ஒரு தனி ஆய்வுத் துறையாக மாறும் வாய்ப்புகளும் உண்டு.

எதிர்கால மலையக சமூக உருவாக்கத்திற்கும் காமன்கூத்து முதலான கூத்துக்கள் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம். இருப்பினும் அதற்கு கூத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது விரிவான ஆய்வுகளுக்கும் ஆழமான கருத்தாடல்களுக்கும் வாதபிரதிவாதங்களுக்கும் இடம் கொடுப்பதாக அமையவேண்டும்.

இறுதியாக, கைவிடப்படும் நிலையினை எய்திக் கொண்டிருக்கும் காமன்கூத்து (பிற கலையம்சங்களும் கூட) புணரமைப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அதற்கான சில விதந்துரைப்புக்களை கூறுதல் பொருந்தும். காமன்கூத்தினை முழுமையாக தொகுத்து அவற்றுக்கு எழுத்துரு  கொடுக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். வட்டார பாகுபாட்டிற்கேற்ற கல்வி என்ற அடிப்படைகளில் மலையகத்திற்கான கல்விக்கூடங்களில் இதனை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடநெறிகளினூடே வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

இன்று மலையக பாடசாலைகள் பலவற்றிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பலகலைக்கழகங்களிலும் கூத்து நிகழ்வுகள் இடம் பெறுவதானது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் அவை வெறுமனே போட்டி நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் பயன்படுத்தும் நிலையினை மாற்றி ஒரு உயிரோட்டமுள்ள உளவியல் உணர்வு நிலையாகவும், எம்தேசத்தின் அடித்தளத்திற்கான ஆணிவேர் என்ற மனநிலையினையும் தோற்றுவித்து, இத்தகைய கூத்துக்களில் புதைந்திருக்கும் பாரம்பரியமான கல்வி முறையினை அடையாளம் காண்டு அதுவே எமது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை என்ற உணர்வினை ஊட்டி வளர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

மலையக மக்களின் விடிவில் ஊடகங்களின் பங்கு


சமூக அமைப்பு என்பது என்றுமே நிலையானதாக (static) இருந்ததில்லை. அவ்வாறு இருப்பதும் சாத்தியமில்லை. எனவே மாற்றமேற்படும் போது அதற்கு ஏற்ப விழுமியங்களும் மாற்றங் காணலாம். இதனையே சமூக முன்னேற்றம் என்கின்றோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய யுகத்தில் மிகத் தெளிவாகத் தெரிவது விஞ்ஞான முன்னேற்றம் என்பதே. ஆனால் அவ்வாறு கண்ணுக்குப் புலப்படாத பல காரணங்கள் உள்ளன. அவை யாவும் அகக் காரணங்களால் ஏற்பட்டவை எனலாம். மெய்ப்பொருள் கண்டதால் எற்பட்டவை என்றும் கூறலாம்.

இத்தகைய மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் (process) ஊடகங்கள் பலத்த சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான் ஊடக தர்மம் என்ற வடிவில் போதிக்கப்படுவதும் கடைப்பிடிக்கப்படுவதுமாகும். மாற்றங்களை உள்வாங்காத சமூகம் காலப்போக்கில் உருக்குலைந்து விடுகின்றது. ஆக, எத்தகைய மாற்றங்கள் உள்வாங்கப்படுவதற்கான தகுதியுடையன என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதிலும் அவர்களது கவனத்தை ஈர்ப்பதிலும் ஊடகங்களுக்கு தார்மீகக் கடமையுண்டு. இதற்கான விவாதக் களங்களை அவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

ஊடகங்கள் யதார்த்த நிலையில் காலூன்றி நிற்க வேண்டும். அதே நேரத்தில் செல்நெறிக்கான திசையினைக் கோடுகாட்டவும் வேண்டும். ஆக்குதல், அழித்தல் என்ற குறுகிய அரசியல் வட்டத்துக்குள் நின்று நான் இதனைப் பார்க்க விரும்பவில்லை. ஆக்கமும் அழிப்பும் வேண்டுமானால் பக்கவிளைவுகளாக எற்படக்கூடும். ஆனால் அதுவே ஊடகங்களின் தலையாய பணி என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஆயினும் சில ஊடகங்கள் இதனையே இன்று தலையாய பணியாகத் தலைமேல் கொண்டு நிற்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

சமூக முன்னேற்றமென்பது எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகர மாகச் சமாளிப்பதற்குத் தன்னகத்தே போதியளவுக்கு விதிமுறைக ளையும் அவற்றை மதித்தொழுகும் மனப்பாங்குடனான மக்களையும் கொண்டிருக்கும் போதே சாத்தியமாகின்றது. சவால்கள் ஏற்படும்போது தடுமாறிப் பின்னோக்கி நகர நிர்ப்பந்திக்கப்படுமாயின் அதன் நாகரீகமும் முன்னேற்றமும் அற்ப ஆயுளுடன் முடிவுக்கு வந்துவிடும். இப்படி முடிந்;து போன சமூகங்களின் வரலாறுகள் நிறையவே உள்ளன.



இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்படும்போது சமூகத்தைப் பின்னோக்கி நகரவிடாது தடுப்பதற்கு ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பின் காரணமாகவே வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் ஊடகங்கள் மிகப்பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டன.

260 வருடகால ஊடகங்களின் தோற்றத்தை நீதிக்கான மானிடத்தின் மேற்சொன்ன தேடலுடன் தொடர்புறுத்திப் பார்க்கலாம். தத்துவாசிரியரும் அரசியலறிஞருமான Edmund Burke (1729-1797) என்பவரே பத்திரிகையை நான்காவது தூண் (Fourth Estate)என்று முதன்முதலில் வர்ணித்திருந்தார்.

ஜனநாயக ஆட்சிமுறைமைகளில் உலகின் பல பகுதிகளிலும் ஊடகங்கள் இன்றியமையாத ஓர் அங்கமாக மாறிவிட்டன. அத்துடன் அரசுகள் ஊடகங்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு நேர்மறையான விதத்தில் உதவிட வேண்டும் என்பதும் கட்டாயமாயிற்று. இன்றைக்கு, சுதந்திர  ஊடகத்துறை என்பது ஜனநாயக நாடொன்றில் விருப்பத் தெரிவின் படியான ஆடம்பரமாக அன்றி அத்தியாவசியமான மூலகம் ஒன்றாகவே மிளிர்கின்றது.
எந்த ஒரு நாட்டினதும் நாடித்துடிப்பினைக் காட்டக்கூடிய சாதனமாக ஊடகங்கள் காணப் படுவது எழுத்தரிவுள்ளோர் ஏற்றுக் கொண்ட உண்மையாகும் எமது நாட்டிலும் ஊடகங்கள் தனது முகத்தை காலத்திற்கு காலம் வேறு வேறு விதமாக காட்டியுள்ளமை வரலாற்றில் பதியப் பட்டுள்ளது.

தமிழ் தேசியவாதம் தலை தூக்கியிருந்த காலக் கட்டத்தில் தமிழ் ஊடகங்களில் எத்தனை எத்தனை ஊடகங்கள் நடு நிலைமையாய் இருந்தன என்பது மாத்திரம் இன்றி சிங்கள இன வாதத்தினை தூண்டும் ஊடகங்களுக்கு சரி சமமாக தமிழ் ஊடகங்களும் தமிழ் தேசியவாதத்திற்கு ஊதுகுழலாய் இருந்தமை மறைக்க முடியாத உண்மையாகும். இன்று யுத்தத்தின் கொடூரங்களைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் தமிழ் ஊடகங்கள் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கும் பொருள் பன்பாட்டு கலாச்சார அழிவுகளுக்கும் தாங்களும் பங்கு தாரர்கள் என்பதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஊடகங்களும் ஊடக நிறுவனங்களும் அவரவர்களுக்கான தனிப்பட்ட நோக்கினையும் கொள்கையினையும் கொண்டிருந்தப் போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஊடகவியலாளர்கள் தங்கள் சமூகத்தை நேசிக்கின்றனர் என்பதற்கான பல சான்றாதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றது.
மலையகம்

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஊடக நிருவனங்கள் தங்களின் அரசியலை எவ்வாறு அரங்கேற்றினர் என்பதற்கான பதில் இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் ஊடக முகங்கள் எமக்கு காட்டி நிற்கின்றன.இதில் தமிழ் மொழி சார்ந்தவர்கள் மலையகத்தினை ஊன்று கோளாய் ஊன்றியே நிமிர்ந்தவர்களாகும்.மலையகத்தின் ரொட்டியும் சம்பலும்; தேர்தல் பிரச்சாரத்தின் அடையாளமாய் ஆனதுடன் எங்களின் கிளிந்த ஆடைகள் அவர்கள் அணியும் கோட்டும் சூட்டும் ஆகியது.மாவின் விலை ஏற்றம் அவர்களின் வார்த்தைக்கு வண்ணம் ஊட்டியதே ஒழிய அவர்கள் சார்ந்திருக்கும் தலைமைகளுக்கு சிறிய தூண்டலைக்கூட கொடுக்க வில்லை.இதில் இன்னும் ஒரு வேடிக்கை யாதெனில் இந்த ஊடக வியாபாரிகளின் பின்னால் சில ஆசிரிய பெரு மக்களும் சுற்றி திரிந்தனர் ஏன் என்று வினவிய போது எவ்வாராவது குறிப்பிட்ட ஊடகத்தின் பிராந்திய செய்தியாளராகி விட வேண்டும் என்று கூறினர் வெட்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது மலையகத்தில் கற்றவர்கள் அனைவருக்கும்.

மலையக மக்கள் இன்னும் முகவரி இல்லாதவர்களாகவும் 80 வீதமானவர்கள் லயங்களிலே வாழ்பவர்களாகவும் இந்த நூற்றாண்டின் மனித வளர்ச்சியினை எட்டாதவர்களாகவும் வாழ்வதனைக் காணக்கூடியதாய் உள்ளது.

மலையக மக்கள் பற்றி கதைக்காதவர்கள் யாரும் இல்லை ஏமாற்றப்படுகின்றார்கள் ஏய்க்கப் படுகின்றார்கள் தேர்தல் காலத்தின் போது விற்கப்படுகின்றார்கள. இவை அனைத்துமே பலராலும் பல காலமாக கதையாடி வரும் விடயமாகும் எதிர் கட்சியாக இருக்கும் போது ஆளும் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேடைகளில் மலையக மக்களின் கண்ணீர் துடைக்க தங்களால் மாத்திரமே முடியும் என்று முழக்கம் இட்டு விட்டு தாங்கள் ஆட்சியை பிடிப்பதற்காக யாரோடு கூட்டு சேர வேண்டும் என்பதனை தீர்மானிப்பதன் மூலம் மீண்டும் மலையக மக்கள் மரக்கப்பட்ட மனிதர்களாகி விடுவார்கள்.இதற்கு சமாந்தரமாக ஊடகங்களும் ஊடகவயளாலர்களும் ஏமாற்றுபர்கள் அரச யந்திரத்துக்குள் பங்கு தாரர்களானதன் காரணத்தினால் மலையக மக்களை மறந்து விட்டு மலைரயக மக்களை நசுக்கும் பாதங்களின் பயணங்களைப் புகழத் துவங்கி விடுவார்கள் இந்த இடத்தில் சற்று நிதானித்து சிந்திக்கும் இடத்து இந்த ஊடக உலகம் குறைந்த பட்சம் ஒடுக்கும் இந்த கால்களை எதிர்க்கும் சிறு சிறு சக்திகளின் குரல்களைக் கூட இருட்டடிப்பு செய்வது அனுபவத்தால் பட்ட பாடங்களாகும். தேர்தல் காலங்களாக இருக்கட்டும் தொழிலாளர் தினங்களாக இருக்கட்டும் மலையக மக்களை நசுக்குபவர்களுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் மலையக மக்களை ஆண்டாண்டு கால அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய முயற்சிப்பவர்கள் ஊடகங்களால் ஈரட்டடிப்பிற்குள்ளாக்கப் பட்டு விடுவார்கள்.

அன்மைக் காலமாக மலையகப் பிரதேசத்தில் தொலைக்காட்சி கலாச்சாரம் மிகவும் சீரழிந்த கலாச்சாரமாக மாரி வருகின்றது.எமது நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை மாத்திரம் வழங்குவதாக பெருமைப்பட முடியாவிட்டாளும் குறைந்த பட்சம் நாட்டின் செய்திகளாவது நேரம் தவராமல் பார்க்க உதவுகின்றது ஆனால் அட்டன் கொட்டகலை நோர்வுட் பொகவந்தலாவை தலவாக்கலை மஸ்கெலியா பன்டாரவலை அப்புத்தலை காவத்தை என எங்கெல்லாம தமிழ் மக்கள் செரிந்து வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு இலங்கையில் பூகம்பம் வந்தாளும் தெறிவதில்லை கேபல் டீவி மூலமும் டிஸ் என்டனாக்கள் மூலமும் சினேகாவினதும்; பிரசன்னாவினதும் திரு மணத்தினை பார்த்து கூப்பாடு போட்டவண்ணம் இருக்கின்றார்கள். மலையகத்தின் மிக முக்கிய தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இலங்கை செய்திகளை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பார்க்காது இந்திய தொலைக்காட்சிகளை பார்ப்பதற்கு உதவிகளையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது பலரும் அறிந்த விடயமாகும் இதற்கு காரணம் அவ்வப்போது சில அரசியல்வாதிகளின் முகத்திரைகள் விரும்பியோ விரும்பாமளோ கழட்டப்படுவதாகும். கூரைகளில் பூட்டப்பட்டுள்ள டிஸ் என்டனாக்களை காட்டி மலையக மக்கள் முன்னேரி விட்டார்கள் என்று கூறும் அரசியல் வாதிகளின் கபடத்தனங்கள் ஊடகங்களின் மூலமே அரங்கேற்றப்படுகின்றது என்பது பொய்யானதல்ல. மலையகத்தில் பல தோட்டங்களில் மலம் கழிப்பதற்கு மலசல கூடம் இல்லாவிட்டாளும் கலாச்சார அசிங்கங்களைக் காட்டும் டிஸ் என்டனாக்கள் பொருத்தப் பட்டு இருப்பது வெட்கித் தலைக் குனிய வைக்கும் விடயமாகும்.

ஊடகங்கள் தொடர்பாக நோக்கும் போது உலக ஊடக வரலாற்றில் அதிகமானவை வியாபார நோக்கத்தினை மைய்யப் படுத்தியவையாகும். ஊடகங்களுக்க மனிதர்களை சரியானப் பாதையில் வழிநடத்த வேண்டிய தலையாய பொருப்பு காணப்படுகின்றது. ஊடகத்துரையில் கடமையாற்றும் பலருக்கு தங்களின் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக வாழ வேண்டியது தொழில் பாதுகாப்பு காரணத்தால் கட்டாயமாகும் மலையக ஊடகவியலாளர்கள் வீடற்ற நாடற்ற தொழிலாளர்களின் இருப்பு தொடர்பாகவும் மாற்றம் தொடர்பாகவும் விடுதலைத் தொடர்பாகவும் பேச கடமைப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

மலையக சிறார்களின் கல்வி நிலை வீழ்ச்சிக்கு, முழு மலையக சமூகமே பொறுப்பு.....!


இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துவருகின்ற மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் சமூகத்தின் பல தளங்களிலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளமைக்கு கல்வி ரீதியான பின்னடைவும் ஒரு காரணம் என்பது பலரதும் கருத்து.

1940களில் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட முறையான இலவசக் கல்வித் திட்டத்துக்குள் மலையக தோட்டப்புறப் பாடசாலைகள் 30 ஆண்டுகள் கடந்து 1970களின் இறுதியில் தான் முழுமையாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.

தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் ஏற்பட்ட இந்த தாமதமே, கல்வித் துறையில் மலையக தமிழ் சமூகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்துவரக் காரணமாகியுள்ளது.

மலையகத்தின் தோட்டப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புறங்களின் உள்ள பெரும் வளங்கள் மிக்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுடன் போட்டியிட்டுதான் ஐந்தாம் தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தேற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் மலையக தமிழ் மாணவர்கள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளனர். கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. கல்வியும் அபிவிருத்தியும் ஒரு தராசைப் போல சமஅளவில் இருக்கும் போதுதான் அச்சமூகம் முழுமையான அபிவிருத்தி நோக்கிய பாதையில் பயணிக்கும். ஆனால் மலையகத்தைப் பொறுத்த வரையில் இவை எதுவும் முழுமையடையாத நிலையில்தான் காணப்படுகிறது. எதிர்காலம் குறித்த சிந்தனைகள் எதுவுமற்ற ஒரு சமூகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டச் சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பட வேண்டுமானால் எதிர்கால சமுதாயம் கல்வியில் கூடிய அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு பெற்றோர் தம்மை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை அவர்களின் இருப்பு குறித்த கேள்விக்கு மலையக அரசியல் தலைமைகளும் புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கல்வியில் மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற போதிலும் அவை ஒரு குறித்த வட்டத்திற்குள்ளேயே முடங்கியிருக்கிறது. படித்து பட்டம் பெற்றவர்கள் சமூகத்தில் பெரியவர்களாகி வசதி வாய்ப்புக்கள் வந்ததும் கடந்த காலங்களை மட்டுமல்ல தமது பெற்றோரைக் கூட மறந்து விடுகின்றனர். தமது கல்விக்காக பெற்றோர் பட்ட துயரங்களை மறந்தவர்களாக அற்பசொற்ப சுகபோகங்களுக்காக விலை போனவர்களும் கூட எமது சமூகத்தில்தான் இருக்கிறார்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்வியைத் தொடர்வதென்பது இயலாத விடயமாகவே இருக்கிறது. பெற்றோர் மத்தியில் போதிய அறிவின்மை, குடும்ப வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, மது பாவனை ஆகிய விடயங்கள் பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கையில் மேம்பாடடைய விடாமல் தடுப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளன.

ஆரம்பக் கல்விக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் க. பொ. த. சாதாரண தரத்துடன் அந்த எண்ணிக்கை குறைந்து விடுகிறது. அவ்வாறே சுய முயற்சியில் படிக்க முயலும் மாணவர்களுக்கு அந்தச் சூழல் இடங்கொடுப்பதில்லை. சிறு வயதிலேயே காதல் வயப்படுதல் தோட்டப் பகுதிகளில் சாதாரண விடயமாகும். சிறுவயது திருமணம், பால் நிலை மற்றும், பாலியல் தொடர்பான போதிய விழிப்புணர்வின்மையும் கல்வியைத் தொடர முடியாமைக்கு இன்னொரு காரணமாகும்.

குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைக்காக அனுப்பியதால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் அண்மையில் பதிவாகியுள்ளது. பெற்றோர் கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால் தம் பிள்ளைகளுக்கு சிறந்த வழியை காட்டி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு சிலர் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையையே சீரழித்து விட்டயுவதிகள் பலர்.

கல்வியை பாதியில் இடைநிறுத்தி விட்டு தலைநகர்ப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த யுவதிகள், ஹோட்டல்களில் எடுபிடிகளாக, நடைபாதை வியாபாரங்களில், கட்டட நிர்மாணப் பணிகளுக்கான உதவியாளர்களாக, சுத்திகரிப்பு தொழிலாளர்களாக, கூலிகளாக நாட்டாமைகளாக, காவல்காரர்களாக பலவித தொழில்களிலும் மலையகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருக்கிறார்கள். க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த பலரும் கூட இதில் அடங்குவதுதான் மிகவும் வேதனை தரும் விடயமாகும். நகர்ப்புறத்தில் தமது பிள்ளைகள் வேலை செய்வதையே பெரிய விடயமாக நினைக்கிறார்கள்.

தீபாவளி மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு வரும் பிள்ளை தலை மயிருக்கு வர்ணம் பூசிக் கொண்டும், காதில் அணிகலன்களை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு கையடக்க தொலைபேசியுடன் திரிவதைப் பார்த்து தோட்டத்தில் வேலையில்லாமல் திரியும் ஏனைய இளைஞர்களுக்கும் அந்த ஆசைகள் வந்து விடுகின்றன. பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களும் நகர்ப்புறங்களை நாடிச் செல்கின்றனர்.

சில பெற்றோர் தம் பிள்ளை பத்தாவது வரை படித்தால் போதும், அதுதான் உயர்கல்வி என பெருமையடைவதுடன் நின்று விடுகின்றனர். பத்தாவது வகுப்பு வரை படித்த தனது மகனை உச்சத்தில் வைத்து போற்றுவதும் அவன் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என நம்புவதும், பெற்றோரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு தம்மையே ஏமாற்றிக் கொள்ளும் பல இளைஞர்கள் சமூகத்தில் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பிற்காலத்தில் ஒரு குடிகாரனாக குடும்பத்திற்கு உதவாதவனாக மாறிவிடுகிறான்.

பெண் பிள்ளைகளின் கல்வியில் தாக்கம் ஏற்படுவதற்கு சுற்றுச் சூழல்களும் காரணமாகும். இன்றைய நவீன உலகில் ஆணும் பெண்ணும் பழகுவதை எவரும் காதல் என கூறிவிட முடியாது. தோட்டப் பகுதிகளில் ஆண் - பெண்ணுடன் கதைத்து விட்டாலோ சேர்ந்து வந்து விட்டாலோ அவர்களைப் பற்றி அவதூறாக பேசப்படுகின்றது. நன்கு படிக்கும் அந்த மாணவியின் கல்விற்கு, அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. சில காலம் வீட்டில் மடங்கியிருக்கும் அவள் நகர்ப்புறத்திற்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் அவளின் எதிர்காலமே வீணாகிவிடுகிறது.

மலையக சமூகத்திலிருந்து பிரிக்க முடியாததொரு அம்சம்தான் மதுபானம். மதுபானத்திற்கு அடிமையான பெற்றோரால் தம் பிள்ளைகளை படிக்க வைப்பது சிரமமான காரியமாகி விடுகிறது.

மலையக சமுதாயத்தில் கல்வி வீழ்ச்சிக்கு காதல் மட்டுமல்ல காரணம். இளவயது திருமணமும் பிரதான காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு வீட்டில் நான்கைந்து பிள்ளைகள் என்றால் குடும்ப பொருளாதார சூழ்நிலையில் அனைவரையும் படிக்க வைக்க முடியாமல் போய்விடுகிறது. பாடசாலைக்குச் செல்லும் காலப் பகுதியில் அவர்களுக்கு அறிவூட்டல்கள், வழிகாட்டல்கள் இல்லாமல் தொடர்ந்து அவர்கள் கற்பதற்கான வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. அதே நேரத்தில் படித்தவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கல்வியறிவற்ற பெற்றோர் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

மலையக எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை இப்போதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. இதற்கு மலையக பெற்றோரும் பாடசாலைக் கல்வியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கல்வி என்றும் அழியாச் செல்வமாகும். எதிர்காலம் என்றால் என்னவென்று தெரியாத பெற்றோர் தம் பிள்ளைகளை தேயிலைத் தோட்டமே தமது வாழ்க்கைக்கு இறைவன் கொடுத்த கொடையாகக் கருதும் நிலை மாற வேண்டும். அன்றாடம் தம் வயிறு நிரம்பினால் போதும் என நினைக்கும் பெற்றோர் தனக்கு அடுத்து தனது பிள்ளை அதே தோட்டத்தில் தொழிலாளியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பிள்ளைகளைப் படிக்க வைப்பதை பெரிய சுமையாக நினைப்பதும் குடும்ப பொருளாதாரம் ஈடுகொடுக்காது என நினைப்பதும் இன்றும் அவர்களிடம் இருக்கும் மூடத்தனத்தையே காட்டுகிறது.

இவ்வாறான நிலைமைகள் மாற மலையக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதனை மலையக புத்திஜீவிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள் மலையக சமூகம் கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றியமைக்க உறுதிபூண வேண்டும். படித்த சமூகம் எதிர்கால மலையக சமுதாயத்தை ஒரு விழிப்புணர்வுள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீரைக் கண்ட இடத்தில் கழுவி விடுபவர்களாகவே இருப்பவர்கள் என்ற நிலை மாற்றி ஆண் - பெண் சமநிலை தொடர்பான பாலியல் கல்வியையும் இரு பாலாருக்கும் வழங்க வேண்டும்.

மலையக மக்களின் கல்வி நிலை வீழ்ச்சியடையாது இருப்பதற்கு பெற்றோர், மாணவர், ஆசிரியர் மட்டுமன்றி முழு மலையக சமுதாயமுமே விழிப்புணர்வு பெற வேண்டும். இதனூடாகவே எதிர்காலத்தில் கல்விகற்ற ஒரு சமுதாயத்தினை உருவாக்க முடியும்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்து வரும் மலையகம்...!


மலையக பெருந்தோட்டங்களில் கல்வியின் செல்வாக்கு மந்த நிலையில் இருந்த காலத்தில் சில தோட்ட அதிகாரிகள், தொழிலாளர் பெருமக்களை பிரதிநிதித்துவம் வகிக்கும் முக்கியஸ்தர்கள், ஆசியர்களின் ஆலோசனைகளுடன் பள்ளிக்கூட கங்காணி என ஒருவரை நியமித்து, பாடசாலை நாட்களில் அவர் மக்களின் குடியிருப்புக்களுக்குச் சென்று பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வருவது வழக்கத்திலிருந்தது.

கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன. இதற்கு அந்தச் சமூகத்திலிருக்கும் கற்றறிந்தவர்களும், தலைவர்களும் கூட பலதருணங்களில் துணையாக நிற்பது கவலைக்குரியது.

மலையக மக்களின் கல்வியானது இதற்கு வெளிப்படையான சான்றாகக் கொள்ளத்தக்கது. 'தேசிய கல்வி முறைமையின் அமைப்புகளோடு ஒப்பிடும்போது மலையகக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

அக்காலத்தில் தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 5 வரையே பாடங்கள் நடை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.

நாளடைவில் தரம் 8 வரையும் முன்னிலை வகித்த பாடசாலைகளில் க.பொ.த. (சா.த), க.பொ.த உயர் வகுப்பு வரை இன்று நடைபெறுகிறது. இதேவேளை சில தோட்டப்புற பாடசாலைகளில் தரம் 6 இல் இருந்தே இடை விலகல் நடைபெறுகிறது. தரம் 7, 8, 9, 10 வரையும் மாணவர்களை கட்டுப்பாடுகளுக்கு கொண்டு வர முடிவதில்லை.

ஒரு சில பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால் பரீட்சைக்குத் தோற்றுவது 10 அல்லது 15 மாணவர்களே.

மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை நடுவில் விலகல் அதிகரித்த வண்ணமே உள்ளதாக கல்வித் திணைக்கள அறிக்கைகளும், கல்வி ஆய்வாளர்களின் கருத்துக்களில் இருந்தும் நாம் அறியக் கூடியதாகவுள்ளது.

இதேவேளை மலையகம் சார்ந்த பாடசாலைகளில் பெருமளவிலான மாணவர்களின் இடைவிலகல் தவிர்க்க முடியாத ஒன்றாக தொடர்கின்றது என மலையக கல்வி ஆய்வாளர்கள் கவலை தெவிக்கின்றனர். இந்நிலை தோன்றுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது பொருளாதார மேம்பாடு இல்லாமையே. இதன் மூலம் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற வர்த்தக ஸ்தாபனங்களுக்கு பெற்றோர் அனுப்பி விடுகின்றனர். பெண் பிள்ளைகள் வீட்டு பணிப் பெண்கள் என்ற நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் பிள்ளைகளின் ஊதியத்தில் குளிர் காய்வதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் கூறப்போனால் குடும்பத்தில் கட்டுப்பாடற்ற குழந்தை பெறுபேறுகள், குடும்பத்தின் செலவுக்கேற்ற வருமானமின்மை இன்றும் மலையக பெருந் தோட்ட மக்களை வருத்திவருவது நாட்டில் வாழும் அனைவரும் அறிந்த விடயம்.

மலையக பெருந்தோட்டங்களில் வசிப்போருக்கு இன்றைய சம்பள உயர்வின் மூலம் அவர்களுக்கு பொருளாதார கெடுபிடி இல்லை யென்றும், மதுவுக்கு அடிமையாவதே முக்கிய காரணம் என இன்று பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் எங்கும் பேசித் திரிவதை கேட்கக் கூடியதாக உள்ளது. எனினும் அதனை தீர்ப்பதற்கு முன் நிற்பதை காணக் கூடியதாக இல்லை என்பதை நினைக்கும் போது தான் கவலையாக உள்ளது.

மலையகத்தில் ஆண்பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னிற்கிறார்கள். இருப்பினும் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது பெண் பிள்ளைகளின் கல்வியே பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம், தாய்மார்களின் பிள்ளைப்பேறு, விருந்தினர் வருகை, திருவிழாக்களின் போது சம்மந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்ல அவர்கள் தடை செய்யப்படுகின்றனர். வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயாரோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமில்லாமல் இருக்கின்றது. 

குறிப்பாக பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும் சடங்கு சம்ரதாயம் என்ற பேரில் மூன்று நான்கு மாதங்கள் வீட்டில் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மூன்று மாதத்திற்கு மேல் வீட்டில் நிறுத்தி வைக்குமிடத்து அவர்கள் பாடசாலையை விட்டு இடைநிறுத்தப்படுகின்றனர். பருவமடைந்ததற்குப் பிறகு ஏனைய ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க விடமாட்டார்கள். இது போன்ற விடயங்களாலும் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு சிலர் இவ்வாறான சம்பிரதாயங்களை தேவையற்றதாக கருதுகின்றார்கள்.

இவர்களுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. சில கருத்தரங்குகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் இவ்வாறான உதவிகள் ஒரு சிலரை அல்லது ஒரு பிரதேசத்தையே சென்றடைகிறது. மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பிரதாயங்கள் ஊறிக்கிடந்தாலும் காலப்போக்கில் அவை மாறுபடக்கூடியவை தான். பிள்ளைகளுக்கான கல்வி எந்தளவு முக்கியம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தவரை படித்த சமூகம் அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.

சிறுவர்களை பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்கு குடும்பத்தை தவிர்ந்த இன்னுமொறு உலகம் இருப்பதை உணர்த்துவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பானவர்கள் எல்லோருடைய கடமையுமாகும். அவர்களது உரிமை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். சற்று சிந்தியுங்கள்.. அவர்களுக்கே உரித்தான கல்வியை வழங்குவதற்கு முழு சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.